தற்போது வீடுகள் மற்றும் பொது இடங்களில் ஆழ்துளை போர் அமைக்க நீரோட்டம் பார்த்துக்கொடுக்க ஆள் இருக்கிறார்கள். அவர்கள் விஞ்ஞான முறையில் நீரோட்டம் பார்த்துத் தருகிறார்கள். ஆனால், அந்நாளில் இதற்கெல்லாம் வசதிகள் இல்லாதபோது நம் பெரியவர்கள் எப்படி கிணறு வெட்ட நீரோட்டம் பார்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிணறு வெட்டுவதற்கு முன்பு அக்காலத்தில் அந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிய நமது முன்னோர்கள் கடைபிடித்த சில வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.
கிணறு வெட்டப்போகிற இடத்தில் பழைய கூறையிலுள்ள வைக்கோலைக் கொண்டு வந்து இரவில் தண்ணீர் தெளித்து வைத்திருந்து காலையில் பார்த்தால் அவ்விடத்தில் பெரிய கரையான்கள் மொய்த்தபடி இருந்தால் அந்த இடத்தில் தண்ணீர் உண்டு என்ற பொருள்.
கிணறு வெட்டப்போகிற இடத்தில் முதல் நாள் இரவில் வெள்ளைப் பூக்களை போட்டு வைத்திருந்து மறுநாள் காலையில் பார்த்தால் பூக்கள் வாடாமல் இருந்தால் அங்கு நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று அர்த்தம். பூக்கள் கொஞ்சம் வாடியிருந்தால் குறைவான அளவே தண்ணீர் கிடைக்கும். பூக்கள் காய்ந்து போயிருந்தால் தண்ணீர் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் இல்லாத இடத்தில் நொச்சி முளைத்திருந்தால் அதன் அருகில் மூன்று அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். தண்ணீர் இல்லாத இடத்தில் அருகம்புல், விஷ மூங்கில் முளைத்திருந்தால் அதற்குக் கிழக்கில் மூன்று முழு தூரத்தில் தெற்கு முகமாய் ஒரு நீரோட்டம் உண்டு.
கண்டங்கத்திரிச் செடியானது முள் இல்லாமல் பூக்களுடன் காணப்பட்டால் அவ்விடத்தில் நல்ல நீரோட்டம் இருக்கும்.
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.
அத்திமரம் உள்ள இடங்களின் அடியில் தண்ணீர் இருக்கும் என்று கிருப சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, கிணறு தோண்டுவதற்கும், ஊற்றுக்கள் கண்டறிவதற்கும் இடம் நிர்ணயிப்பது அத்தி மரத்தின் பக்கத்தில் ஆகும். அத்திமரம் தெய்வீக தன்மை வாய்ந்தது. அதிக ஆழம் தோண்டுவதற்கு முன்னரே இந்த மரத்தின் அருகில் நீர் கிடைத்துவிடுமாம்.
கரையான் புற்று உள்ள இடத்தில் கண்டிப்பாக நீர் இருக்கும். அதுவும் சுவையான நீர் கிடைக்கும். கரையான் பொதுவாக ஈரமான பகுதியில் மட்டுமே புற்று கட்டும். இன்றும் கூட கிராமங்களில் தண்ணீருக்காக இடம் பார்க்கும்போது கரையான் புற்று உள்ள இடத்தை தேர்ந்தெடுப்பார்கள்.
கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் ஒரு நாவல் மரத்தைக் கண்டால், சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் புற்று இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.
இவற்றைப் போல், சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரை அக்காலத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விடுவர். பின்னர் அந்தப் பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுமாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம். கிராமங்களில் அந்தக் காலத்தில் பசு மாட்டின் கன்றை கிணறு வெட்ட வேண்டிய பூமியில் அவிழ்த்து விடுவார்கள். அது சுற்றிச் சுற்றி வந்து ஏதாவது ஓரிடத்தில் சிறுநீர் கழித்தால் அங்கு கிணறு தோண்டுவார்கள்.