It is enough to do these things for the women of the family to have peace of mind
It is enough to do these things for the women of the family to have peace of mind https://tamil.boldsky.com
வீடு / குடும்பம்

குடும்பப் பெண்கள் மன நிம்மதியுடன் இருக்க இவற்றைச் செய்தாலே போதும்!

பொ.பாலாஜிகணேஷ்

பெண்கள் என்றாலே சவால்களின் மறு உருவம் எனலாம். ஆசையாய் படிக்கும் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தாலும், திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது வேலையைத் தொடர முடியாத நிலை ஏற்படும். வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை நிர்வகிப்பது என்பது அனைவருக்கும் நிச்சயம் சவாலான விஷயம்தான். முறையாக நம்மை நாம் நிர்வகித்தாலே வேலை மற்றும் சொந்த வாழ்க்கையில் சமநிலையுடன் இருக்க முடியும். இனி, தொழில் மற்றும் வாழ்க்கையில் பிரச்னை இல்லாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நேர மேலாண்மை முக்கியமான ஒன்று. காலையில் எப்போது எழ வேண்டும்? வேலைகளை எந்தெந்த நேரத்தில் செய்ய வேண்டும்? என்பது பற்றி நீங்கள் திட்டமிட வேண்டும். குறிப்பாக உங்களது தேவைகள் மற்றும் பொருத்தத்திற்கு ஏற்ப உங்களின் செயல்பாடுகளைத் திட்டமிடுவது, நிச்சயம் உங்களது வாழ்க்கையை எளிதாக்கும். நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரத்தில் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும்போது சொந்த வாழ்க்கையிலும், வேலையிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் விஷயங்களை அட்டவணைப்படுத்திக்கொள்ள வேண்டும். திட்டுமிட்டு நீங்கள் ஒவ்வொரு விஷயங்களையும் மேற்கொள்ளும்போது உங்களின் நேரம் மிச்சமாகும். மேலும், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலையில் நீங்கள் எடுத்துச்செல்ல முடியும்.

எந்தவொரு வேலையையும் வேண்டாம் என்று தள்ளிப்போடக்கூடாது. ஏற்கெனவே என்ன வேலை செய்யப்போகிறோம் என அட்டவணைப்படுத்தியுள்ளீர்கள் அல்லவா? அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. எனவே, அன்றைக்கு உள்ள வேலைகளை நீங்கள் அன்றைக்கே செய்துவிட வேண்டும். கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்றால், அதுவே பழக்கமாகிவிடும். இதனால் எந்த வேலையும் உங்களால் செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். எனவே, உங்களது இலக்கை நீங்கள் எட்டும் வரை போராட வேண்டும். இவ்வாறு நீங்கள் குறிப்பிட்ட பணியை சரியான நேரத்தில் செய்து முடித்தவுடன் நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வதன் மூலம் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். எனவே, தயங்காமல் உங்களது வேலையைச் செய்யத் தொடங்கினால் உங்களது மூளை அதற்கேற்ப மாறிக்கொள்ளும்.

வீட்டு வேலையோ? அல்லது அலுவலக வேலையோ? எதுவாக இருந்தாலும் கவனச்சிதறல்கள் இருந்தால் எதையும் முறையாக செய்து முடிக்க முடியாது. இன்றைக்கு உள்ள சூழலில் கவனச்சிதறல்களுக்கு முக்கிய காரணமாக அமைவது மொபைல் போன் மற்றும் கணினிதான். எனவே, நீங்கள் வேலை செய்யும்போது உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் அறிவிப்புகளை அணைப்பதன் மூலம் அதிக உற்பத்தித்திறன் மற்றும் நேரத்தை நிர்வகிக்க முடியும். மேலும், ஒரு பணி முடியும் வரை உங்கள் மொபைலை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கான பணிகளை நீங்கள் முறையாக செய்து முடிக்க முடியும்.

உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலைப்படுத்துவதற்கு நீங்கள் எல்லைகளை உருவாக்க வேண்டும். நீங்கள் எல்லைகளை உருவாக்குவதன் மூலம் வேலை, வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று வருவதைக் கட்டுப்படுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வேலையில் ஈடுபட வேண்டாம் என்று நீங்கள் தேர்வு செய்ய முடியும். மேலும், உங்கள் குடும்பத்தினரிடமும் அன்புக்குரியவர்களிடமும் அவசர காலம் வரை வேலை செய்யும்போது குறுக்கிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது பணியை உரிய நேரத்தில் முடிப்பதற்கு உதவியாக இருக்கும். இருந்தபோதும் சொந்த வாழ்க்கையில் பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும் என்றால்,வாரத்தில் ஒரு நாளையாவது உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ எந்தவிதமான கவனச்சிதறல்களும் இல்லாமல் செலவிட முயற்சி செய்யுங்கள்.

இதுபோன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலே தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் எவ்வித பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை என்பதோடு பெண்கள் மன நிம்மதியோடு வாழ்க்கையில் பயணிக்க முடியும்.

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT