அம்மிக்கல்லில் மசாலா அரைத்தல் https://ta.quora.com
வீடு / குடும்பம்

மாற்றம் ஒன்றே மாறாதது!

எஸ்.ராஜம்

ம் பாட்டன், பாட்டி காலத்தில் இருந்து, இன்று வரை பழக்க வழக்கங்கள், நடைமுறைகளில், வேலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பாட்டிகள், அத்தைகள், அம்மாக்கள் அம்மிக்கல்லில் கை வலிக்க வலிக்க, விரல்கள் எரிய மசாலாவையும் மிளகாயையும் அரைத்தார்கள். இன்று மிக்ஸி அந்த வேலையைச் செய்து விடுகிறது.

அன்று ஆட்டுக்கல்லில் மாவாட்டினார்கள். இப்போது கிரைண்டர் வந்து விட்டது. அதில் மாவை அரைக்கப் போட்டுவிட்டு வேறு வேலைகளை கூட கவனிக்கலாம். அதற்குள் மாவும் தயாராகிவிடும்.

கிணற்றில் நீர் இறைத்து அருகில் உள்ள துவைக்கும் கல்லில் துணிகள் துவைத்தார்கள் அன்று. இப்போது அதற்கென்று ஒரு மெஷின் வந்துவிட்டது. அந்த வேலையே இல்லாமல் போய்விட்டது இப்போது.

இன்று வீடுகளில் கொல்லைப்புறமும் இல்லை, கிணறும் இல்லை. முன்பு கிணற்று நீர்தான் குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க, பாத்திரம் கழுவ என்று எல்லாவற்றிற்கும் பயன்பட்டது.

ஆறுகளில் அன்று இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு நீர் ஓடியதால் எல்லோரும் அதில்தான் குளிப்பார்கள். இன்று படுக்கை அறையுடன் இணைந்த சின்ன பாத்ரூமில், வெந்நீரில்  குளிப்பது வழக்கமாகிவிட்டது.

அன்றைய பெண்கள் விறகு அடுப்பில், புகை நடுவில் விதவிதமாக சுவையாக சமையல், பலகாரங்கள், தின்பண்டங்கள் செய்தார்கள்.. இன்று கேஸ் அடுப்பு, மின் அடுப்புகளில் சுலபமாக சமைத்து விடலாம். சுவை மட்டும் அன்று போல் இருக்காது.

பாத்திரங்களின் அடியில் பிடித்த கரியை தேங்காய் நாரினால் அழுத்தி அழுத்தி, கை தேய தேய்த்து முன்பு சிரமப்படுவார்கள். பாத்திரம் தேய்க்கக் கூட இயந்திரம் வந்துவிட்டது இப்போது. பாத்திரங்களில் கரி பிடிக்க வாய்ப்பே இல்லை.

வேப்பங்குச்சியை சீவி பல் துலக்கி பல் இடுக்குகளில் இருக்கும் உணவு துணுக்குகளை நீக்கி பற்களை சுத்தப்படுத்துவார்கள் முன்பு. வாயும் சுத்தமாகிவிடும், கிருமிகள் அழிந்து விடும். இன்று பேஸ்ட்டும், பிரஷ்ஷூம் வேப்பங்குச்சியை தூக்கி வீசி விட்டன.

தரையில் அமர்ந்து இலைகளில் சாப்பிடுவது அன்றைய வழக்கம். சாப்பாட்டு மேஜைகள் இல்லாத வீடுகள் இன்று இல்லை.

தரையில் பாய் விரித்து படுத்து உறங்கும் பழக்கம் மாறி, கட்டில், மெத்தை என்று உடம்பு சுகம் கேட்கிறது இன்று.

தரையில் அமர்ந்து கொண்டு, வீட்டை துணியால் மெழுகி சுத்தப்படுத்தியது அந்த காலம். நின்று கொண்டு சுலபமாக மாப் அடித்து வீட்டை சுத்தப்படுத்தி விடலாம் இப்போது.

அன்று கல்கி, ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் கதைகள், நாவல்கள் படித்து வாசிப்பை நேசித்தனர் வீட்டுப் பெண்கள். இன்று அது ஸ்மார்ட் ஃபோனில் மூழ்கும் பழக்கம் ஆகிவிட்டது.

பண்டிகைகளில், சுப நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் பாட்டு பாடுவார்கள் முன்பு. இப்போது பாட்டு கேட்கத்தான் பலருக்கு பிடிக்கிறது.

வீட்டு வேலைகளை அப்போது பெண்களே செய்தார்கள். இப்போது அதற்கென்று ஆட்களை நியமித்து விடுகிறார்கள்.

அந்நாளில் நாள் முழுவதும் வீட்டுப் பெண்களுக்கு வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். என்றாலும் கிடைக்கும் சொற்ப இடைவெளியில் கை வேலைகளில் ஈடுபடுவார்கள். தையல், பின்னல் வேலை என்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார்கள்.

அக்கம் பக்கத்தினருடன் நல்ல நட்புடன் பழகினர் அன்று. இப்போது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்றே தெரியாமல் வாழ்கிறோம்.

இப்போது பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே விரைவாக செய்து விடுகின்றன. சௌகரியங்கள் ஏராளமாகப் பெருகி உள்ளன. கூடவே வியாதிகளும் பெருகி உள்ளன. மக்கள் பரபரப்பாகவும், பதற்றத்துடனும் இயங்கி வருகின்றனர்.

நேரமே இல்லை என்று புலம்புகிறார்கள். களைப்பாக இருக்கிறது என்று சோர்ந்து போகின்றனர்.

மாற்றங்கள் மனிதர்களின் மனங்களையும் மாற்றி விட்டன.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT