நாம் பணியாற்றும் அலுவலகங்களிலும், நம் உறவினர்களிடமும், நம் நண்பர்களிடமும் நாம் பெறும் அவமானங்கள், அசிங்கங்கள் ஆகியவற்றை மனதிலேயே வைத்திருந்தால் அது நமக்குத் தீங்குதான். ஒரு இடத்தில் நாம் அசிங்கப்படுகிறோம் என்றால், அதை அந்த இடத்திலேயே தூக்கி எறிந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று. அதை விட்டுவிட்டு, ‘என்னை அசிங்கப்படுத்துவர்களை, அவமானப்படுத்தியவர்களை நான் மீண்டும் அதேபோல் செய்வேன்’ என நீங்கள் அந்த எண்ணத்தை உருவாக்கிக்கொள்ளும்போதுதான் உங்களுக்குப் பிரச்னையே உருவாகிறது.
அதிலும் தொலைக்காட்சி சீரியல்களை பார்க்க ஆரம்பித்தவுடன் பலருக்கும் பழிவாங்க வேண்டும், அடுத்தவரை ஏதாவது துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. ‘சீரியல்கள் எல்லாம் ஒரு பொழுதுபோக்கு. அதில் செய்வதெல்லாம் ஒரு நடிப்பு’ என அதோடு நம் மனநிலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சரி, நீங்கள் நினைக்கலாம் ‘எப்படி சூடு சொரணை இல்லாமல் வாழ்வது? இது சாத்தியமா?’ என்று கேட்கலாம். நிச்சயமாக இது சாத்தியமே. இதற்கு உதாரணமாக புத்தரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சின்ன சம்பவத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
புத்தர் ஒரு சமயம் கிராமங்கள் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். எல்லாவற்றுக்கும் புத்தர் அமைதியாய் இருந்தார்.
அவமானப்படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது. “யோவ்… இவ்வளவு திட்டறோமே, சூடு சொரணை எதுவும் உனக்கு இல்லையா?” என்று கடைசியில் கேட்டேவிட்டார்கள்.
அதைக் கேட்டு சிரித்த புத்தர், “இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். நான் எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். அந்தப் பரிசுப் பொருட்கள் அனைத்தும் கொடுத்தவர்களையே சேர்ந்தது. இங்கே ஏகப்பட்ட வசைமொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப்போவதில்லை. இங்கேதான் தந்துவிட்டுப் போகப்போகிறேன். எனவே அதுவும் உங்களைத்தான் சேரப்போகிறது. ஆகவே, என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நமது மனம் முடிவெடுக்காவிட்டால், நம்மை யாராலும் காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத்தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
இப்பொழுது ஒன்றை மட்டும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல விஷயம் நடந்தாலும் சரி, கெட்ட விஷயம் நடந்தாலும் சரி அதை அந்த இடத்திலேயே வீசி எறிந்து விட்டு வாருங்கள். உங்கள் மனம் சிறகடித்து பறக்கும். நீங்கள் வீசி எறிவது சூடு சொரணை இந்த இரண்டையும்தான். இப்படிச் செய்து பாருங்கள் உங்கள் லைஃப் ஸ்டைலே மாறிவிடும்.