Parents with child 
வீடு / குடும்பம்

ரவாகேசரி - பாதுஷா... கற்றுத் தந்த பாடம்!

பிரபு சங்கர்

என் நாலாவது வயதில் அப்பா, அம்மாவுடன் உறவினர் வீட்டிற்குப் போயிருந்தேன். ரவாகேசரி கொடுத்தார்கள். அடி பிடித்துவிட்டது போலிருக்கிறது, தீய்ந்த வாசனை வந்தது. அப்போதுதான் முதன்முறையாக ரவாகேசரியைச் சந்திக்கிறேன். ஆனால் அதன் வாடையால் எனக்கு அது பிடிக்கவில்லை.

சில மாதங்கள் கழித்து இன்னொரு ரவாகேசரியை என் அப்பாவின் நண்பர் வீட்டில் சந்தித்தேன். இதுவும் தீய்ந்து போயிருக்குமோ, நன்றாக இருக்காதோ என்ற சந்தேகம். வேண்டாம் என்று மறுத்து விட்டேன்.

வீட்டிலும் ரவாகேசரி செய்வதில்லை என்பதால் அதன் சுவை எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் போயிற்று. அப்பாவுக்கு, ரவையை, உப்பு, காரத்துடன் உப்புமாவாக சாப்பிடத்தான் பிடிக்கும். ஆகவே ரவாகேசரி எங்கள் வீட்டிற்குள் நுழையாமலேயே இருந்தது.

நாலைந்து வருடங்களுக்குப் பிறகு அமர்க்களமான ஒரு திருமணம். காலை சிற்றுண்டியில் ரவாகேசரி! அட, இதுதான் எவ்வளவு வித்தியாசமாக, பார்வையிலேயே ருசியைத் தூண்டுகிறதே! நெய் மற்றும் அன்னாசி பழ வாசனை கமகமவென்று, என் மூக்கை ஆக்கிரமித்துக் கொண்டன. முந்திரியும், திராட்சையும் ஆங்காங்கே முழித்துக் கொண்டிருக்க, மினுமினுவென்ற அதன் மேற்பரப்பு... அப்படியே அள்ளி வாயில் அடைத்துக் கொள்ளத் துடித்தது.

பரிமாறுபவர் என் இலைக்கு நேராக வந்தபோது, “வேண்டாம், அவனுக்குப் ரவா கேசரி பிடிக்காது, வேஸ்டாகும்...” இடது பக்கத்திலிருந்து அம்மா குரல் கொடுத்தாள்.

“அப்படியா? சரி,‘‘ என்ற பரிமாறுபவர், அடுத்த இலைகளை கவனிக்கப் போய்விட்டார்.

“இல்லை, எனக்குப் பிடிக்கும்; போடுங்கள்...” என்று கத்துவதா, அம்மா பேச்சுக்கு மரியாதை அளிப்பதா? இரண்டாவதே சரியாகப்பட்டது. வாய் திறக்கவில்லை. எட்டு வயசு ஆதங்கத்தால் கண்களில் லேசாக நீர்.

அதற்குப் பிறகு, எந்த வீட்டில் ரவாகேசரி கொடுத்து உபசரித்தாலும், தான்மட்டும் எடுத்துக் கொண்டு, அது எனக்குப் பிடிக்காது என்று அம்மா ‘பெருமை’யுடன் சொல்வதும், அந்தப் பெருமையை நான் அசட்டுச் சிரிப்புடன் ஆமோதிப்பதும்...

பாட்டி பேத்திக்காக பாதுஷா பண்ணிக் கொண்டு வந்தாள். நானும் என் மனைவியும் அதை விண்டு வாயில் போட்டவர்கள், துப்ப முடியாமல் தவித்தோம். அதற்கு வயது இரண்டு மாதங்களாவது ஆகியிருக்கும். பாட்டி கொடுத்ததை ஆசையுடன் வாங்கி கடித்த என் பெண், “ஐயே...” என்று எங்களுக்குமாகச் சேர்த்துச் சொல்லி, பாதுஷாவைத் தூக்கியெறிந்தாள். பாதுஷாவை முதல் முறையாகத் தொடும் அந்த நான்கு வயது யு.கே.ஜிக்கு எதையும் வெளிப்படையாகத் தெரிவித்து விடும் சுபாவம்.

எங்கள் அலுவலகத்தில் ஏதோ விழா கொண்டாடி ஒரு பொட்டலம் இனிப்புக் கொடுத்தார்கள். அதில் பாதுஷாவும் ஓர் ஐட்டம். ஆபீஸிலிருந்து வந்த என் கையிலிருந்து பொட்டலத்தைப் பறித்த என் பெண், கலர் கலராக இருந்த பால் இனிப்புகளிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டாள். பாதுஷாவைத் தொடவில்லை.

“இந்தா, பாதுஷா!” என்றேன்.

“நீயே தின்னு” என்றாள் அவள்.

“அவளுக்கு பாதுஷாவே பிடிக்கலே” என்றாள் மனைவி.

என் நண்பர் குழந்தையின் முதலாண்டு நிறைவு விழாவிற்குப் போயிருந்தோம். சாப்பாட்டில், ஒரு ஐட்டம் பாதுஷா! ஒண்ணாங் கிளாஸ் படிக்கும் மகளுக்கும் ஓர் இலை. எதிர்வரிசையில் நண்பர் பரிமாறிக் கொண்டு போன பாதுஷாவைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகள்.

லேசான ப்ரவுன் நிறத்தில் சிறிய மெதுவடை போன்ற பொம்மலுடன், மேலே சர்க்கரைத் தகடு பரவியிருக்க, தலையில் கிரீடம் வைத்தாற்போல பாதி உடைத்து வறுத்த முந்திரி பருப்பு...

மகள் கண்களில் ஒளி, சற்றே திறந்திருந்த வாய்க்குள் எச்சில் ஊறுவது தெரிந்தது....

நண்பர் எங்கள் வரிசையில், மகள் அருகே வந்தபோது மனைவி எதையோ சொல்ல ஆரம்பித்தாள். நான் முந்திக் கொண்டேன். “இவளுக்கு இரண்டாகப் போடுங்க மணி, அவளுக்கு இந்த மாதிரி பாதுஷா ரொம்பப் பிடிக்கும்...”

அடேயப்பா! மலர்ந்த அந்த முகத்தில், பளிச்சிட்ட சின்னக் கண்களில்தான் எத்தனை பெரிய நன்றி!

ஆரம்பத்தில் தனக்கு ஓர் அபிப்ராயம் தோன்றிவிட்டாலும் மற்றவர்களுக்காக, குறிப்பாகப் பெரியவர்களுக்காக, அதை மாற்றிக் கொள்ளவோ அல்லது அவர்களுடைய கருத்துடன் அனுசரித்துப் போகவோ செய்யும் குணம், பல குழந்தைகளின் நியாயமான இள வயது ஆசைகளைத் தீய்த்து விடுகின்றன. அவர்களின் ருசியை விசாரித்து அறிந்து கொள்வோம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT