குடும்பம் என்றாலே ஆயிரம் பிரச்னைகளும் சிக்கல்களும் இருக்கும். ஒவ்வொரு மனிதனும் இவற்றை எதிர்கொண்டுதான் தனது குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். பலரும் நிம்மதி இழந்து தவித்தபடிதான் இருக்கிறார்கள். ஜெய் ஷெட்டி என்கிற ஒரு துறவி தன்னுடைய 'Think Like a Monk' என்ற புத்தகத்தில் அவருடைய அனுபவங்களை, நல்ல நோக்கம் ஞானம் மற்றும் மகிழ்ச்சியுடன் மக்கள் வாழ உதவும் நோக்கத்தில் வாசகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார். அந்தப் புத்தகம் சொல்லும் ஏழு முக்கியமான பாடங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. தற்போதைய கணத்தில் வாழ்தல்: மனிதன் தற்போதைய தருணத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தனது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் சுற்றுப்புறங்களை பற்றிய விழிப்புணர்வுடன் ஒரு மனிதன் வாழ்வதன் மூலம் அதிக தெளிவையும், அமைதியையும், மன நிறைவையும் அனுபவிக்க முடியும்.
2. நோக்கம் மற்றும் பொருள்: தான் செய்யும் செயலைப் பற்றிய நோக்கமும் அதற்கான பொருளையும் ஒரு மனிதன் அறிந்திருக்க வேண்டும். தனது செயல்களை ஒரு மதிப்பு மிக்கதாகவும் அர்த்தமுள்ளதாகவும் செய்ய முடியும். அப்போதுதான் அந்த செயல்கள் வலிமை பெறும்.
3. சுய இரக்கம்: ஒவ்வொரு மனிதனும் சுய இரக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னைத்தானே நேசிப்பது போலவே தன் மீது பச்சாதாபம் கொள்ள வேண்டும். அது அவனின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்கு வழி வகுக்கும். தன்னை மென்மையாகவும் கனிவாகவும் ஒரு மனிதன் நடத்திக்கொள்ள வேண்டும். குறைபாடுகளை வெறுக்காமல் தன்னுடைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த புத்தகம் வாசகர்களை ஊக்குவிக்கிறது.
4. ஈகோவை விட்டு விடுதல்: ஈகோ நம் வாழ்வில் தேவையற்ற துன்பங்களுக்கும் மோதலுக்கும் வழிவகுக்கிறது. மற்றவர்களுடன் பழகும்போது பணிவு பச்சாதாபம் ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டும். ஈகோவினால் ஆட்கொண்ட ஒரு மனிதன் பிறரை பிறரை தேவையில்லாமல் காயப்படுத்தவும் புண்படுத்தவும் செய்கிறான். எனவே, ஈகோவை விட்டு விடுதல் வேண்டும்.
5. நன்றி உணர்வு மற்றும் சேவையை வளர்ப்பது: ஒரு மனிதன் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழ்வதற்கு மிக முக்கியமான தேவைகள் நன்றி உணர்வும் சேவை உணர்வும் ஆகும். தங்கள் வாழ்வில் கிடைத்த ஆசீர்வாதங்களுக்காக நன்றியை தெரிவிக்க வேண்டும். பிறருக்கு தன்னாலான சேவைகளை தன்னலமின்றி செய்ய வேண்டும்.
6. ஆரோக்கியமான உறவுகளை பேண வேண்டும்: உறவுகளை பேணுதலில் மனிதன் கவனம் காட்ட வேண்டும். அவை பரஸ்பர மரியாதை தொடர்புகள் மற்றும் புரிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. அனுதாப உணர்வு, இரக்கம், புரிதல், கருணை, மரியாதை போன்றவை நல்ல உறவுகளை பேணவும் வளர்க்கவும் உதவுகிறது. உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை வழங்குகிறது.
7. கற்றல் மற்றும் வளர்ச்சி: வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் வளர்ச்சி மன நிலையை தழுவுவது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மன நிறைவிற்கு மிக அவசியம். மனிதர்கள் அறிவு தேடலில் ஈடுபடவும் தங்கள் அனுபவங்களை பயனுள்ளதாகவும், சவால்களை சந்தித்து அவற்றை சந்தர்ப்பங்களாக ஆக்கிக் கொள்ளவும் வேண்டும். அவையே அவர்களுடைய வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும்.