வழக்கத்திற்கு மாறாக, அதிகளவு எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை வீட்டிலோ அல்லது விசேஷங்களிலோ உண்ணும்போது, அதன் பின்விளைவாக அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்றிலும் தொண்டையிலும் லேசான எரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். இவற்றைத் தவிர்க்கக்கூடிய வழி முறைகளை இந்தப் பதிவில் காண்போம்.
வெதுவெதுப்பான நீரை அருந்துவது, எண்ணெய் சேர்ந்த உணவுகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து மென்மைப்படுத்தித் தர உதவுகிறது. இதனால் ஜீரணம் சுலபமாக நடைபெறும்.
வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஓமம் கலந்து குடிப்பது, வயிற்றில் வாய்வு, உப்புசம், அஜீரணம் போன்றவை ஏற்படுவதைத் தடுத்து, இதமான செரிமானத்திற்கு உதவுகிறது.
ஒரு ஆயிரம் அடி தொலைவு நடந்து விட்டு வருவது சீரான செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் உதவி புரியும்.
அடுத்த நாள், உணவில் நார்ச்சத்து மிகுந்த நட்ஸ்களையும் விதைகளையும் சிறிதளவு சேர்த்து உண்பது ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
பிசுபிசுப்புத் தன்மை கொண்ட எண்ணெய் சேர்த்த உணவை உண்டபின் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது நலம். ஏனெனில், அது ஜீரண மண்டலத்துக்கும் ஈரலுக்கும் சுமையை அதிகரித்து, சீரான செரிமானத்துக்கு தடையை உண்டாக்கும்.
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஓட்ஸ், டாலியா போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்வது ஜீரண உறுப்புகளை சுத்திகரிக்கவும், சிறு சிறு சிதைவுகளை குணப்படுத்தவும் உதவும்.
வறுத்த ஜீரகத்தை தயிருடன் கலந்து உண்பது, அசிடிட்டி மற்றும் எவ்வித ஜீரண கோளாறுகளும் உண்டாகாமல் தடுக்கவல்லது.
அதிகளவு ஃபிளவோனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த க்ரீன் டீ குடிப்பதால் ஜீரண உறுப்புகளின் ஆக்சிடேடிவ் பளு சமநிலைப்படுத்தப்படுகிறது.
ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஸ்பைசி உணவுகளைத் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் உட்கொண்ட பின், மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி ஆரோக்கியம் காப்போம்.