Is it the mind that speaks? Is it the brain? 
வீடு / குடும்பம்

பேசுவது மனமா? மூளையா?

பாரதி

னதில் தோன்றுவதைப் பேசுவது தைரியத்தின் வெளிபாடுதான். ஆனால், மனதில் தோன்றிய அனைத்தையும் பேசுவது முட்டாள்தனம். வாயில் வருவதெல்லாம் பேசினால் எதிரே உள்ளவர்களுக்குச் சங்கடம். அதனைப் பிற்பாடு நினைத்து நாமும் கஷ்டப்படுவோம். பேசும்போது எப்போதும் மனது மட்டுமே பேசினால் பிரச்னைதான். மனம் மற்றும் மூளையின் வழிப்படி பேசுவதுதான் நல்லது.

ஒருவர் மனதில் பட்டதை மட்டும் பேசினால் கஷ்டம் மட்டும் ஏற்படாது; சில பெரிய இழப்புகளையும் காண நேரிடும். அப்படிப் பேசுபவருக்கு நெருக்கமானவர்கள், ‘அது அவருடைய குணம்’ என்று கூறிவிட்டு சென்றுவிடுவார்கள். அதுவும் சில காலம்தான். அதுவே தொடர்ந்தது என்றால் யாராலுமே தாங்கிக்கொள்ள முடியாது. கடுமையாகப் பேசிவிட்டு, அதை ‘உரிமை’ என்று நீங்கள் பெயரிட்டாலும் மற்றவர்கள் அதை ‘தவறான வார்த்தை’ என்றுதான் கூறுவார்கள். ஆகையால், எவ்வளவு நெருங்கிப் பழகியவர்கள் ஆனாலும் மூளையால் சிந்தித்து, மனதால் ஆலோசித்துப் பேசுவது உத்தமம்.

என்ன பேசுகிறோம்: முதலில் தவறான வார்த்தைகளை, எதிர்மறையான வார்த்தைகளைக் கைவிடுங்கள். நீங்கள் ஒருவரை முதல்முறை சந்திக்கும்பொழுது நீங்கள் பேசும் நேர்மறையான வார்த்தைகள் உங்கள் மதிப்பை அதிகரிக்கும். பிறகு எப்போது பார்த்தாலும் உங்களை ஒரு நல்ல மனிதனாகவே பார்ப்பார்கள். யாராவது துக்கத்தில் இருந்தாலும் நீங்கள் பேசும் நேர்மறை வார்த்தைகள் அவர்களை ஊக்குவிக்க உதவும். இதனால் உங்களுக்கென்று ஒரு நண்பர்கள் கூட்டமே உருவாகும். இது உங்களைத் தனிமை என்பதே அறியாமல் இருக்க உதவும்.

எந்த இடத்தில் பேசுகிறோம்: அதேபோல் எந்த இடத்தில் பேசுகிறோம் என்பது முக்கியமானது. உங்கள் வழிகாட்டுதலில் வேலைப் பார்க்கும் ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரைத் தனியாக அழைத்து அதனைக் கூற வேண்டும். அப்படி இல்லாமல் அனைவர் முன்னிலையிலும் திட்டினீர்கள் என்றால் அது அவர் செய்யும் வேலையையே பாதித்துவிடும். பிறகு அவர் வேலை பார்க்கும்பொழுதெல்லாம், ‘அவர் திட்டிவிடுவாரோ’ என்ற பயத்தில் வேலையில் கவனம் செலுத்தாமல் சொதப்ப ஆரம்பித்து விடுவார். ஆகையால், தனியாக அழைத்துப் பேசும் விதத்தில் பேசினால், பல நல்ல திறமை கொண்டவர்களும் சாதிக்க முடியும்.

பேசும் முறை என்ன: பேசுவதற்கென சில முறைகளும் உண்டு. ஒருவர் தவறு செய்துவிட்டார் என்பது அவருக்கும் தெரியும். அதனை விசாரிக்கத்தான் இப்போது நீங்கள் அழைத்துள்ளீர்கள் என்பதும் தெரியும். அதனால் ஏற்கெனவே அவர் பயத்துடன்தான் வந்திருப்பார். அப்போது நீங்கள் எடுத்தவுடனே தவறை சுட்டிக்காண்பிக்கும் விதமாக பேசினாலோ, காரசாரமான வார்த்தைகளை பேசுவதாலோ அவர் இன்னும் பயம்தான் கொள்வார். ஆகையால், அவர் எதனால் அந்தத் தவறை செய்தார், எப்படி அந்தத் தவறு நடந்தது, உண்மையில் என்ன நடந்தது. எப்படி அதை சரி செய்வது போன்றவற்றை சொல்வதற்கான தைரியம் அவருக்கு இல்லாமல் போய்விடும்.

ஒருவர் தவறு செய்தால் என்ன வழியில் சரி செய்யலாம் மற்றும் இனி அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்வது என்பதை அவரிடம் கலந்துரையாடவே நாம் அவரை அழைத்துப் பேச வேண்டும். அவரைக் கடுமையான சொற்களால் திட்டுவதால் எதுவுமே மாறாது. நமது தனிப்பட்ட கோபத்தை எந்த வழியிலும் சரி செய்துகொள்ளலாம். அவரைத் திட்டித்தான் சரி செய்ய வேண்டும் என்பதில்லை.

நாம் அனைவரிடமும் நன்றாகப் பழக வார்த்தைகளே துணை. அதனை எந்த நேரத்தில், எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டு வார்த்தைகளின் மதிப்பைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் உறவுகள் (வீட்டிலும் பணியிடத்திலும்) மேம்படும்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT