மனச்சோர்வு என்ற விஷயத்தை இப்போது நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதுவே நாளடைவில் மனநோயாக மாறக்கூடும். ஆறு நாட்கள் கடுமையாக உழைக்கும் நமக்கு ஒரு நாள் கட்டாய ஓய்வு தேவை. இந்த ஆறு நாட்களில் தினம் தினம் வழக்கமாக நாம் சந்திக்கும் மனிதர்கள், வழக்கமாக நாம் செல்லும் இடங்கள் முதலானவை நம் மனதில் ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி, மனச்சோர்வையும் ஏற்படுத்திவிடும்.
ஆறு நாட்களில் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் நாம் சந்திக்கும் மனக்கசப்பான விஷயங்களை நம் மனதிலிருந்து உடனே கட்டாயம் துரத்தி அடிக்க வேண்டும். மனக்கசப்பு நம் மனதில் ஒருவித சலிப்பு உணர்வினை ஏற்படுத்திவிடும். இந்த உணர்வே நம் மனதில் சோர்வை உண்டாக்கி விடும். இதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
வெளிநாடுகளில் ஐந்து நாட்கள் கடுமையாக உழைப்பார்கள். இரண்டு நாட்கள் மிகவும் ரிலாக்ஸ்டாக இருப்பார்கள். இரண்டு நாள் ஓய்விற்குப் பின்னர் மீண்டும் ஒருவித புத்துணர்ச்சியோடு அலுவலகம் செல்லுவார்கள். வெளிநாடுகளில் முன்பின் தெரியாதவரைப் பார்த்தால் கூட ஹலோ சொல்லி புன்னகைப்பார்கள். இது மனதை லேசாக்கும் ஒரு மந்திரச் சொல்லாகும்.
மனச்சோர்வை எளிய முறையில் எப்படிப் போக்குவது என்பதைப் பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
சுற்றுலா மனச்சோர்வைப் போக்கும் ஒரு அற்புதமான விஷயமாகும். சுற்றுலா என்பது அதிக செலவாகும் ஒரு விஷயம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருந்து வருகிறது. இந்த எண்ணம் தவறு என்றும் சுற்றுலா என்பது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று என்பதை நாம் முதலில் உணர வேண்டும். இந்த உலகத்தில் பலதரப்பட்ட மனநிலை கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதும் பலதரப்பட்ட மனநிலை கொண்ட மனிதர்களில் நாம் யார் என்பதையும் புரிய வைக்கும் ஒரு பல்கலைக்கழகமே சுற்றுலா ஆகும்.
மாதத்திற்கு ஒரு நாள் கண்டிப்பாக அருகில் இருக்கும் வெளியூர்களுக்கு சுற்றுலாவாக சென்று வாருங்கள். வெளியே செல்ல பணமில்லை என்று சொல்லாதீர்கள். பணம் அதிகம் செலவழிக்காமல் ஒரு நாள் வெளியே சென்று மகிழ்ச்சியுடன் திரும்ப நம்மைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் சிறியதும் பெரியதுமாக உள்ளன.
ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் பகுதிக்கு அருகில் சுமார் இருபத்தி ஐந்து கிலோ மீட்டருக்குள் அமைந்த ஒரு சுற்றுலா தலத்தைத் தேர்வு செய்யுங்கள். குடும்பத்தோடு காலையில் புறப்பட்டு அங்கே செல்லுங்கள். மோட்டர் சைக்கிளைத் தவிர்த்து பேருந்து அல்லது ரயில் வசதி இருந்தால் அதில் பயணியுங்கள். ஒரு மாதம் அருவி. மற்றொரு மாதம்; ஒரு வழிபாட்டுத்தலம், மற்றொரு மாதம் சரித்திரப் புகழ் பெற்ற இடம் மற்றும் கோட்டைகள் என நீங்கள் வாழும் பகுதிக்கு அருகில் அமைந்த சுற்றுலா மையங்களைத் தேர்வு செய்யுங்கள்.
நாம் வாழும் பகுதிகளிலேயே நமக்குத் தெரியாத பிரபலமாகாத பல சுற்றுலா தலங்கள் உள்ளன. கூகுளின் உதவியுடன் அவற்றைத் தேடிக் கண்டுபிடியுங்கள். நீங்கள் தேடிக் கண்டுபிடித்த சுற்றுலாத் தலங்களை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்குத் தெரிவியுங்கள். அப்போது உங்கள் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பிறக்கும்.
ஞாயிற்றுக்கிழமை அல்லது உங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஓய்வு நாளை உங்கள் குடும்பத்தோடு செலவிடுங்கள். பெற்றோர், மனைவி, குழந்தைகளுடன் அளவளாவி மகிழுங்கள். மாதத்திற்கு ஒரு நாள் அருகில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரியுங்கள். அவர்களையும் உங்கள் வீட்டிற்கு அழைத்து மகிழுங்கள்.
வெளியே செல்லும்போது மனதை இறுக்கமாக வைத்திருக்காதீர்கள். கலகலப்பாக இருங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். உங்கள் மனைவிக்கு மாதத்திற்கு ஒருநாள் சமையலிலிருந்து கட்டாய ஓய்வு கொடுங்கள். வெளியே செல்லும்போது நல்ல தரமான உணவகத்தைத் தேடிக் கண்டுபிடித்து குடும்பத்தோடு சாப்பிட்டு மகிழுங்கள்.
குழந்தைகளை அவர்கள் மகிழும் விதமாக நல்ல நல்ல திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் சாதாரண திரையரங்கங்களுக்குச் செல்லுங்கள். செலவும் குறைவாக ஆகும். நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியும் கிடைக்கும். புத்தகங்களை வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாசிப்பு உங்கள் மனதை லேசாக்கும். அறிவையும் விசாலமாக்கும்.
கூடுமானவரை அலுவலகம் அல்லது பொது இடங்களில் யாரிடமும் தேவையின்றி வாக்குவாதம் செய்யாதீர்கள். ஒரு புன்னகையை உதிர்த்து அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். எப்போதும் புன்னகைத்தபடி இருக்கப் பழகுங்கள். புன்னகை அனைத்துப் பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே தீர்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், புன்னகை மனச்சோர்வைப் போக்கும் மாமருந்து என்பது நிச்சயம்.