நாம் நாமாக இருப்போம் https://www.nbcnews.com
வீடு / குடும்பம்

நாம், நாமாக இருப்பதன் அவசியமும் நன்மைகளும் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

வ்வொரு மனிதருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அது அவரது உடல், செயல், சிந்தனை மற்றும் குணத்தில் வெளிப்படும். தனக்குத்தானே உண்மையாக இருப்பது மிகவும் முக்கியம். அதனுடைய அவசியத்தைப் பற்றியும் அதனால் விளையக்கூடிய நன்மைகளைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

எல்லையற்ற சுதந்திரம்: உடை அணிந்து கொள்வதில் ஆரம்பித்து, பிள்ளைகளை எந்தப் பள்ளியில் படிக்க வைக்கலாம், எந்த கோர்ஸில் கல்லூரியில் சேர்க்கலாம் என்பது வரை நண்பர்களையோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களையோ பார்த்து அவர்களுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆரம்பித்தால் இதற்கு முடிவே இல்லை. நமக்குப் பிடித்த மாதிரி நாம் வாழ்வதும் செயல்படுவதும் எல்லையற்ற சுதந்திரத்தை ஒரு மனிதனுக்கு அளிக்கிறது.

திருப்தியும் மன அமைதியும்: இந்த உலகில் நிறைய மனிதர்கள், ‘பிறர் என்ன சொல்லுவார்கள்?’ என்று எண்ணியே தங்கள் வாழ்நாளில் பல வருடங்களை கடக்கிறார்கள் என்பது மிகவும் வேடிக்கையான உண்மை. தங்களுக்குப் பிடித்ததை செய்யக்கூட அவ்வளவு தயங்குவார்கள். நமக்கு நாமே உண்மையாக இருக்கும்போது அது அதிக திருப்தியையும் மன அமைதியையும் தருகிறது. பிறருக்காக நாம் பாவனை செய்யும்போது மன அழுத்தமும் அதிருப்தியும் மனதில் இடம்பிடிக்கும். உண்மைத்தன்மையோடு இருக்கும்போது அது உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.

உண்மையான உறவு, நட்பு: நாம் நாமாக இருக்கும்போதும் நடக்கும்போதும் நாம் உண்மையிலேயே யார் என்று பிறர் உணர்ந்து கொள்கிறார்கள். அதனால் அவர்கள் நம்மை பாராட்டக்கூடும். மேலும், பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையின் அடிப்படையில் ஆழமான, அர்த்தமுள்ள உறவுகளுக்கும் வழிவகுக்கிறது. நாம் வேறொரு நபராக இருக்க முயற்சித்தால் நாம் மேலோட்டமாக சிலரை ஈர்க்க முடியும். ஆனால், அது ஆழமற்ற அல்லது குறுகிய கால நட்புகளுக்கும் உறவுகளுக்கும் மட்டுமே வழி வகுக்கும்.

தன்னம்பிக்கை அதிகரித்தல்: பிறரின் கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதும் நம்மை நாமே அப்படியே ஏற்றுக்கொண்டு நடப்பதும் நமது தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இதனால் நமது திறன்களை நம்ப கற்றுக்கொள்கிறோம். இது இலக்குகளை தொடரவும் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளவும் உதவுகிறது.

தனிப்பட்ட வளர்ச்சி: நமக்கு நாமே உண்மையாக இருக்கும்போது நமது பலம் மற்றும் பலவீனங்களை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். இந்த சுய விழிப்புணர்வு வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. நமது திறமைக்கேற்ற இலக்குகளை அமைக்கவும் அவற்றை அடைய முயற்சி செய்யவும் நிறைவான வாழ்க்கைக்கும் இட்டுச் செல்கிறது.

பிறரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: நான் இப்படித்தான் என்று நமது சுயத்தை உண்மையாக வெளிக்காட்டும்போது நடிக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமானவர்கள் ஒருவருடைய கருத்துக்களுக்கும் கண்ணோட்டங்களும் இன்னொருவரிடம் இருந்து மிகவும் வேறுபட்டு இருக்கும். எனவே, ஒருவருக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டால் இன்னொருவரின் பகைக்கு ஆளாக நேரிடலாம். ஆனால், நாம் நாமாக இருக்கும்போது பிறரைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

நேர்மறையான உதாரணம்: நாம் நாமாக இருக்கும்போதும் செயல்படும்போதும் பிறரையும் அவ்வாறு செய்யத் தூண்டுகிறோம். பிறரும் நம்மைப் பார்த்து தனது தனித்துவத்தை தழுவுவதற்கு நாம் ஊக்குவிக்கிறோம். இதனால் சமூகமும் பயனடையும். மற்றவர்களை மகிழ்விப்பதும் திருப்திப்படுத்துவதும் தன்னுடைய வேலை அல்ல என்று உணர்ந்த மனிதன் மிகவும் சிறப்பாக தன்னுடைய காரியங்களைச் செய்கிறான். புதிய யோசனைகளையும் முன்னோக்குகளையும் சிந்திக்க முடியும். எனவே, நாம் நாமாக இருப்போம் எப்போதும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT