நீங்கள் இந்தக் கல்வியாண்டில் உங்களது செல்லக் குழந்தைகளை முதன் முதலில் பிளே ஸ்கூலுக்கு அனுப்பப் போகிறீர்கள் என்றால், உங்கள் மனதில் இனம் புரியாத கவலையோடு கூடிய சந்தோஷம் இருக்கும் என்பது உண்மைதான். அந்தக் கவலையோடு கூடிய சந்தோஷத்தோடு, சில விஷயங்களையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் இரண்டு வயதிலேயே பிளே ஸ்கூலில் சேர்க்கப்படுகிறார்கள். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள். அவர்களை அந்தப் புதிய சூழலுக்கு ஏற்றவாறு ஈடுகொடுத்து இருக்க அதுபற்றி முன்னரே சொல்லிக்கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பள்ளிகள் வெகு தொலைவில் இல்லாதவாறு வீட்டுக்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்வது பெற்றோர், குழந்தைகள் இருவருக்குமே நல்லது.
பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அவர்களை உங்களின் நண்பர்கள் வீடு அல்லது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சில மணி நேரமாவது அவர்களை அந்த புதிய சூழல்களில் பழக்குவது அவசியம்.
முக்கியமாக, அவர்களுக்கு டாய்லெட் போகும் பழக்கத்தையும், யூரின் அல்லது டாய்லெட் வந்தால் தயங்காமல் வாய் திறந்து சொல்லவும் பழக்குவது மிகவும் அவசியம்.
பசித்தால் தானே சாப்பிடப் பழக்குவதும், மூக்கு ஒழுகினால் கைகுட்டை கொண்டு தானே துடைத்துக்கொள்ள பழக்குவதும், சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை கழுவுவது அவசியம் போன்ற பழக்கங்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பே வீட்டிலேயே கற்றுக் கொடுத்து பழக்க வேண்டும்.
பிளே ஸ்கூலிலும், கேஜி வகுப்புகளிலும் குழந்தைகளை மதிய நேரங்களில் சிறிது நேரம் உறங்க வைப்பார்கள். எனவே, பள்ளி செல்வதற்கு முன்பு வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்க வைத்துப் பழக்கப்படுத்துவது நல்லது.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மனப்பாடமாக சொல்ல பழக்கி வைப்பது மிகவும் நல்லதாகும்.
ஆரம்பத்தில் குழந்தைகள் பள்ளி செல்ல அடம்பிடித்து அழுவது இயற்கைதான். குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் மெதுவாக தன்மையுடன் எடுத்துக் கூறி பள்ளிக்கு அனுப்புவது சிறந்தது. அதுவே மாதங்களைக் கடந்தும் அவர்கள் அழுகையை நிறுத்தாமல் பள்ளிக்குச் செல்ல அடம்பிடித்தால் என்ன பிரச்னை என்பதை முதலில் குழந்தைகளிடமும் பிறகு பள்ளி தரப்பிடமும் விசாரிப்பது அவசியம். அத்துடன் பிளே ஸ்கூல் செல்லும் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்த வயதில்தான் குழந்தைகள் சாக்பீஸ், பல்பம் போன்ற பொருட்களை கடிப்பதும், சாப்பிடுவதுமாக இருப்பார்கள். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்ய முயல வேண்டும்.
சில குழந்தைகள் யாரைப் பார்த்தாலும் அடிப்பது, கையில் உள்ளதை தூக்கி எறிவது என்று மூர்க்கமாக இருப்பார்கள். இதனை பெற்றோர்கள் நீதி கதைகள் மூலமும், இப்படிச் செய்தால் சுவாமி கண்ணை குத்தும், பிரண்ட்ஸ் யாரும் கிடைக்க மாட்டார்கள் என்று சொல்லி நல்வழிப்படுத்தலாம்.
சில குழந்தைகள் அருகில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளின் ஸ்லேட், பல்பம், பென்சில் போன்றவற்றை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு புரியும்படி சொல்வது பெற்றோரின் கடமை. ‘சின்ன பிள்ளைதானே சரியாகிவிடும்’ என்று எண்ணாமல், ‘நாளை முதல் வேலையாக இதை எடுத்த பையனிடமே கொடுத்துவிடு. அப்போதுதான் நீ குட் பாய் / கேர்ள் என்று சொல்வதும், தேவைப்பட்டால் கண்டிப்பு காட்டுவதும் தவறல்ல.
முக்கியமாக, சிறு வயதிலிருந்தே அவர்கள் பெரியவர்களை, ஆசிரியர்களை மதிக்கவும், மரியாதையுடன் இருக்கவும் கற்றுக்கொடுப்பது மிக மிக அவசியம். ஒழுக்கத்துடன் (டிசிப்ளின்) சேர்ந்த படிப்பு நிச்சயம் வாழ்வில் உயர்வைத்தான் தரும்.