தனிமையில் வசிக்கும் தாய் https://tamil.krishijagran.com
வீடு / குடும்பம்

கொடிது கொடிது முதுமையில் தனிமை!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

விஞர் நா.முத்துக்குமார் ஒரு பாடலில் வாழ்வியலை மிக அழகாகச் சொல்லி இருப்பார், ‘பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்’ என்று. அப்படி கூட்டுக் குடும்பம் போல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்கள்தான் நம்முடைய மக்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பதால் நிறைய பேர் கிராமங்களில் இருந்தும் நகரங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

கிராமங்களில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் தங்களின் பெற்றோரை சொந்த கிராமத்திலேயே விட்டுச் செல்கின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்களும், மக்களும் அவசர ஆபத்திற்கு அவர்களுக்கு உதவவும் செய்கின்றனர். ஆனால், பெருநகரங்களில் தனியாக விடப்படும் பெற்றோர்களின் நிலைதான் மிகவும் பரிதாபமாக உள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக வசிக்கும் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பேசுவதற்கோ, அவசர ஆபத்திற்கு உதவுவதற்கோ இவர்களுக்கு யாரும் துணை நிற்பதில்லை. தனிமையில் இருக்கும் முதியோர்கள் தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்துக்கு ஆளாகிறார்கள்.

வெளிநாடுகளுக்கோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கு முறையான பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். பெரும்பாலான பிள்ளைகள் வேலைப்பளுவின் காரணமாக தங்கள் பெற்றோர்களுடன் தொடர்பில்லாமல் இருந்து விடுகிறார்கள். இதுவும் அந்த முதியவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி விடுகிறது.

பெரும்பாலான வயதானவர்களுக்கு முதுமையின் காரணமாக பயம் வந்து விடுகிறது. அத்துடன் வயது முதிர்ச்சியின் காரணமாக நடையில் தள்ளாட்டம் ஏற்படுவதால் எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்கின்ற பயமும் சேர்ந்து கொண்டு இவர்கள் தனியாக வெளியில் செல்வதைத் தவிர்க்கிறார்கள். தனிமை, வெளி ஆட்களுடன் பழகுவதில் தயக்கம், பயம், உடல் நல பாதிப்பு, மனச்சோர்வு, மனக்குழப்பம் காரணமாக இவர்கள் உடலளவிலும், மனதளவிலும் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். வயதானவர்களை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் ஞாபக மறதி. நேரத்திற்கு சாப்பிடாமல், ஒவ்வொரு வேளையும் சாப்பிட வேண்டிய மாத்திரைகளையும் மறந்து விடுவதால் இவர்களின் உடல் நிலை மோசமாகிறது.

இதற்கு என்ன செய்யலாம்?

1. தனிமையில் விடப்படும் பெற்றோர்களை பிள்ளைகள் வெகு தொலைவில் இருந்தாலும் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும். தினமும் ஒரு முறையாவது போனில் அல்லது வீடியோ காலில் அழைத்துப் பேச வேண்டியது அவசியம்.

2. பொங்கல், தீபாவளி, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு ஊருக்கு வந்து பெற்றோருடன் சிறிதளவாவது நேரத்தை செலவழிக்க வேண்டும்.

3. பொருளாதார ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

4. வயது முதிர்ச்சியின் காரணமாக அவர்களால் சமைக்க முடியவில்லை என்றால் அதற்கான ஏற்பாடுகளை பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்தே ஏற்பாடு செய்யும் வசதி உள்ளது. ஆன்லைன் மூலம் இங்கு உள்ளவர்களுடன் பேசி தினம் உணவுகளை டெலிவரி செய்யவும் முடியும்.

5. அடுக்குமாடி குடியிருப்புகளில் விட்டுச் செல்வதானால் அக்கம் பக்கம் உள்ள மனிதர்களிடம் பேசி தனது பெற்றோரை அவ்வப்பொழுது சிறிது கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம்.

6. அவசர உதவிக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், நம்பகமான ஆட்டோ டிரைவரின் போன் நம்பர் ஆகியவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்து அவர்களுக்குக் கொடுக்கலாம்.

7. வீட்டுக்கே வந்து மருத்துவம் செய்யும் பல மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை நியமித்து வாரம் ஒரு முறை பெற்றோரை கவனித்துக்கொள்ளச் சொல்லலாம்.

8. நண்பர்கள், உறவினர்களிடம் நேரம் கிடைக்கும் பொழுது தனியாக இருக்கும் தனது பெற்றோர்களைப் பார்த்து விட்டு வரச் சொல்லிக் கேட்கலாம்.

9. எல்லாவற்றையும் விட முக்கியமானது நாம் எங்கு சென்றாலும் வயதான நம் பெற்றோர்களையும் உடன் அழைத்துச் செல்வதே சிறந்தது. வயதானால் அவர்களும் குழந்தையைப் போல் ஆகிவிடுவார்கள். எனவே, அவர்களை வயதான காலத்தில் சிரமப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை.

10. ‘அப்பனுக்கு இட்ட கப்பரை ஆழங்காலில் கவிழ்திருக்கு’ என்பார்கள். வயதான பெற்றோரை நாம் எப்படி பேணுகிறோம் என்பதைப் பார்த்து நம் பிள்ளைகளும் வருங்காலத்தில் நம்மை பார்த்துக்கொள்ள கற்றுக் கொள்வார்கள்.

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

SCROLL FOR NEXT