பொதுவாக இரட்டை சுழி என்பது அனைவருக்கும் இருக்காது. எங்கோ. யாருக்கோ ஒருவருக்குத்தான் அப்படி இருக்கும். NHGRI ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 5 சதவிகித பேருக்குத்தான் இப்படி இரட்டைச் சுழி உள்ளதாகக் கூறுகிறது.
இரண்டு சுழி உள்ள ஆண்களுக்கு வாழ்வில் இரட்டை திருமணம் நடைபெறும் என்று கிராமப்புறங்களில் கூறுவது உண்டு. இது உண்மை இல்லை. இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
பொதுவாக, குழந்தைகள் பிறக்கும்போது இரண்டு சுழிகள் காணப்படுவதற்கு மரபணுவே முக்கியக் காரணமாகிறது.பரம்பரையின் காரணமாக, அதாவது அவர்களின் முன்னோர்களான தாத்தா பாட்டி வழியில் யாருக்கேனும் இரட்டை சுழி இருந்தால் இவர்களுக்கும் வரலாம் எனக் கூறப்படுகிறது.
ஜோதிட ரீதியாகக் கூறப்படுவது இரட்டைச் சுழி உள்ளவர்கள் நேரடியாக எதையும் பேசுபவராகவும், எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவராகவும், அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஏதேனும் கஷ்டம் எனில் முதலில் ஓடிப் போய் உதவ நிற்பவராகவும் இருப்பார் என்று கூறுகிறது.
சாமுத்திரிகா லட்சணம், தலையில் ஒரு சுழி வலமாக பெற்றவர்கள் அதிகமான சொந்த பந்தங்கள் பெற்றவராக இருப்பார்கள் என்றும், இரண்டு சுழியில் ஒன்று வலம்புரியாகவும் மற்றொன்று இடம்புரியாகவும் இருக்கப் பெற்றவர்கள் கொஞ்ச காலம் வறுமையிலும் பின்னாளில் செல்வ நிலையையும் அடைவார்கள் என்று குறிப்பிடுகிறது.
குழந்தைக்கு தலையில் இரண்டு சுழிகள் இருந்தால் சுட்டித்தனமும் விளையாட்டும் குறும்பும் அவர்களிடம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலருக்கு முதுகில் சுழி இருக்கும். அதேபோல், சிலருக்கு முன் நெற்றியில் சுழி இருக்கும். இவையெல்லாம் மரபணு சார்ந்ததே. நம் முன்னோர்களில் யாருக்கேனும் இம்மாதிரி இருந்திருக்கலாம்.
சில நம்பிக்கைகள் நம்மை சுவாரசியமாக்கும். அதில் இதுவும் ஒன்று. எனவே, இரட்டை சுழி உள்ளவர்களை வினோதமாக பார்க்கத் தேவையில்லை.