Things women should definitely be careful about
Things women should definitely be careful about https://eluthu.com
வீடு / குடும்பம்

பெண்கள் கண்டிப்பாக உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள்!

நான்சி மலர்

ந்தக் காலத்தில் பெண்கள் தனியாகப் பயணம் செய்யவேண்டிய சூழல் அதிகமாகவே உள்ளது. படிப்பிற்காக, வேலைக்காகவென்று எங்கேயேனும் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், அவையெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அப்போதெல்லாம் பெண்கள் தங்கள் துணைக்கு யாரையேனும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க முடியாது.

அப்படிப் பயணிக்கும் சமயங்களில் நேரம், காலம் பார்த்து சரியாக சென்றுவிட முடியும் என்று கணிக்க முடியாது. சில சமயங்களில் சீக்கிரமே சேர வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியும். அப்படியில்லையேல் தாமதமாகலாம். இப்படித் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பிரச்னைகள் வரும். அதையெல்லாம் சமாளித்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் எப்போதும் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனமாக ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதை உணர்த்துவதற்குத்தான் இந்தக் கதை,

தமிழ்நாட்டில் பேருந்தில் தொலைதூரப் பயணம் செய்திருந்தால் தெரியும். இரவு நேரங்களில் பேருந்து ஹைவேஸில் இருக்கும் கடைகளில் சிறிது நேரம் நிற்கும். அந்த நேரத்தில் உணவு, காபி போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். பாத்ரூம் போக வேண்டும் என்றாலும் சென்றுவிட்டு வரலாம்.

அப்படி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அவசரமாக பாத்ரூம் போக வேண்டும் என்று காத்திருந்தார். பேருந்தும் வந்து ஒரு ஹைவேஸ் கடையிலே நின்றது. அங்கேயிருக்கும் பாத்ரூமோ ஒதுக்குப்புறமாகவும், வெளிச்சம் சற்று குறைவான இடத்திலும் இருந்திருக்கிறது. இதுவே அப்பெண்ணுக்கு சரியாகப் படவில்லை என்றாலும், அவசரத்திற்கு வேறு வழியில்லை என்று பேருந்திலிருந்து இறங்கி அங்கே சென்றுள்ளார்.

அங்கே பெண்களின் பாத்ரூம் அருகிலேயே சில ஆண்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், அந்தக் கூட்டத்தில் இருந்து ஒருவர், ‘உள்ளே யாருமில்லை போங்க’ என்று இப்பெண்ணிடம் கூற, இந்தப் பெண்ணோ பாத்ரூமின் வாசலிலே ஈரமான காலடித்தடங்கள் பாத்ரூமிற்குள் செல்வது போன்று இருப்பதை பார்த்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த பெண், இதற்கு மேல் அங்கிருப்பது நல்லதில்லை என்று உணர்ந்து உடனே அந்த இடத்தை காலி செய்துவிட்டு பேருந்துக்கு வந்துவிட்டார்.

பேருந்திற்கு வந்த பிறகும் அப்பெண்ணுக்கு ஏதோ சரியில்லாதது போலவே தோன்ற, பேருந்தில் அமர்ந்தவாறே அந்த பாத்ரூமை கவனித்திருக்கிறார். சற்று நேரம் கழித்து அந்த பாத்ரூமிலிருந்து ஒருவர் வெளியிலே வந்து அங்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தில் சேர்வதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.

இது தெரியாமல் உள்ளே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பார்க்கையிலேயே பயமாக உள்ளதல்லவா? சில சமயங்களில் நம்முடைய உள்ளுணர்வு சொல்வதை தட்டாமல் கேட்க வேண்டும். இதை பெண்களுடைய அதிசய சக்தி என்றே கூறலாம். பெண்களின் உள்ளுணர்வு தவறாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். ஒரு இடமோ, சூழலோ சரியில்லை என்று தோன்றும்போது அங்கிருந்து விலகி வந்து விடுவது நல்லதாகும்.

பெண்கள் தனியாகப் பயணிக்கும்போது கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே பயணிப்பது மிகவும் நல்லது. போனிலோ அல்லது மெசேஜிலோ எங்கேயிருக்கிறீர்கள், என்ன செய்யப் போறீர்கள் போன்றவற்றை வீட்டில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கலாம்.

‘காவலன் ஆப்’ போன்ற ஆப்களை போனிலே வைத்துக்கொள்வது சிறந்ததாகும். அவசர காலத்தில் உதவியாக இருக்கும். பர்ஸில் எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே போன்றவற்றை வைத்துக்கொள்வது மிகவும் உத்தமம். தனியாகப் பயணிக்கும் பெண்கள் எல்லா சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஏதேனும் பிரச்னைகள் வந்தால் நம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்கள் என்று காத்திருக்காமல், ‘தன் கையே தனக்குதவி’ என்று துணிந்து செயல்படுவது உசிதமாகும்.

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT