ஒருவர் நன்றாக உடை அணிந்தால் மட்டும் போதாது. அவருடைய உடல் மொழி என்று அழைக்கப்படும் பாடி லாங்குவேஜ் அழகாக இருந்தால் மட்டுமே அவர் வசீகரமாகத் தோற்றமளிக்க முடியும். நாம் வாயால் பேசும் வார்த்தைகளை விட 55 சதவீதம் உடல் மொழிகளுக்கு தனி இடம் உண்டு. அதை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. நேராக நிமிர்ந்து நடத்தல்: ஒருவர் தலையை குனிந்து கொண்டு முதுகை வளைத்தபடி தரையைப் பார்த்து நடந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அவர் முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். ஷூக்களைப் பார்த்து நடக்காமல் பாதையைப் பார்த்து நடக்க வேண்டும். தோள் பட்டைகளை விறைப்பாக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்ஸாக வைக்க வேண்டும். நடக்கும்போது தோள்பட்டைகளின் அசைவிற்கேற்ப கைகளை இருபுறமும் வீசி நடக்க வேண்டும்.
2. உண்ணும் விதம்: உணவு மேஜையின் மேல் முழங்கைகளை ஊன்றி வைத்துக்கொண்டு உண்ணக்கூடாது. இது நிறைய பேர் செய்யும் தவறு. பார்ப்பதற்கு மிகவும் அநாகரிகமாக இருக்கும். சில நாடுகளில் இது பிறரை அவமானப்படுத்துவதாகக் கருதப்படும். எனவே, உணவு உண்ணும்போது முழங்கைகளை டேபிளில் வைத்து ஊன்றாமல் இருந்தால் பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும்.
3. கைகளால் மட்டுமே கதவை திறக்க வேண்டும்: சிலர் காலால் கதவை திறக்க முயற்சி செய்வார்கள். இது பார்ப்பதற்கு அநாகரிகமாகவும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தும். இரண்டு கைகளிலும் பொருட்கள் வைத்து இருந்தாலும் மெதுவாக கைகளால் கதவை திறக்க முயற்சி செய்ய வேண்டும். அல்லது அருகில் இருப்பவர்களை கதவைத் திறக்க சொல்லலாம். காலால் கதவை திறப்பது ஒரு முரட்டுத்தனமான செயலாகும்.
4. கூன் போடாமல் அமர வேண்டும்: நாற்காலியில் அமரும்போது முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். இது பார்ப்பதற்கு அழகாகவும் வசீகரமாகவும் இருக்கும். அதோடு, உங்கள் மேல் பிறருக்கு மரியாதையையும் ஏற்படுத்தும்.
5. பிரதிபலித்தல்: ஒரு குழுவாக அமர்ந்து ஏதாவது விவாதித்துக் கொண்டிருக்கும் போது பிறருடைய மேனரிசங்களை, பேசும் முறை, கைகளை அசைக்கும் முறை போன்றவற்றை பிரதிபலிக்கும் வண்ணம் நாமும் அதேபோல செய்ய வேண்டும். உதாரணமாக, சிலர் முகத்தை புன்சிரிப்புடன் வைத்துக் கொண்டு பேசுவார்கள். ஒப்புதலை தலையாட்டி தெரிவிப்பார்கள் இவற்றை நாமும் செய்தால் அந்த குழுவில் மிக விரைவில் நண்பர்களாகி விடுவோம்.
6. மிகவும் நெருங்கி நிற்கக்கூடாது: நின்று கொண்டு பேசும்போது அருகில் நிற்பவரிடம் நெருங்கி நிற்கக்கூடாது. நமது மூச்சுக்காற்று அல்லது கை கால்கள் அவர் மேல் படுமாறு நிற்பது நாகரிகம் அல்ல. எனவே, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்று பேச வேண்டும். இந்த இடைவெளி ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். ரோம் போன்ற நாடுகளில் புதியவர்களிடம் நின்று பேசும் போது 4.6 அடி இடைவெளி விட்டு நின்று பேசுவார்கள் அர்ஜென்டினாவில் இரண்டு புள்ளி ஐந்து அடி இடைவெளி இருக்கும். அமெரிக்காவில் 3.1 அடி இடைவெளி இருக்கும்.
7. கைகுலுக்கும்முறை: கைகுலுக்கும்போது அது வசீகரமானதாக இருக்க வேண்டும். ஒருவரின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாமல் சரியானபடி கைகுலுக்க வேண்டும். ஒருவருடன் பேச ஆரம்பிக்கும் முன்பே கை குலுக்கும் முறையே நீங்கள் யார் என்று அவருக்குத் தெரியப்படுத்தி விடும். அதிலேயே ஒருவருடைய தன்னம்பிக்கை, பிறர் மேல் வைத்திருக்கும் மரியாதை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விடலாம்.
8. பேசும் விதம்: பிறருடன் பேசும்போது கண்களைப் பார்த்து பேச வேண்டும். ஆனால், அதற்காக அடிக்கடி அல்லது கண்களை முகத்திலிருந்து எடுக்காமல் பேசுவதும் தவறு. அவ்வப்போது பார்வையை விலக்கி வேறுபுறம் பார்த்துவிட்டு எதிரில் நிற்பவரின் கண்களைப் பார்த்து பேசலாம். இது ஒருவிதமான மரியாதை, தன்னம்பிக்கை மற்றும் நேர்மையை வெளிப்படுத்துகிறது.