பட்டாம்பூச்சி அணைப்பு
Butterfly hug https://aspirecounselingmo.com
வீடு / குடும்பம்

பட்டாம்பூச்சி அணைப்பின் செய்முறையும் பயன்களும் பற்றி தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அடிக்கடி மன அழுத்தம், மனப் பதற்றம், கவலை, வருத்தம், படபடப்பு போன்ற நிலைகளுக்கு ஆளாகிறோம். பட்டாம்பூச்சி அணைப்பு (Butterfly hug) என்கிற டெக்னிக்கை தனக்குத்தானே ஒருவர் பயிற்சி செய்யும்போது டென்ஷனும் மனப்பதற்றமும் அவரை விட்டு விலகி விடும். அதை எப்படிச் செய்வது, அதனால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பட்டாம்பூச்சி அணைப்பு - செய்முறை: பட்டாம்பூச்சி அணைப்பு லூசினா ஆர்டிகாஸ் மற்றும் இக்னாசியோ ஜரேரோ என்ற இரண்டு பயிற்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. 1998ல் மெக்சிகோவில் பவுலின் சூறாவளியிலிருந்து தப்பியவர்களுக்கு பட்டாம்பூச்சி அணைப்பு கற்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் மனப்பதற்றம் வெகுவாகக் குறைந்தது.

இந்தப் பயிற்சி முறை மிகவும் எளிமையானது. தனக்குத்தானே ஒருவர் இந்தப் பயிற்சியை செய்யலாம். பிறர் உதவி தேவையில்லை. அமைதியான இடத்தில் தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ளவும். சுவாசம் சீராக இருக்க வேண்டும். முதுகுத் தண்டு நேராக இருக்க வேண்டும்.

இரண்டு கைகளையும், உள்ளங்கைகள் நெஞ்சில் படுமாறு கழுத்துக்கு கீழே குறுக்கே வைக்கவும். இடது கையின் விரல்கள் வலது பக்க காலர் எலும்பின் கீழும், வலது கை விரல்கள் இடது எலும்பின் கீழும் இருக்குமாறு வைக்க வேண்டும். கைகளின் நடு விரல் நுனி காலர் எலும்பைத் தொடுமாறும், மற்ற கைவிரல்கள் செங்குத்தாகவும் இருக்க வேண்டும். இரு கட்டைவிரல்களையும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்கவும். இது ஒரு பட்டாம்பூச்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். பின்பு கண்களை மூடிக்கொண்டு மெதுவான சீரான சுவாசத்தில் அப்படியே விரல்களை பட்டாம்பூச்சி தனது சிறகுகளை படபடப்பது போல மெதுவாக கழுத்தில் தட்ட வேண்டும். இடதுபுறம் ஒரு தட்டு, பின் வலது புறம் ஒரு தட்டு என்று சீரான லயத்தில், எட்டு முறை மெதுவாகத் தட்ட வேண்டும்.

பின் மூச்சை சீராக இழுத்து விட்டுக் கொள்ளவும். 30 வினாடிகளுக்குப் பின் மீண்டும் தட்டுவதைத் தொடரவும். மூன்று நிமிடங்கள் வரை இதைச் செய்யலாம். மெதுவாக மனதில் இருந்து பதற்றம், கவலை, அழுத்தம் எல்லாமும் விலகுவதை உணர முடியும்.

பயன்கள்:

1. பட்டாம்பூச்சி அணைப்பு செய்வதற்கு வேறொருவருடைய உதவியை நாட வேண்டியது இல்லை. தனக்குத்தானே ஒருவர் இதை செய்துகொள்ள முடியும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் செய்யலாம் என்பது இதனுடைய கூடுதல் நன்மையாகும்.

2. பயிற்சி செய்து முடித்ததும் மனதில் இருக்கும் பீதி அல்லது பதற்றம் குறைவதை ஒருவர் நன்கு உணர முடியும்.

3. மனம் முழுக்க ஒருவித நிதானமும் அமைதியும் பரவுவதை உணர முடியும். மனம் ஒரு பறவை போல லேசாவதை உணர முடியும். சில நிமிடங்களுக்குப் பிறகு மனம் உள்ளார்ந்த அமைதியில் ஈடுபடும். மனதில் இருந்து குழப்பம் விலகி, ஒரு தெளிவு உண்டாவதைக் கண்கூடாகக் காணலாம்.

தினமும் இந்தப் பயிற்சியை சில நிமிடங்கள் செய்து வந்தால், எல்லா நேரமும் மனம் டென்ஷன், பதற்றம் இன்றி நாள் முழுக்க உற்சாகத்துடன் பணியாற்ற முடியும்.

குளிர்ந்த நீரில் தினமும் குளிப்பதால் உண்டாகும் 7 நன்மைகள் தெரியுமா?

திடீரென உலகில் தொழில்நுட்பம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? 

செயற்கை நுண்ணறிவு- வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுமா?

இறுதி வரை வரப்போவது யார்?

சிறுகதை - 10 தடவை சொல்லியாச்சு!

SCROLL FOR NEXT