So many benefits of reading books?
So many benefits of reading books? 
வீடு / குடும்பம்

புத்தகம் வாசிப்பதில் இத்தனை நன்மைகளா?

பொ.பாலாஜிகணேஷ்

புத்தகம் படிக்கும் பழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு என்று கேட்டால் நூற்றில் ஐந்து பேர்தான், ‘நான் படிக்கிறேன்’ என்று சொல்வார்கள். மீதி 95 சதவீதம் பேர், ‘புத்தகமா அதெல்லாம் படிக்க நேரமில்லை’ என்று சொல்பவர்கள்தான் அதிகம். புத்தகம் அதிகம் படித்த காலகட்டத்தில் நமக்கு மனநிலையும் சரி, உடல் நிலையும் சரி மிகச் சரியாக இருந்தது. ஆனால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நாம் என்று கைவிட்டோமோ அன்றே நம் மனநிலையும் கெட்டுவிட்டது, உடல் நிலையும் கெட்டுவிட்டது.

வாசிக்கும் பழக்கத்தில் எத்தனை நன்மைகள் இருக்கிறது. ஆனால், அது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. கேட்டால் நேரமில்லை என்று சொல்வார்கள். செல்போனில் பல மணி நேரம் செலவழிக்கும் நாம், வாசிப்புக்காக ஒரு மணி நேரம் கூட செலவழிப்பதில்லை என்பது வேதனையான விஷயம். செல்போனுக்காக நாம் செலவிடும் நேரம் விரயம்தான். ஆனால், புத்தகம் படிக்க நாம் செலவிடும் நேரம் நமக்கு நன்மைதான்.

வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது. நம்மை ஏமாற்றாத, சிறந்த நண்பன் புத்தகம்தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது ஆற்றல் பெருகும்; திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; சோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்; துணிவான முடிவுகள் எடுக்க புத்தகம் துணை புரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி காணும். புத்தகங்களை படித்தவர்கள் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தரப் போராடி உள்ளார்கள்; வரலாற்றை மாற்றி எழுதி உள்ளார்கள்!

புத்தகங்கள் மட்டுமே, நமக்கு ஏற்படுகிற சிக்கல்களை தீர்க்க நல்ல வழியை நயம்படச் சொல்லும். மனச் சோர்விலும், இறுக்கத்தில் உழலும்போது நல்ல புத்தகங்கள் அமைதியையும், தெளிவையும், வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் வழங்கும். நமக்கும், நமது வீட்டிற்கும் தேவையான பொருட்களை நாம் தவறாமல் வாங்குகிறோம். அதைப்போல, நமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறவும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாங்கத் தரப்படும் பணம், செலவு அல்ல; மூலதனம் ஆகும்! அது, வட்டியை ஈட்டித் தருவதைப் போல, அறிவைப் பெருக்கச் செய்யும் மூலதனம்!

புத்தகங்கள் படிக்க நேரம் இல்லை என்று பெரும்பான்மையோர் கூறுகிறார்கள். விமானம், பேருந்து தொடர்வண்டி பயணத்தின்போது மருத்துவரை, உயர் அலுவலர்களை, தலைவர்களைச் சந்திக்கக் காத்து இருக்கும்போதும், புத்தகங்கள் படிக்கலாம். நேரம் வீணாய்க் கழியாமல், பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புத்தகப் படிப்பிற்காக தினமும் நேரத்தை ஒதுக்கலாம்.

நாம் நமது நண்பர்களுடன் கேளிக்கைகளிலும், வீண் பேச்சுகளிலும், அரட்டைகளிலும் பொன்னான நேரத்தை வீண் அடிக்கிறோம். ஆனால், நம்மை உயர்த்திக்கொள்ளப் புத்தகங்களைப் படிப்பதற்கு மட்டும் நேரம் இல்லை என்று புலம்பித் தள்ளுகின்றோம். இது வேடிக்கையாக இல்லை.?

எனவே, நமக்குக் கிடைக்கும் நேரத்தை வீண் அடிக்காமல் புத்தகங்களைப் படிப்போம்.

நூலகங்களுக்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்து படிக்கும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். குழந்தைகளையும் நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை அவர்களுக்கும் ஊட்டுவோம்.

ஒவ்வொருவரும், புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி தங்கள் வீட்டில் சிறு நூலகம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது, குடும்பமே, வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு ஏற்படும்.

புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள், அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும், நேர்மை, நாணயம் உடையவர்களாகவும் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் விளங்குவார்கள்.

நல்ல புத்தகங்களைப் படித்து, கெட்டுப்போனவர்கள் யாரும் உலகில் இல்லை. புத்தகங்கள் படிப்பதைக் கடமையாகக் கொண்டவர்கள் வாசிப்பதை உயிர் என்று மதித்தவர்களும் மிக உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார்கள். புத்தகங்கள் நல்ல பெற்றோரைப் போல அறிவுரை கூறும்; மனைவியைப் போலத் தாங்கி நிற்கும்; மக்களைப் போன்று மகிழ்ச்சி அளிக்கும்; நெருங்கிய நண்பனாய் ஆலோசனை வழங்கும்!

அறிவை விருத்தி செய்ய நல்ல புத்தகங்களை நாளும் படிப்போம். வாசிப்பை நேசிப்போம்! வாழ்க்கையிலும் பயன்படுத்துவோம்! புத்தகங்களை, காலமென்னும் அலை கடலின் ஓரம் உயர்ந்து நிற்கும், கலங்கரை விளக்கங்கள் என்போம்.

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

அவெஞ்சர்ஸ் ரேஞ்சில் உருவாகும் விஜய்யின் GOAT... மாஸ் படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

நாட்டாமை படத்தில் கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்! 30 வருடம் கழித்து மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு - (நல்ல) சிரிப்புக்கு பஞ்சமில்ல!

SCROLL FOR NEXT