சமூகத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்ய நமக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இன்று நிறைய பேர் தங்களைப் பற்றி மட்டுமே சுயநலமாக யோசிக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இந்த உலகமே இப்போது சுயநலத்தில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.
இப்படித்தான் சுயநலமிக்க ஒருவரின் மகன் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டான். மருத்துவமனைக்கே கூட்டிச் செல்ல முடியாத அளவுக்கு அவனது உடல் நிலை. அதனால் டாக்டரே அவனது வீட்டிற்கு வந்தார். ‘தொற்றுநோய்க் கிருமியால் வந்து இருக்கும் காய்ச்சல் இது. ஏற்கெனவே, இதை எவ்வளவு பேருக்கு உங்கள் மகன் பரப்பி விட்டானோ? இனி, உடம்பு சரியாகும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்' என்று அந்த டாக்டர் எச்சரித்தார்.
அந்த சிறுவனுக்கு சிகிச்சை சில நாட்களுக்குத் தொடர்ந்தது. அவனும் ஒருவழியாகக் காய்ச்சல் குறைந்து குணமாகி விட்டான். டாக்டர் சிகிச்சைக்கான பில்லை நீட்டினார். தொகையைப் பார்த்த மகனின் தந்தை கடும் கோபமாகி டாக்டரிடம் சண்டைக்குப் போய் விட்டார்.
அதற்கு டாக்டர் விளக்கம் கொடுத்தார். "ஒன்பது முறை, உங்கள் வீட்டுக்கே வந்து மருந்து, மாத்திரை கொடுத்து இருக்கிறேன். ஊசியும் போட்டு இருக்கிறேன்” என்றார்.
பிள்ளையின் தந்தை அதைக் கேட்டு மேலும் கொதித்தார், "விளையாடுகிறீர்களா? என் மகன் ஊரெல்லாம் காய்ச்சலைப் பரப்பியதால்தானே உங்கள் மருத்துவமனைக்கு இப்போது ஏகப்பட்ட கூட்டம். உங்கள் தொழில் இன்று படுபிசியாக போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் எப்படி நீங்கள் பணம் கேட்கலாம்? நியாயமாக நீங்கள் அல்லவா எனக்குப் பணம் தர வேண்டும்?" என்றார்.
இப்படித்தான் எது கிடைத்தாலும், அதனால் ஆதாயம் உண்டா? அதை வைத்துக் கொண்டு எப்படியாவது ஊர் பணத்தை எல்லாம் சுருட்டித் தனது பாக்கெட்டில் போட்டுக்கொள்ள முடியுமா? என்று சுயநலத்தோடு பலரும் அலைவதைப் பார்க்கின்றோம்.
பொதுநலம் புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகிறது. ஆனால் ஒன்று முத்தம் இடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப்படுகின்றது.
தான் வாங்கியக் காற்றை சுயமாக வைத்து இருப்பதால் கால்பந்து உதைக்கப்படுகின்றது. ஆனால், தான் வாங்கிய காற்றை இசையாகத் தருவதால் புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது.
இப்படித்தான் சுயநலம் உள்ளவர் புறக்கணிக்கப்படுவர்; பொதுநலம் உள்ளவர் போற்றப்படுவார்.