சிலர் வெறித்தனமாக வேலை செய்யும் இயல்புடையவராக இருப்பார்கள். அவர்களை, ‘வொர்க்கஹாலிக்’ என்று சொல்வார்கள். மதுவுக்கு அடிமையானது போல, இவர்கள் வேலை செய்வதற்கு அடிமையாக இருப்பார்கள். அமெரிக்காவில் ஜூலை 5 அன்று வொர்க்கஹாலிக் தினம் கொண்டாடுகிறார்கள். குடும்பம், நட்பு, உறவுகளின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு, வேலை செய்வதன் அவசியத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
வொர்க்கஹாலிக் நபரின் பண்புகள்:
1. வெறித்தனமான வேலைப்பழக்கம்: தேவையே இல்லாதபோதும் கூட நீண்ட நேரம் வேலை செய்வார்கள். இவர்களால் வேலை செய்யாமல் இருக்கவே முடியாது. வேலை செய்யாமல் இருக்கும்போது குற்ற உணர்ச்சியாக உணருவார்கள்.
2. பரிபூரணத்துவம்: தங்கள் பணிகளை உயர்தரமாக செய்ய வேண்டும் என்கிற பரிபூரணத்துவக் கொள்கை காரணமாக தொடர்ந்து வேலை செய்வார்கள்.
3. தோல்வி பயம்: தாங்கள் தோற்றுவிடுவோமோ என்ற தீவிர பயம் அவர்களுக்கு இருப்பதால்தான் தொடர்ந்து பணியாற்றுவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
4. சுய மதிப்பு: அவர்களின் சுய மதிப்பு மற்றும் அடையாள உணர்வு பெரும்பாலும் அவர்களின் பணி செயல் திறன் மற்றும் சாதனைகளுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.
எதிர்கொள்ளும் பிரச்னைகள்:
1. உடல்நலப் பிரச்னைகள்: நீடித்த மன அழுத்தம் மற்றும் ஓய்வின்மை ஆகியவை இருதய நோய், தூக்கமின்மை, செரிமான பிரச்னைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு போன்ற உடல் ஆரோக்கிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
2. மனநலப் பிரச்னைகள்: தொடர்ந்த வேலை காரணமாக கவலை, மனச்சோர்வு, எரிச்சல்படுதல், நாள்பட்ட மன அழுத்தம் போன்றவற்றை அனுபவிப்பார்கள்.
3. இறுக்கமான உறவுகள்: குடும்பம், நண்பர்களை புறக்கணிப்பதால் இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்க நேரிடும். இது மேலும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
4. குறைந்த உற்பத்தித்திறன்: நீண்ட நேரம் வேலை செய்தாலும் சோர்வு காரணமாக அவர்களின் வேலையின் தரம் மற்றும் செயல்திறன் காலப்போக்கில் குறையும்.
5. வேலை வாழ்க்கை சமநிலை இழப்பு: இவர்கள் ஓய்வு நேர நடவடிக்கைகள் பொழுதுபோக்குகள் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதால் திருப்திகரமான அனுபவங்களை இழக்கிறார்கள். இதனால் வேலை மற்றும் வாழ்க்கைக்கு இடையேயான சமநிலையை இழந்து திருப்தியற்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
6. தொழிலில் எதிர்மறையான தாக்கம்: அதிகமான வேலைப்பளுவின் காரணமாக வேலையில் முன்னேற்றம் பெறுவது தடைபடும்.
தீர்வுகள்:
எல்லைகளை அமைத்தல்: நிலையான வேலை நேரம் மற்றும் நியமிக்கப்பட்ட இடைவேளை நேரங்கள் போன்றவற்ற அமைத்துக்கொள்ள வேண்டும். இது வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே தெளிவான எல்லைகளை அமைக்க உதவும்.
சுயத்திற்கு முன்னுரிமை அளித்தல்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான தூக்கத்தில் ஈடுபட வேண்டும்.
ஆதரவை தேடுதல்: ஒரு சிகிச்சையாளரிடம் பேசுவது தன்னுடைய அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவும், ஆரோக்கியமான வேலைப்பழக்கத்தை வளர்க்கவும் உதவும்.
பணிகளைப் பகிர்ந்தளித்தல்: தானே எல்லா வேலைகளையும் தூக்கிக் கொண்டு சுமக்காமல் பணிகளை பகிர்ந்தளித்து பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும். இது பிறருக்கும் பணியை கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும். சம்பந்தப்பட்ட நபருக்கும் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
பொழுதுபோக்கில் ஈடுபடுதல்: தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளைக் கண்டறிந்து அவற்றில் ஈடுபடுவது மனநிறைவையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
நினைவாற்றல் மற்றும் தளர்ச்சி நுட்பங்கள்: தியானம், யோகா மற்றும் ஆழமான சுவாசப் பயிற்சிகள் போன்றவை மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.