Motorcycle 
வீடு / குடும்பம்

மோட்டார் சைக்கிள் - விபத்தைத் தவிர்க்க 10 பாதுகாப்பு விதிகள்!

ஆர்.வி.பதி

மோட்டார் சைக்கிளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்காலத்தில் கணிசமாக உயர்ந்து விட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வதையே பெரும்பாலோர் விரும்புகிறார்கள். எளிதில் பல பெரிய வாகனங்களைக் கடந்து சென்று விடலாம் என்பதே இதற்கு முதல் காரணமாகும். மோட்டார் சைக்கிளில் எவ்வாறு பாதுகாப்பாக பயணிப்பது என்பதை நாம் இப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

  • மோட்டார் சைக்கிள் நிலைத்தன்மை (Stability) குறைவாக உள்ள ஒரு வாகனமாகும். இதனால் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென பிரேக்கை அழுத்தினால் வண்டி தடுமாறி கீழே விழக்கூடும். உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள் பிரேக்கை மிகவும் கவனமாக கையாளப் பழக வேண்டும். பிரேக் என்பது ஓட்டுபவரின் பாதுகாப்பிற்காகவும் சாலையில் செல்பவரின் பாதுகாப்பிற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு விஷயமாகும். இதுவே நமது உயிரைப் பறிக்கும் எமனாக மாற நாம் காரணமாக இருக்கக் கூடாது.

  • மோட்டார் சைக்கிளின் முன்பக்கத்தில் உள்ள பிரேக்கை பொதுவாக உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் பின் சக்கர பிரேக்கை அழுத்தி வேகத்தைக் குறைத்து பின்னர் முன் சக்கர பிரேக்கை அழுத்தி வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். இதுவே பாதுகாப்பான முறையாகும். சாலையின் மேற்பரப்பில் ஈரம் இருந்து மோட்டார் சைக்கிளின் முன்பக்க பிரேக்கை வேகமாக அழுத்தினால் வாகனம் கவிழ்ந்து விடக்கூடும். எனவே ஈரமான சாலைகளில் முன்பக்க பிரேக்கை உபயோகிப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

  • பொதுவாக வளைவான சாலைகளில் திரும்பும் போது வாகனம் ஒரு புறமாக சாயும். இத்தகைய இடங்களில் வேகமாகச் சென்று திடீரென்று பிரேக்கை அழுத்த நேர்ந்தால் வண்டி நிலைகுலையும் அபாயம் உண்டு. வளைவான சாலைகளில் வளைவை நெருங்கும் வேளைகளில் வண்டியின் வேகத்தை கணிசமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். வளைவான சாலைகளில் அதற்கேற்ற வகையில் கியரை பயன்படுத்த வேண்டும். இத்தகைய இடங்களில் பிரேக்கை உபயோகிக்க நேர்ந்தால் வேகமாக அழுத்தாமல் மெதுவாக மெல்ல மெல்ல அழுத்தி வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

  • வளைவான சாலைப் பகுதிகளில் முன்னால் செல்லும் வாகனத்திற்கு மிக அருகில் செல்லாமல் சற்று இடைவெளிவிட்டுச் செல்ல வேண்டும்.

  • நெடுஞ்சாலைகளில் செல்லும் போது இரண்டு பெரிய வாகனங்களுக்கு இடையில் மோட்டார் சைக்கிளில் செல்லுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • மோட்டார் சைக்கிள் டயர்களை உரிய நேரத்தில் மாற்றி விட வேண்டும். அதிக அளவில் தேய்ந்து போன டயரை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • எல்லாவற்றிற்கும் மேலாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டவே கூடாது.

  • மோட்டார் சைக்கிள்களில் ஐம்பது முதல் அறுபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லுவதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

  • மோட்டார் சைக்கிள் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிக் கொண்டு போவதை உணர்ந்தால் உடனடியாக இரண்டு கைப்பிடிகளையும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு வாகனத்தை நேராக உங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து வண்டியை நிலை நிறுத்துவதில் பதட்டமில்லாமல் செயல்பட வேண்டும்.

  • தற்காலத்தில் சிறியது முதல் பிரம்மாண்டமான அளவு என நவீன மோட்டார் சைக்கிள்கள் 100 சிசி முதல் 450 சிசி வரை விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. நமது உயரம் மற்றும் எடைக்கேற்ப மோட்டார் சைக்கிளைத் தேர்வு செய்ய வேண்டும்.

பல விபத்துகள் நமது கவனக்குறைவால் ஏற்படுபவை என்பதை உணர்ந்து சாலையில் பயணிக்கும் போது கவனமாக மோட்டார் சைக்கிளை இயங்குங்கள். விபத்தின்றி பயணம் செய்வது நமக்கும் நல்லது பிறருக்கும் நல்லது. அது நிம்மதியான வழியும் கூட.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT