வெற்றி பெற்ற இளைஞர் 
வீடு / குடும்பம்

வாழ்க்கையின் வெற்றிக்கு அவசியம் வேண்டும் இந்த 7!

பொ.பாலாஜிகணேஷ்

ந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். ஏழை முதல் கோடீஸ்வரர் வரை மக்களுக்கென இருக்கும் ஒரே பொதுவான எண்ணம் வெற்றி என்றே கூறலாம். நம் அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு மாற்றங்களை நாம் ஏற்படுத்தினால் அது நம்மை வெற்றிக்கான பாதைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும். வெற்றிக்கு அழைத்துச் செல்லும் 7 எளிய வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆர்வம் உடையவராக இருங்கள்: வாழ்க்கையில் புதிய விஷயங்களை ஆர்வமுடன் தேடும் நபராக இருங்கள். தெரிந்த விஷயமே போதும் என்ற மனப்பான்மையை மாற்றி, புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி செய்யத் தவறாதீர்கள்: வேலை, குடும்பம் என்று பம்பரமாய் சுற்றிச்சுழலும் இந்த பரபரப்பான உலகில் தனக்கான, ‘மீ டைம்’ என்பதையே நம்மில் பலர் முற்றிலுமாக மறந்தே விட்டோம். உடல் ஆரோக்கியமும் அதில் அடங்கும். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் உடலுக்கென ஒதுக்கி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய செயலில் ஈடுபடுங்கள்.

3. வாசிப்பு பழக்கம்: ‘ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள், அவனே எனது வழிகாட்டி!’ என்றார் ஜூலியஸ் சீசர். உலகில் தலைசிறந்த தலைவர்கள் அத்தனை பேரும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். புத்தக வாசிப்பிற்கு அப்படி ஒரு பவர் என்றே கூறலாம். ஒவ்வொரு புத்தக வாசிப்பின் முடிவிலும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு ஊன்றுகோல் நிச்சயம் நமக்குக் கிடைக்கும்.

4. பொழுதுபோக்கில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்: உங்கள் மனம் மற்றும் மூளைக்கு ஓய்வும் புத்துணர்ச்சியும் மிகவும் அவசியம். ஒரு பயனுள்ள பொழுதுபோக்கில் உங்களை அன்றாடம் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

5. தியானம் செய்யுங்கள்: உங்கள் மன அலைகளை உங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தாலே பல விஷயங்களை உங்களால் எளிதில் செய்து முடிக்க முடியும். மனதை ஒருநிலைபடுத்த தியானம் செய்வது மிகவும் அவசியமான ஒன்று.  தினமும் ஒரு குறிப்பிட்ட மணி நேரம் தியானம் செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் அது பெரும் மாற்றத்தை உருவாக்கும்.

6. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்: ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்பார்கள். நமது வாழ்க்கையின் நகர்வுகளுக்கும் நமது எண்ணத்திற்கும் பல வகையில் தொடர்புகள் உண்டு என பல ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதை நம்மில் பலர் கேட்டிருப்போம். நமது சிந்தனைகள், எண்ணங்கள் பல வகையில் நமது வாழ்க்கையுடன் தொடர்புடையது. எனவே, நமது எண்ணங்கள் எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்களோடு எப்போதும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

7. நல்ல நண்பர்களோடு பழகுங்கள்: நம்மைச் சுற்றி எப்போது பாசிட்டிவான நபர்களை வைத்துக்கொள்வதே சிறந்தது. நம் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாகவும், நமது வளர்ச்சியைக் கண்டு மனமார மகிழும் நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கையில் பல தடைகளை சுலபமாகக் கடந்து விடலாம். அதனால்தான் நாம் யாருடன் பழகுகிறோம், நாம் யாரை நெருக்கத்தில் வைத்திருக்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT