மனிதர்கள் பலவிதமான உணர்வுகளை உள்ளடக்கியவர்கள். அதில் சோகம், மகிழ்ச்சி, துக்கம், கோபம், பேரானந்தம் ஆகியவை அடங்கும். இதை, அவ்வப்போது நாம் உணரவில்லை என்றால் கண்டிப்பாக நாம் பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்வோம். ஆனால், ஒருசிலருக்கு, சும்மாவே அளவுக்கு மீறி கோபம் வரும். கோபம் வரும்போது மனதிற்குள் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சிலவற்றைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கோபம் தணிக்கும் மந்திரம்: ‘இதுவும் கடந்து போகும்’ என்ற மந்திரத்தை அனைத்து நேரங்களிலும் உபயோகப்படுத்தி, மேலும், ‘நான் அமைதியான மனிதன். என் மனதிற்குள் அமைதி நிலவுகிறது’ என்பதை மனதிற்குள் அடிக்கடி சொல்லிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. மூச்சுப் பயிற்சி: கோபம் வருவது போல் தோன்றிய உடனே நாம் மூச்சுப் பயிற்சி செய்ய ஆரம்பித்து விட வேண்டும். மூச்சுப் பயிற்சி நமது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி, அளவுக்கு அதிகமாக இருக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி விடும்.
3. பத்து வரை எண்ண வேண்டும்: கோபம் வரும்போது, 1 முதல் 10 வரை எண்ண ஆரம்பித்து கோபம் குறையும் வரை இதைத் தொடர வேண்டும். இந்த அமைதி நமது மூளை கோபத்தில் செயல்படுவதைத் தவிர்க்கும். மேலும், கோபமான சமயங்களில் கோபத்தை விடுத்து யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.
4. நினைவாற்றல் பயிற்சி: அதிகமாக கோபம் வரும்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்னவாக இருக்கிறோம் என்பதனை யோசித்துப் பார்க்க வேண்டும். இது, நமக்கு பொறுமையாக ரியாக்ட் செய்ய உதவும்.
5. உங்கள் சூழலை மாற்றவும்: ஒரே மாதிரியான சூழலில், ஒரே மாதிரியான மனிதர்கள் நம்மை எப்படிக் கோபப்படுத்துகிறார்கள் என்பதனைத் தெரிந்து கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட வேண்டும். மேலும், அந்த சூழ்நிலையை விட்டு வேறு இடத்திற்கு செல்வது, கோபத்திற்கு காரணமான நபரிடம் இருந்து விலகி இருப்பது நமது மனநிலையை சரி செய்வதற்கு உதவும்.
6. உடலுக்கு வேலை: கோபம் அதிகம் வரும் சமயத்தில் வெளியில் வேகமாக நடப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது போன்றவை கோபத்தைக் குறைக்க உதவும். கோபத்தில் இருக்கும்போது உடலில் இருக்கும் டென்ஷனை குறைக்க, வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யலாம்.
7. ரிலாக்ஸாக வழிகள்: கோபப்படும்போது, நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய நமக்கு மகிழ்ச்சி தரும் இடங்களை நினைத்துப் பார்ப்பதோடு, நமக்கு பிடித்தமானவர்கள் குறித்தும் நினைத்துப் பார்க்கலாம். மேலும், சிறிது கண்களை மூடி நமக்குப் பிடித்த இடத்திற்கு சென்று விட்டதை போல உணர்ந்து கொண்டால் சற்று ரிலாக்ஸ் ஆக முடியும்.
8. தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள், பிரச்னைகளில் அல்ல: கோபத்தைப் பற்றி யோசிப்பதற்கு பதிலாக கோபத்தை தீர்ப்பதற்கான தீர்மானத்தைக் கண்டுபிடிப்பதில் கவனத்தைச் செலுத்தினால் நிலைமை மேம்பட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற கோபம் இல்லாமல் தவிர்க்கவும் உதவும்.
இந்த 8 விஷயங்களை கடைப்பிடித்தாலே கோபம் பறந்தோடிவிடும்.