Is life only about money and success? 
வீடு / குடும்பம்

பணமும் வெற்றியும் மட்டும்தான் வாழ்க்கையா?

எஸ்.விஜயலட்சுமி

வ்வுலகில் வாழ  யாருக்கும் மிகத் தேவையான ஒரு பொருள் பணம். எல்லோருமே பணம் சம்பாதிக்கதான் தினமும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், பணம் மட்டுமே போதுமா ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்வதற்கு?

குழந்தைகளை சிறு வயதிலிருந்தே ‘நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போகணும். அப்பத்தான் நிறைய சம்பாதிக்க முடியும்’ என்று சொல்லித்தான் பெற்றோர்கள் வளர்க்கிறார்கள். அதை நோக்கியே அவர்களை திசை திருப்புகிறார்கள். எல்கேஜியில் ஆரம்பித்து, பிளஸ் டூ  வரையில் பிள்ளைகள் மார்க் எடுப்பதை மட்டுமே பெற்றோர்கள் முக்கியமாக நினைக்கிறார்கள். குழந்தைகள் மனதில் இந்த உலகில் வாழ்வதற்கு பணம் மட்டுமே போதும் என்ற எண்ணத்தை மிக அழுத்தமாக பெரியவர்கள் பதிய வைக்கிறார்கள்.

போன தலைமுறையில் அப்பா ஒருவர் சம்பாதித்து வீட்டில் மூன்று நான்கு குழந்தைகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து நிறைவாகத்தான் வாழ்ந்தார்கள். தற்போது இருக்கும் ஒற்றைப் பிள்ளைக்கு அப்பா, அம்மா இருவரும் வேலை பார்த்து சம்பாதித்து, பெரிய பள்ளியில் நிறைய பீஸ் கட்டி படிக்க வைத்து, பிள்ளையின் ஆசை அனைத்தையும் நிறைவேற்றத் துடிக்கும் பெற்றோர்கள் அதற்காக கடும் முயற்சி செய்கிறார்கள். அந்தப் பிள்ளைகளும் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

பணத்திற்கு அடுத்து அவர்கள் முக்கியத்துவம் தர நினைப்பது வெற்றிக்கு. பள்ளியில் நடத்தப்படும் போட்டிகள் தொடங்கி, தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் வரை பிள்ளைகள் தோற்றுப்போனால் அதிகம் கவலைப்படுவதும் உணர்ச்சிவசப்படுவதும் பிள்ளைகளை விட பெற்றோர்களே அதிகம். அவர்களைப் பார்த்து பிள்ளைகளும் வெற்றி பெற்றால்தான் மதிப்பு என்ற பாடத்தை கற்றுக் கொள்கின்றனர்.

பின்னாளில் ஏதாவது ஒரு விஷயத்தில் தோல்வி வரும்போது மனம் உடைந்து போகிறார்கள். சின்ன தோல்வியை கூட சில பிள்ளைகளால் தாங்க முடிவதில்லை. சிலர் தற்கொலை என்கிற விபரீத முடிவைக் கையில் எடுக்கின்றனர். வாழ்க்கையில் அத்தனை விஷயங்களிலும் வெற்றி என்பது சாத்தியமில்லை என்று தெரிந்தும், பிள்ளைகளுக்கு வெற்றி, தோல்வி சகஜம் என்று கற்றுத் தருவது பெரியவர்களின் கடமை அல்லவா?

‘நீ நல்ல குணங்களோடு வளர வேண்டும். நல்லவனாக இருக்க வேண்டும். பிறருக்கு உதவா விட்டால் கூட, கெடுதல் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்கிற விஷயத்தை சொல்லித் தருவதுதானே முறை? இல்லை. பணம், வெற்றி இரண்டையும் விட மகிழ்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பெற்றோருக்குப் புரியும்போது அவர்களுக்கு 60, 70 வயது ஆகிவிடுகிறது. அதற்குப் பின்னால் அவர்கள் இதை எடுத்துச் சொல்லி எந்தப் பயனும் இல்லை.

வாழ்க்கையில் பணம் குறைவாக உள்ளவர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். கூலி வேலை செய்பவர்களும் குறைவாக சம்பாதிப்பவர்களும் சந்தோஷத்தோடு பாடல் கேட்டுக் கொண்டு தங்கள் வேலையைச் செய்கிறார்கள். மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஒரு ஐடி இளைஞனால் அதே சந்தோஷத்தை அனுபவிக்க முடிவதில்லை. சந்தோஷத்தை தேடி அவர்கள் வெளியில்தான் அலைகிறார்கள். பெரிய மால்கள், லாங் டிரைவ், பார்ட்டிகள் என்று வெளிப்புற சந்தோஷத்தை மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள். உள்ளிருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் உணர்வதே இல்லை. அதனால்தான் எத்தனை பணம் சம்பாதித்தபோதும், வெற்றிகளைக் குவித்தபோதும் மனம் திருப்தியடையாமல் இன்னும் இன்னும் என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தன்னுள்ளே பரிபூரணமாக நிறைந்திருக்கும் மகிழ்ச்சியின் சுவடை அவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அவர்கள் பெற்றோரால் சிறுவயதில் இருந்தே கற்பிக்கப் படவேண்டும்.

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

SCROLL FOR NEXT