நிற்காமல் சுழன்று கொண்டிருக்கும் மனித வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணி அன்பு என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் இந்த வாழ்க்கை நமக்கு உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் நாம் மற்றவர் மீது செலுத்தும் அன்பும், நம் மீது மற்றவர் செலுத்தும் அன்புமே. அந்த அன்பை மனதில் அடக்கி வைத்துக் கொள்வதை தாண்டி உரிய நேரங்களில் வெளிப்படுத்துவதன் மூலமே நமக்கும் மற்றவர்களுக்குமான உறவு பாலத்தை நம்மால் வலுப்படுத்திக் கொள்ள முடியும். ஒரு மனிதன் சக மனிதனிடம் அன்பை வெளிப்படுத்துவதற்கு ஆடம்பரமான வசதிகளோ, இயல்புக்கு மாறான செயல்பாடுகளோ தேவையில்லை. நம்முடைய இயல்பு எதுவோ அதிலிருந்து நம் அன்பை வெளிப்படுத்தினாலே போதும். அதனை எப்படி வெளிப்படுத்தலாம் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நாள் குரு ஒருவர் பல ஆண்டுகள் கழித்து தன்னிடம் பயின்ற மாணவர்களை சந்திப்பதற்காக ஊர் ஊராக சென்று கொண்டிருந்தார். அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலரும் பல்வேறு பணிகளில் இருந்தார்கள். முதலாவதாக ஒரு மாணவரை பார்க்க சென்றார். அந்த மாணவர் அரசாங்க பணியில் பெரிய பதவியில் இருந்தார்.தன் குருவை கண்டதும் தன்னுடைய வேலையாட்களை அழைத்து பல்வேறு பொருட்களை வரவவைத்து மிகவும் ஆடம்பரமாக வரவேற்றார். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி, அவற்றை விதவிதமாக சமைத்து பல்வேறு பரிசளிப்புகளுடன் அவருக்கு விருந்தளித்து வணங்கி மகிழ்ந்தார். அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட குரு தன் நடைப் பயணத்தை தொடங்கினார்.
அப்பொழுது போகும் வழியில் ஒரு காட்டுப்பாதை வழியாக செல்ல நேர்ந்தது. அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது வெயில் அதிகமாக இருந்ததால் களைப்பு ஏற்படவே அருகில் உள்ள ஒரு மரத்தை நோக்கி இளைப்பாறலாம்! என நினைத்து நடந்தார். அந்த மரத்துக்கு அருகில் விவசாயி ஒருவர் தனது மனைவி மகளுடன் சேர்ந்து களைக் கொட்டியை வைத்து பயிர்களுக்கு இடையில் இருந்த களைகளை எல்லாம் வெட்டிக் கொண்டிருந்தார். அவர்களுக்கும் பசி ஏற்படவே மூவரும் மர நிழலை நோக்கி வந்தனர். அங்கு வந்தவர்களை பார்த்தவுடன் அந்த விவசாயி தன்னுடைய மாணவர் என்பதை குரு அறிந்து கொண்டார். அவரிடம் பேச ஆரம்பிக்கவும் அந்த மாணவனும் வந்திருப்பவர் தன்னுடைய குரு என்பதை அறிந்து கொண்டார். உடனே சற்றும் தாமதிக்காமல் ஐயா நீங்களா! உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. மிகவும் களைப்பாக இருப்பீர்கள் இந்த நீராகாரத்தை குடிங்கள்! என்று தான் கொண்டு வந்திருந்த பழைய சோற்றின் தண்ணீரை ஊற்றி தனது குருவுக்கு கொடுத்தார் அந்த விவசாயி.
மகிழ்ச்சியோடு அதனை அருந்தி தாகத்தை தணித்துக் கொண்ட குரு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தனது குருகுலத்தை நோக்கி நடக்க தொடங்கினார். அவ்வாறு நடந்து செல்லும் போது அவரது மனம் அவரையே அறியாமல் ஆனந்தத்தில் மூழ்கியது. முதலில் சந்தித்த மாணவன் செய்த உபசரிப்பை விட, இரண்டாவதாக சந்தித்த விவசாய மாணவன் உள்ளன்போடு இயல்பாக செய்த உபசரிப்பு அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
ஒருமுறை கடையெழு வள்ளல்களில் ஒருவரான காரியை பார்ப்பதற்காக அவ்வையார் சென்று இருப்பார். அப்பொழுது காரி தனது மனைவி மகளுடன் களைக் கொட்டியை வைத்து தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருப்பான். அவ்வையாரை பார்த்தவுடன் வாருங்கள், அவ்வையே! என வரவேற்று அவரது கையிலும் ஒரு களைக் கொட்டியை கொடுத்து களை எடுக்கச் சொல்லி விடுவான். காரி உள்ளன்போடு இயல்பாக செய்த அந்த செயல் அவ்வையாருக்கு மிகவும் பிடித்துப் போய்விடவே அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். அன்று அவ்வையார் அனுபவித்த அந்த அன்பின் நெகிழ்ச்சியை விவசாய மாணவன் மூலம் குருவும் அனுபவித்து மகிழ்ந்ததாக எண்ணி மனம் போல் அந்த விவசாய மாணவனை மனதார வாழ்த்தினார்.
நாம் பிறரை உபசரிப்பதற்கு அதிகப்படியான ஆடம்பரம் இருக்க வேண்டியதில்லை. நம்மிடம் இருக்கக்கூடிய கூழைக் கூட உள்ளன்போடு கொடுத்தால் அது அமிர்தத்துக்கு நிகரானது. பிறரிடம் அன்பை வெளிப்படுத்துவதற்கு கொடுக்கும் மனது தான் முக்கியமே தவிர, கொடுக்கப்படும் பொருள் அல்ல. அதனால்தான் வள்ளுவர் பெருந்தகை 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!' என்று கூறினார். எனவே நாமும் பிறரிடம் ஏதேனும் கொடுக்க நேர்ந்தால் அதனை உள்ளன்போடு கொடுக்க வேண்டும். அன்பு இல்லாமல் கொடுக்கப்படும் பொருளானது மழை நின்றவுடன் மறைந்து விடக் கூடிய வானவில்லை போன்றது, கூடிய விரைவில் மறைந்து விடக்கூடும்!