திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது சில சமயம் ஆங்காங்கே வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்கள் அதிலே சொல்லப்பட்டிருக்கும். ஆனால், அதை அப்போது நாம் கவனித்திருக்க மாட்டோம். பிறகு மறுபடியும் கூர்ந்து கவனிக்கும்போது அதன் அர்த்தம் புரியும். இப்படிப் பல படங்களில் வரும் காட்சிகளை காணும்போது நினைத்ததுண்டு.
அப்படி ஒரு காட்சியை பற்றித்தான் இந்தப் பதிவில் காணப்போகிறோம். படத்தில் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. அவனுக்குக் காலப்பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டு. அதைப் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பான். ஆனால், வழக்கம்போல அவனைச் சுற்றி உள்ளவர்களுக்கு காலப்பயணத்தில் நம்பிக்கையில்லை என்று கூறி, கதாநாயகனை கிண்டல் செய்வார்கள். இருப்பினும் கதாநாயகன் தனது முயற்சியை கைவிடமாட்டான்.
இதற்கு நடுவில் கதாநாயகன் ஒரு பெண்ணை காதலிப்பான். அந்தப் பெண்ணுடனே நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துவிடும். இப்படி கதாநாயகனின் வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டிருக்கும். ஒரு நாள் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கதாநாயகன் வெளியே செல்ல, அவனின் காதலி மட்டும் தனியாக வீட்டில் இருப்பாள். அப்போது அந்த வீட்டிற்கு வந்த திருடன் ஒருவன் அப்பெண்ணை தவறுதலாக கொன்றுவிடுவான். இதனால் மிகவும் மனமுடைந்துபோன கதாநாயகன், எப்படியாவது காலப்பயணம் செய்து தனது காதலியை காப்பாற்ற வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைப்பான். ஒருவழியாக டைம் மிஷினையும் உருவாக்கி விடுவான்.
இப்போது அதை எடுத்துக்கொண்டு நேராக காதலியை சந்திக்கச் செல்வான். அந்தத் திருடன் வந்து காதலியை கொலை செய்யும் தருணத்திற்கு முன்பு சென்று அவளை வெளியே அழைத்துச் சென்று விடுவான். எப்படியோ காதலியை காப்பாற்றி விட்டோம் என்று கதாநாயகன் மகிழ்ச்சியாக இருப்பான்.
அவனது மகிழ்ச்சி ஒரு நொடி கூட நிலைக்காது. அதற்குள் அவன் காதலியை ஒரு கார் வேகமாக வந்து இடித்துவிட, அவள் அங்கேயே உயிர் இழந்து விடுவாள். இப்போதுதான் கதாநாயகனுக்கு புரியவரும், ‘நம் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை மாற்ற முடியாது. அப்படி நடப்பதற்கு ஏதோ ஒரு காரண, காரணம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் அடைந்த கஷ்டங்கள், நஷ்டங்கள், இன்னல்கள், துன்பங்கள்தானே நம்மை இப்போது இருக்கும் பக்குவத்திற்கு மாற்றியுள்ளது. ஒருவேளை நம் வாழ்க்கையில் எந்தக் கஷ்டமும், துயரமும் அடையாமல் இருந்திருந்தால் இன்று இருப்பது போல எதையும் தாங்கும் மனபலம் கிடைத்திருக்காதல்லவா?’என்று.
ஒருமுறையாவது நாம் நினைத்திருப்போம், ‘எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைத்தால், நான் என் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான தருணத்தை காலத்தில் பின்னோக்கி சென்று மாற்றிவிடுவேன்’ என்று எண்ணியிருப்போம். எனினும் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்தான் நம்மை மாற்றுவதாகும். கடினமான பாதைகள்தான் நாம் எப்படிப் பயணிக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. எனவே, நடந்து முடிந்ததை மாற்றினால் நலமாக வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தை விடுத்து, வலியே நம்மை வலிமையாக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.