Sontham Eppothum Thodarkathaithaan https://ta.atomiyme.com
வீடு / குடும்பம்

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்!

பாரதி

கூட்டுக்குடும்பம், வீட்டுப் பக்கத்திலேயே வேலை என முற்காலங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் கழிந்தன. ஆனால், இப்பொழுது ஒரு வேலைக்கு நாடு விட்டு நாடும், கண்டம் விட்டு கண்டமும் கடந்து செல்கிறார்கள். நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்றதுமே இப்போது அனைவருமே சொந்த ஊரை விட்டுச் சென்று விடுகின்றனர்.

‘உண்மையிலேயே அந்த கை நிறைய சம்பளத்தில் மகிழ்ச்சி உள்ளதா?’ என்று கேட்டால், பலரும் ‘ஆம்’ என்றுதான் கூறுகிறார்கள். காரணம், சொந்தக்காலில் நின்று சம்பாதிக்கும் மகிழ்ச்சி, தனது தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துக்கொண்ட சந்தோஷம், தனது பெற்றோர் கனவை நிறைவேற்றிய நிறைவு, சொந்த வீடு, நகைகள் வாங்கிய பெருமிதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி குடும்பத்தை விட்டு அவ்வளவு தொலைவு பிரிந்து சென்ற மனவேதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிடுகிறது என்பதே உண்மை.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், இறுதியில் சொந்த ஊருக்குத்தான் வர வேண்டும் என்று கூறுவர். உண்மையில் இந்த வார்த்தைகளின் ஆழ்ந்த அர்த்ததை வெளியூர் சென்று வேலை செய்பவர்கள் நிச்சயம் புரிந்து வைத்திருப்பார்கள். அதேபோல், என்னதான் வெளியே பலருடன் பழகினாலும், இறுதியில் சொந்த பந்தங்கள்தான் உடன் நிற்கும் என்பதும் பொருந்தும். மொபைல் போன் மூலம் உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால் மொபைல் போன் மூலம் அல்லது வேலை மற்றும் படிப்புக்காக செல்லும் இடங்களில் சில உறவுகளை வளர்த்துக்கொள்கிறோம்.

உதாரணத்திற்கு, போகுமிடத்தில் ஒருவர் பார்ப்பதற்கு அண்ணன் வயதுடையவர் போல் இருந்தால் அவருடன் அண்ணன் உறவிலேயே பழக ஆரம்பித்துவிடுகிறோம். பிறகு மிகவும் நெருக்கமானவர்களாக மாறி அவரை முழுமையாக நம்பிப் பழகிவிடுகிறோம். அது ஒரு அழகான உறவு என்று எண்ணி ஒரு மாயையான சந்தோஷத்தில் மிதக்கிறோம். அவர் நம்மை ஏமாற்றவே மாட்டார் என்றும் முடிவு செய்துவிடுகிறோம்.

ஒரு உறவு, எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்குமா நிற்காதா என தெரிய வருவது ஒரு சண்டையின் மூலம்தான். ஆம்! மிகப் பெரிய சண்டை வந்து அதில் எந்த உறவு பிரியாமல் இருக்கிறதோ அதுதான் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்று. அந்த உறவு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், அதற்காக நம் இரத்த சொந்தங்களைத் தள்ளிவைத்து காயப்படுத்துவது சரியா? வெளியில் உருவாகும் அந்த உறவிற்காக நம்முடன் பிறந்தவர்களைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது சரியாகாது.

நமது இரத்த சொந்தம் சண்டைப் போட்டு பிரியும் உறவு என்று நாம் எண்ணிக்கொண்டு வெளியில் யார் மீதோ, ‘அவர்கள் நம்மைவிட்டுப் பிரிய மாட்டார்கள் ‘என்ற நம்பிக்கையை வைக்கிறோம். அவர்கள் மீது அதிக பாசத்தை வைத்து ஒரு கட்டத்தில் ஏமாந்து நிற்கும்போது, நம்முடைய இரத்தப் பாசம்தான் கைகோர்த்து நமக்கு ஆறுதல் சொல்லும் என்பது உண்மை.

உண்மையில் இந்த இரண்டு உறவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டும். வெளியில் உருவாகும் உறவுக்கு பெயர் நட்பு. நம் இரத்த பந்தத்துக்குப் பெயர் சொந்தம். ‘சண்டையில் பிரிந்துவிடுவோமோ’ என்ற பயத்திலேயே வெளி உறவிடம் பழகுவோம். ஆனால், ‘என்ன சண்டை வந்தாலும் பிரிய மாட்டோம்’ என்ற நம்பிக்கையில் அடிக்கடி சண்டைப்போடுவது இரத்த பந்தத்திடம் மட்டும்தான்.

வெளியாட்களிடம் சண்டை போட்டால் மீண்டும் பேசுவதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால், சொந்த பந்தத்துக்கு இடையே எத்தனை சண்டை வந்தாலும் பிறகு ஒன்றும் நடக்காதது போல் பேசுவோம். வெளி உறவில் பிரிவு நிரந்தரம். சொந்தத்தில் இணைவது பிரிவது எல்லாம் சகஜம். ஆக, எத்தனை நாடுகளுக்குச் சென்றாலும் இறுதியில் சொந்த ஊர்தான் நமக்கு அமைதி நிறைந்த இடமாக இருக்கும். அதேபோல், எத்தனை பேருடன் வெளியில் பழகினாலும் இறுதியில் இரத்த பந்தத்துடன் இணைவது, ‘அமைதியோ அமைதி.’

மொபைல் போனில் உறவுகளைத் தேடாமல், இருக்கும் உறவுகளுடன் அன்பாக நேரம் செலவிட்டாலே இணைவது, பிரிவதெல்லாம் உங்களுக்கு அழகானவையாக மாறிவிடும்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT