உங்களிடம், ‘நீல யானையை பற்றி யோசிக்காதீங்க’ன்னு சொன்னதும் என்ன பண்ணுவீங்க? நீல நிறத்தில் யானையில்லை என்றாலும் அதை பற்றியெல்லாம் நமக்கு கவலையில்லை. நம்முடைய மனது நீல நிறத்தில் யானையை உருவாக்கி அதை பற்றி உடனே யோசிக்கும்.
இது மனிதர்களுடைய ரிவர்ஸ் சைக்காலஜியாகும். எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதை உடனே செய்துவிடும் நம் மனம். அதனால் நம் மனதிற்கு நெகட்டிவாக எதையுமே சொல்லாமல் இருப்பது நல்லது.
ஒரு குழந்தையிடம், ‘நெருப்பை தொடாதே’ என்று சொன்னால், அந்தக் குழந்தை உடனேயே நெருப்பை தொட முயற்சிக்கும். நெகட்டிவான பேச்சு ஒரு க்யூரியாசிட்டியை தூண்டி விடுகிறது. அதனால்தான் காதல் தோல்விக்குப் பிறகு காதலித்தவரை மறந்து விட வேண்டும், வெறுத்துவிட வேண்டும் என்று நினைக்கும்போது அதற்கு எதிர்மறையாகவே நடக்கிறது. அந்த நபரை மறக்க முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. எனவே, நம் மனதிற்கு நாம்தான் சொல்லித் தர வேண்டும்.
‘இந்த விஷயத்தை செய்யாதே’ என்று சொல்லும்போது, ‘அதில் என்ன இருக்கிறது, அதை செய்தால் என்ன ஆகும்’ என்ற கேள்விகள் எழும். அது இன்னும் அந்த விஷயத்தை பற்றி அதிகம் சிந்திக்க வைக்கும். அதை செய்தால்தான் என்ன என்ற ஆர்வத்தை தூண்டிவிடும்.
இதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னவென்றால், நம்மை அடிக்கடி நெகட்டிவாகவே யோசிக்க வைக்கும். Depression, anxiety போன்றவற்றை உருவாக்கிவிடும். இதுபோன்ற எண்ணங்கள் நம்மை நம்முடைய இலக்கை நோக்கி பயணிக்க விடாமல் கவனச்சிதறல்களை ஏற்படுத்தும்.
நாம், நம்முடைய இலக்கிலோ அல்லது வேலையிலோ கவனமாக இல்லாமல் கவனச்சிதறல் ஏற்படும்போது மோசமான முடிவுகளையே எடுக்கவேண்டிய நிலை ஏற்படும். இது கண்டிப்பாக நம் வெற்றியை பாதிக்கும்.
இதை சரி செய்வதற்கான வழிகள், நெகட்டிவ் எண்ணங்களை பாசிட்டிவாக மாற்றிக்கொள்வது. உதாரணத்திற்கு, என்னால் முடியாது என்று சொல்வதை மாற்றி, ‘நான் அடுத்த முறை நன்றாக செயல்படுவேன்’ என்பது போல பாசிட்டிவ் எண்ணங்களை மனதில் விதைப்பதாகும். கவனச்சிதறல் ஏற்படும்போது அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது நல்லது. ஓவியம் வரைவது, நண்பர்களுடன் பேசுவது போன்று செய்வதால் நெகட்டிவான கவனச்சிதறல்களைத் தவிர்க்கலாம்.
ஒரு விஷயத்தை மறக்க நினைக்கும்போது அது மேலும் நினைவுக்கு வந்து தொல்லை கொடுக்கும். அது நம்முடைய எமோஷன், கவனம், முடிவெடுக்கும் தன்மை போன்றவற்றை பாதிக்கும். அதற்கு பதில் நம் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும்போது அது நெகட்டிவ் எண்ணங்களை குறைத்துவிடும் என்பதே உண்மையாகும். முயற்சித்துப் பாருங்கள்!