Happy man Img Credit: Feepik
வீடு / குடும்பம்

மாதச் சம்பளத்தை வாங்கும் ஆண்களுக்கு பேரானந்தம் தருவது என்ன?

ரா.வ.பாலகிருஷ்ணன்

ஆண்களின் வாழ்வில் மகிழ்ச்சியின் எல்லை என்பது தங்களது குடும்பத்தின் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டே அமைகிறது. இங்கு பல ஆண்கள், தங்களுக்கென ஏதும் செய்து கொள்ளாமல் குடும்பத்தின் நலனை மட்டுமே பெரிதாய் கருதுகின்றனர். இள வயதில் சுற்றித் திரியும் இளைஞர்கள் கூட, குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் உழைக்கும் பாதையில் தன்னையே அர்ப்பணித்து விடுவார்கள். அதிலும் திருமணமான ஆண்கள் ஒரே வேலையை நம்பி இருந்தால், தற்கால செலவுகளை சமாளிப்பது பெருங்கஷ்டம் தான். மாதச் சம்பளம் வாங்கும் ஆண்களின் வாழ்வோ, இன்னும் மோசம். சம்பளம் வாங்கிய அடுத்த ஒரு வாரத்திற்குள் கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகி விடும். திடீரென்று ஏதேனும் செலவு ஏற்பட்டால், யாரிடம் கேட்பது? எப்படி கேட்பது? என்ற கேள்விகள் மனதில் எரிமலையாய் வெடிக்கத் தொடங்கி விடும்.

அடுத்த மாத சம்பளம் எப்போது வரும் என்பதனை மாதத் தொடக்கத்திலேயே எதிர்ப்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். "தேவைகள் மலை போல் கண் முன் நிற்க, பணம் தண்ணீரைப் போல் செலவாக" கையில் இருப்பு ஏதுமின்றி, அடுத்த செலவை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வியுடன் தான் ஒவ்வொரு நாளும் நகர்கிறது. எத்தனை செலவுகள் மற்றும் துன்பங்கள் வந்தாலும் ஆண்களை மன தைரியத்தோடு நகர வைப்பது "பார்த்துக் கொள்ளலாம்" என்ற தாரக மந்திரம் தான்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக, தன்னை மறந்து உழைத்துக் கொண்டிருக்கும் ஆண்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தனது ஆசைகளையும், தேவைகளையும் குறைத்துக் கொள்ளும் பெண்களையும் இங்கு பாராட்ட வேண்டும்.

20,000 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் ஒரு ஆண், தற்கால சூழலில் தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திணறுகிறான். இருப்பினும், ஒருவழியாக அனைத்தையும் சமாளித்து தான் அடுத்தடுத்த நகர்வுகளில் உலகச் சூழலோடு தன்னை இணைத்துக் கொள்கிறான். மளிகைச் சாமான், பெட்ரோல், மருத்துவ செலவு, மின் கட்டணம் மற்றும் சில அத்தியாவசியத் தேவைகள் என ஒரு நடுத்தர குடும்பத்தின் மாத பட்ஜெட் நீண்டு கொண்டே போகும். இத்தனை செலவுகளையும் தனி ஆளாய் சமாளிப்பது என்பது சற்று சிரமம் தான் என்றாலும், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே ஒவ்வொரு ஆண்மகனின் மகிழ்ச்சியும் அடங்கி இருக்கிறது.

குடும்ப செலவுகளை சமாளிக்க சிறுசிறு பகுதிநேர வேலைகளை செய்து வரும் ஆண்களும் இங்கு ஏராளமாக உள்ளனர். அவசரத் தேவைகளைத் தவிர்த்து, வேறு எந்த செலவிற்கும் கடன் வாங்குவதை ஆண்கள் தவிர்ப்பது நலம். இல்லையேல் அதற்கும் வட்டி செலுத்தி, தன் வாழ்வை மேலும் இறுக்கமாக்கி கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். இருப்பினும் சில திடீர் செலவுகள் தான் நம்மை கடன் வாங்கும் அளவிற்கு இழுத்துச் செல்லும். அச்சமயங்களில் உடனே கடன் வாங்குவதை விட மனைவி மற்றும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனை பெற்று, அதன்படி செய்வது தான் சிறந்த தீர்வைத் தரும்.

இத்தனை கஷ்டத்திலும் தனது குடும்பத்தின் தேவைகளை கடன் வாங்காமல் ஒருவன் பூர்த்தி செய்து விட்டால், அதுவே, ஆண்களுக்கு பேரானந்தத்தை தரும்.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT