கண் திருஷ்டியினால் அடிக்கடி சோர்வாக இருத்தல், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள், குழந்தைகளுக்குள் அடிக்கடி ஏதாவது பிரச்னைகள், மனஸ்தாபங்கள், கடன் பிரச்னைகள், குழப்பமான மனநிலையில் இருத்தல் போன்ற எதிர்மறை சக்திகள் மறைந்து மனம் லோசாகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்பட மூலிகை சாம்பிராணி போடுவது சிறந்த பரிகாரமாகும்.
இனி, இந்த மூலிகை சாம்பிராணியை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதைப் பார்க்கலாம். மகாலட்சுமி கடாட்சம் மிகுந்த மருதாணி விதைகள் 125 கிராம், திருஷ்டி போக்கும் வெண் கடுகு, நாய் கடுகு தலா 125 கிராம், திருஷ்டி போக்கும் குங்கிலியம் 50 கிராம், கட்டி சாம்பிராணி 125 கிராம், பச்சை கற்பூரம் 15 கிராம், ஜவ்வாது 1 சிறிய பாட்டில், அருகம்புல் பொடி, வில்வப் பொடி, வேப்பிலை பொடி தலா 25 கிராம் (இந்த 3 பொடிகள் மருத்துவ குணம் நிறைந்தவை என்பதால் வீட்டில் இருக்கும் விஷ ஜந்துக்கள், கொசு, ஈ ஆகியவற்றை அண்ட விடாது) ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொடி வகைகள் மற்றும் ஜவ்வாது தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக உரலில் இட்டு நன்கு இடித்து விட்டு, இறுதியில் பொடி வகைகளை அதனோடு சேர்த்து இடித்து ஒன்றுசேர எடுத்துக் கொள்ளவும். (மிக்ஸியில் திரிக்கக் கூடாது). பின்னர் தெய்வீக வாசனை மிகுந்த ஜவ்வாதுவை சேர்த்து ஒன்றுசேர கலந்து விடவும்.
இவை எல்லாம் சேர்ந்து மொத்தமாக முக்கால் கிலோ அளவு கிடைக்கும். இதை ஒரு இறுக்கமான மூடி போட்ட பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். வீட்டில் சாம்பிராணி போடும்போது இதில் 1 ஸ்பூன் போட்டால் வீடு முழுவதும் நல்ல வாசனையுடன் இருப்பதோடு, தீயசக்திகளை விரட்டி விடும்.
இனி, இந்த சாம்பிராணியை போடும் முறை குறித்துக் காண்போம். தேங்காய் சிரட்டையில் (கொட்டாங்குச்சி) 5 எடுத்து வெளியில் வைத்து அல்லது விறகு அடுப்பு இருந்தால் அதனுள் போட்டு தீ வைத்து நன்றாக எரிந்து முடிந்ததும் அந்தக் கனலை சாம்பிராணி தட்டில் வைத்து அந்தத் தட்டை ஒரு அகன்று விரிந்த சட்டியில் வைத்துக் கொள்ளவும். அவ்வாறு செய்வதால் தீ கனல் கையைச் சுடாது. பின்னர் சாம்பிராணி தட்டில் உள்ள கனலில் முதலில் அரை ஸ்பூன் மூலிகை சாம்பிராணி போட்டு வீடு முழுமைக்கும் கொண்டு சென்று காட்டலாம். மிகுந்த பாதுகாப்பாக துணி மணிகளில் பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும். கடைசியாக அரை ஸ்பூன் மூலிகை சாம்பிராணி போட்டு குழந்தைகள் போகாமல் இருக்கும் இடத்தில் வீட்டின் ஒரு மூலையில் வைத்து விடலாம்.
இந்த மூலிகை சாம்பிராணியை தினமும் போட முடியாவிட்டாலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அஷ்டமி, பௌர்ணமி போன்ற அம்பாளுக்கு உகந்த நாட்களிலும் போட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். தீய சக்திகள் பறந்தோடி விடும். இப்படிச் செய்வதால் அடிக்கடி திருஷ்டி சுற்றி போட வேண்டாம். ஞாயிறு, அமாவாசை தினங்களில் திருஷ்டி சுற்றி போடலாம்.
இப்படி மூலிகை சாம்பிராணி தூபம் போடுவதால் வீட்டில் இருக்கும் திருஷ்டிகள் நீங்குவதோடு, உடலில் இருக்கும் சோர்வு, பயம் போன்றவையும் நீங்கி புத்துணர்ச்சியோடு தினமும் இருக்கலாம்.