Elder abuse https://theconversation.com
வீடு / குடும்பம்

முதியோர் துஷ்பிரயோகத்தின் 7 வகைகள் தெரியுமா?

(ஜூன் 15, உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்)

எஸ்.விஜயலட்சுமி

லக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. முதியோர் துஷ்பிரயோகம் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான வயதானவர்களின் உடல் நலம் மற்றும் மனித உரிமைகளைப் பாதிக்கும் உலகளாவிய சமூகப் பிரச்னையாகும். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

முதியவர்கள் தங்கள் வயது காரணமாக நோய்களுக்கு ஆளாகி சிரமப்படுவதுடன் சில வகையான துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகின்றனர். அவர்களது குடும்பத்தினர் அல்லது முதியோர் இல்ல ஊழியர்கள் போன்ற நம்பகமான நபர்களால் இத்தகைய துஷ்பிரயோகங்கள் செய்யப்படுகின்றன.

முதியவர்கள் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்கள் முதியோர் துஷ்பிரயோக வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது முக்கியம்.

முதியோர் துஷ்பிரயோகத்தின் 7 வகைகள்: புறக்கணிப்பு, சுய புறக்கணிப்பு, கைவிடுதல், உணர்ச்சி அல்லது உளவியல் துஷ்பிரயோகம், உடல் முறைகேடு, பாலியல் துஷ்பிரயோகம், நிதி துஷ்பிரயோகம் போன்ற அனைத்து வகையான முதியோர் துஷ்பிரயோகம் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான தீங்கு மற்றும் மரணம் உட்பட அழிவுகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

1. புறக்கணிப்பு: வயதான காலத்தில் பெற்றோரையோ அல்லது குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களையோ புறக்கணிப்பது சில குடும்பங்களில் நடக்கிறது. அதேபோல முதியோர் இல்லங்களில் சரியான கவனிப்பு இல்லாமல் முதியவர்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இதனால் முதியவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு, உணவு பற்றாக்குறை, தேவையான மருத்துவ வசதி இல்லாமல் இருப்பது, தூய்மையற்ற இடத்தில் வசிப்பது, அசுத்தமான ஆடைகள், சிகிச்சை அளிக்கப்படாது தொற்றுகள் அல்லது காயங்களோடு வாழ நேரிடுகிறது.

2. சுய புறக்கணிப்பு: சில முதியவர்கள் தங்களைத் தாங்களே சுய புறக்கணிப்பு செய்து கொள்கிறார்கள். சரியாக உண்ணாமல், உடுத்திக் கொள்ளாமல், வீட்டை சரியாக பராமரிக்காமல், நோய்க்கு மாத்திரை சாப்பிடாமல், காயத்திற்கு மருந்திடாமல் இருக்கிறார்கள்.

3. முதியவர்களை கைவிடுதல்: இன்னும் சிலர் முதியவர்களை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல். அவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் கைவிட்டு விடுகிறார்கள். அவர்களை வீட்டை விட்டு வெளியே துரத்துவது அல்லது முறையான பராமரிப்பு வசதி இல்லாத முதியோர் இல்லங்களில் சேர்ப்பது போன்றவை நடக்கிறது.

4. உடல் முறைகேடு: முதியவர்களை அடித்து துன்புறுத்துவது, உடலில் வெட்டுக்கள், காயங்கள் அல்லது கீறல்கள் உண்டாக்கி, எலும்புகளை உடைப்பது போன்ற உடல் ரீதியான துன்பங்களைத் தருதல்.

5. உணர்ச்சி / உளவியல் துஷ்பிரயோகம்: பெரியவர்களை இழிவுபடுத்தி திட்டுதல், அச்சுறுத்தல், கடிந்து கொள்ளுதல் போன்ற செயல்களால் அவர்களுக்கு மனச்சோர்வு, பயம், தனிமைப்படுத்தப்படுதல் நடத்தை மற்றும் ஆளுமையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். இவை பல வகையான உளவியல் ரீதியான மாற்றங்களை முதியோர் மனதில் ஏற்படுத்தும்.

6. பாலியல் துஷ்பிரயோகம்: வயதானவர்களைக் கடத்தி அவர்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் தருவது, மன உளைச்சலையும், உளவியல் ரீதியான சிக்கல்களையும் உண்டாக்கும்.

7. நிதி துஷ்பிரயோகம்: பெற்றோர்களின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, ஏமாற்றி அவர்கள் பணத்தை அபகரித்துக் கொள்வது, நெருங்கிய உறவினர்களை ஏமாற்றி பணத்தை அபகரித்துக் கொள்வது போன்றவை நிதி துஷ்பிரயோகங்கள் ஆகும்.

வயதான காலத்தில் பெற்றோரையும் உற்ற உறவினர்களையும் தகுந்த முறையில் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். தெரிந்த யாராவது முதியவர் ஆபத்தில் இருப்பதாக, முதியோர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி இருந்தால் காவல்துறை அல்லது 915ஐ அழைத்து புகார் தரலாம்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT