குழந்தைகள் விரல் சப்புவது ஒரு பொதுவான பழக்கமாகும். பெரும்பாலும் அவ்வாறு செய்வது அவர்களுக்கு ஆறுதல் மற்றும் பாதுகாப்பு உணர்வை அளிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதைப் பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டால் பல பிரச்சினைகள் மற்றும் பேசுவதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்தப் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிக்க சில குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்கள் குழந்தை விரல் சப்புகிறது என்பது உங்களுக்குத் தெரிய வந்தால், அதற்கு மாற்றாக வேறு பொருள்களை வழங்குங்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் சப்புவதற்கு ஏற்ப சிலிக்கான் நிப்பிள்கள் கிடைக்கின்றன. அதில் திராட்சைப் பழம், மாதுளை முத்துக்கள் போன்றவற்றை போட்டு குழந்தைகளிடம் கொடுத்தால், அது ஒரு ஆரோக்கிய செயல்முறையாக மாறிவிடும்.
குழந்தைகள் அமைதியாக இருக்காமல் அவர்களது விரல்களை எப்போதும் பிசியாக வைத்திருங்கள். புதிர்களைத் தீர்ப்பது, வெளியே சென்று விளையாடுவது வண்ணம் தீட்டுதல் போன்ற செயல்களில் தொடர்ச்சியாக பிள்ளைகளை ஈடுபடுத்துங்கள். இது அவர்களின் விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து திசைத்திருப்ப உதவும்.
உங்கள் குழந்தை தனது விரல்களை சூப்புவதைத் தானாகவே தவறு என உணர்ந்து வெளியே எடுக்கும்போது அவர்களைப் பாராட்டுங்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் எதையாவது கொடுங்கள். இது அவர்களுக்குள் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்தி, விரல் சூப்பும் பழக்கத்தை தானாகவே கைவிட உதவும்.
சில தருணங்களில் குழந்தைகள் விரல் சூப்புவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அதுபோன்ற சமயங்களில் கசப்பு சுவையுடைய எதையாவது கையில் தடவி விடுங்கள். சில குழந்தைகளுக்கு கையில் வேப்பிலையை அரைத்து தடவி விடுவார்கள். இது அவர்களது செயலானது தவறு என்பதைத் தெரியப்படுத்தி சரி செய்ய உதவும்.
நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் குழந்தை விரல் சப்புவதை நிறுத்தவில்லை என்றால் உடனடியாக ஒரு நல்ல குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தைகள் விரல் சப்புவது பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், காலப்போக்கில் அது அவர்களுடைய பல்வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
குழந்தைகளுடைய இந்த பழக்கத்தை சரி செய்வதற்கு நேரம் மற்றும் பொறுமை தேவை. தொடர்ச்சியாக இதுபோன்ற முயற்சிகளை நீங்கள் மேற்கொண்டு வந்தால் மட்டுமே, உங்கள் குழந்தைகள் விரல் சப்புவதை தானாகவே நிறுத்துவார்கள். இல்லையேல் ஒருபோதும் உங்களால் அதை தடுக்க முடியாது.