வீடு / குடும்பம்

காரடையான் நோன்பு சாவித்திரி பெற்ற வரம்!

ரேவதி பாலு

"உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நோற்றேன்.  ஒருக்காலும் என் கணவர் பிரியாமல் இருக்கணும்!" என்று சொல்லி மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் 'காரடையான் நோன்பு' நோற்று சரடு கட்டிக்கொள்வது  தமிழகத்தில் பழக்கம்.  இதற்குக் காரணமாக அமைந்த புராணக்கதை சிவபுராணத்தில் உள்ளது.  இதை பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது மார்க்கண்டேய முனிவர் திரௌபதிக்கு எடுத்துரைக் கிறார்.  எமனால் பறிக்கப்பட்ட தன் கணவன் சத்தியவானின் உயிரை, அவன் மனைவி சாவித்திரி அவனிடமிருந்து மீட்டு வருவதே கதையின் சாராம்சம்.

நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன் தன் மனைவி, மகன் சத்தியவானுடன் காட்டில் வாழ்ந்துகொண்டிருந்தார். அவருக்கும் அவர் மனைவிக்கும் கண் பார்வையும் போய்விடுகிறது.  மந்திர நாட்டு மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி, தான் மணமுடிக்க ஏற்ற இளவரசனைத் தேடி சத்தியவான் தங்கியிருந்த காட்டுப் பகுதிக்கு வந்தாள்.  சத்தியவானைக் கண்டதும் தன் இதயத்தை அவனிடம் பறி கொடுத்தாள்.  மணந்தால் சத்தியவானைத்தான் மணப்பேன் என்று தன் தந்தையிடம் கூறும்போது அந்த நேரத்தில் அங்கு வந்த நாரதர், "இன்றிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள் சத்தியவான் இறந்து விடுவான்" என்று கூறுகிறார்.  ஆனால், சாவித்திரி திடமான மனதுடன், தான் மனதில் வரித்த சத்தியவானையே மணந்துகொண்டு காட்டிலேயே வசித்து வருகிறாள்.

சத்தியவான் இறப்பு பற்றிய ரகசியத்தை அவனிடம் பகிர்ந்துகொள்ளாத சாவித்திரி அவன் இறக்கும் நாள் நெருங்கி விட்டதை அறிந்து அவன் எங்கு சென்றாலும் அவனுடனேயே செல்கிறாள்.  அவன் தன் கண் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துகொண்டு அதே சமயத்தில் அவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி இறைவனை பிரார்த்திக்கொண்டும் இருக்கிறாள்.

ஒருநாள்,  விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற சத்தியவான் சாவித்திரியின் மடி மீது தலை வைத்து உயிர் துறந்தான்.  சத்தியவானின் உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர் களால் பதிவிரதையான சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்க முடியவில்லை.  அதனால் எமதர் மராஜாவே அந்த உயிரை எடுத்துச் செல்ல வர வேண்டியதாயிற்று.

தன் கணவனின் உயிரை எடுத்துக்கொண்டு சென்ற எமதர்மராஜனை ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்த சாவித்திரி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சத்தியவான் உயிரை திருப்பிக் கொடுத்து விடுமாறு கண்ணீருடன் வேண்டுகிறாள். ஆனால், எமதர்மராஜா, "உயிர் போவது என்பது விதி.  ஆகவே அந்தக் காரியத்தை செய்வதே எனது தர்மம், கடமை" என்று பதிலுரைக்கிறார்.

சாவித்திரி விடாமல் பிடிவாதமாக அவரைப் பின் தொடரவே அவள் மேல் இரக்கம் கொண்ட எமதர்மராஜா அவளுக்கு ஒரு வரம் கொடுப்பதாகச் சொல்கிறார். ஆனால், சாமர்த்தியமாக, "இறந்தவனின் உயிரைத் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் கேள்!" என்கிறார்.

உடனே சாவித்திரி, "எனக்கு நூறு பிள்ளைகள் பிறந்து அவர்கள் என் மாமனாரின் தேசத்தை ஆள்வதை என் கணவனின் பெற்றோர் தன் கண்களால் பார்க்க வேண்டும்!" என்கிறாள்

இந்த இடத்தில் தான் சாவித்திரி என்னும் பெண்மணியின் புத்திசாலித்தனம், சாமர்த்தியம், சமயோஜித புத்தி எல்லாவற்றையும் நாம் பார்க்கிறோம். இழந்த தேசத்தை தன் மாமனார் திரும்பிப் பெறவும், அவர்கள் கண் பார்வை மீண்டும் கிடைக்கவும், தான் கணவருடன் வாழ்ந்து நூறு பிள்ளைகள் பெறவும் ஒரே வரத்தில் கேட்டுப் பெறுகிறாள்.  நிச்சயம் தன்னால் தன் கணவனின் உயிரை மீட்க முடியும் என்னும் நம்பிக்கையை, அவளுள் உறையும்  நேர்மறை சக்தி அவளுக்குக் கொடுக்கிறது.

அவளின் விடாமுயற்சியும் பதிவிரதத்தன்மையும் எமதர்மராஜனின் மனதை இளகச் செய்ய, அவ்வாறே வரம் கொடுத்து சத்தியவானின் உயிரை திரும்பக் கொடுக்கிறார். மனமகிழ்ந்த சாவித்திரி இறைவனுக்கு நன்றி தெரிவித்து ஒரு நோன்பு நோற்கிறாள். கார்காலத்தில் விளையும் அரிசியில் அடை செய்து நோன்பு நோற்றதால் இந்த நோன்புக்கு காரடையான் நோன்பு என்று பெயர் வந்தது.

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் இந்த நிகழ்வு ஏற்பட்டதால், வருடந்தோறும் அந்த நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் நோன்பு நோற்று என்றென்றும் தன் கணவரோடு சேர்ந்து வாழ வேண்டிக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது.  இந்த வருடம் மாசியும் பங்குனியும் கூடும் நேரம் 15.03.23 (புதன்கிழமை) அதிகாலை 05.00 மணி என்பதால், அந்த நேரத்தில் சுமங்கிலிப் பெண்கள் நோன்பு நோற்று சரடு கட்டிக்கொள்வார்கள்.

நோன்பு நூற்கும் முறை!

பூஜை செய்யும் இடத்தை வழக்கம் போல நல்ல முறையில் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட வேண்டும். வாழை இலையை வைத்து அந்த இலையில் நுனியில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மற்றும் மஞ்சள் சரடு இவற்றை வைக்க வேண்டும். பருப்பு அடை தயார் செய்து படைக்க வேண்டும். அந்த அடையை இரண்டு விதமாக செய்வார்கள். ஒன்று இனிப்பு சேர்த்த வெள்ளை அடையாக தயாரிப்பார்கள் இனிப்பு சேர்க்காமல் காரடை யாகவும் தயாரிப்பார்கள். காரடையான் நோன்பின் கார் அரிசிமாவும் காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து அதை வேக வைப்பார்கள். அதுதான் பிரசாதமாக படைக்கப்படும். வைக்கோல் போட்டு அதன் மேல் தட்டு வைத்து அடையை வேக வைப்பார்கள். நோன்பு சரட்டில் மஞ்சள் கிழங்கு மற்றும் புஷ்பத்தை இணைக்க வேண்டும் இலையில் வெண்ணையும் வைக்க வேண்டும்.

கயிறு கட்டும்போது:

தோரம் கிருஷ்ணாமி சுபகே!

ஸஹாரி த்ரம் தராமி அஹம்!

பார்த்து: ஆயுஷ்ய  ஸித்யர்த்தம்!

ஸூப்ரீதா பவ ஸர்வதா!

ஓரடையும் உருகாத வெண்ணையும் நான் படைத்தேன்

ஒரு நாளும் என் கணவனை பிரியாமல் இருக்க வரம் அருள்வாய்! என்று கூறி மஞ்சள் சரடை கழுத்தில் அணிந்து கொள்வர். மூத்த சுமங்கலிகள் மூலம் மற்றவர்கள் அணிந்துகொள்வார்கள்.

பசுக்களுக்கு இந்த அடையைச் சாப்பிட கொடுப்பது அவசியம். அப்போதுதான் நோன்பு முழுமை பெறும். 

- ஆர் ஜெயலட்சுமி, திருநெல்வேலி

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுதான்: மாஸாக வெளியான டைட்டில்!

முழுக்க முழுக்க பனி கட்டியால் கட்டப்பட்ட ஹோட்டல் எங்குள்ளது தெரியுமா?

சிறுகதை - மண்ணில் தெரிகிற வானம்!

வசூலில் மீண்டும் சம்பவம் செய்திருக்கும் சுந்தர் சி.யின் ‘அரண்மனை 4’ திரைப்படம்!

அனுபவம் கற்றுத் தருவது எதை தெரியுமா?

SCROLL FOR NEXT