life lessons 
வீடு / குடும்பம்

பெரியவர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கைப் பாடங்கள் என்னென்ன?

A.N.ராகுல்

நாம் – நம் வாழ்க்கையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, பெரியவர்களால் நமக்குக் கிடைக்கும் ஞானம் ஒரு கலங்கரை விளக்கமாக பயன்படும். அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், சோதனைகள் மற்றும் வெற்றிகள் பல தலைமுறைகளைத் தாண்டிய விலைமதிப்பற்ற பாடங்களாகும். எனவே, நம் பெரியவர்கள் கூறும் அனைத்தையும் பின்பற்றாவிட்டாலும் கட்டாயம் செவிசாய்க்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. வாழ்க்கைக் கண்ணோட்டம் மற்றும் முன்னுரிமைகள்:

நம் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று நம் பெரியவர்கள் அடிக்கடி நமக்கு நினைவூட்டுவார்கள். குறிப்பிட்ட வயதிற்குபிறகு உலகின் பிற பகுதிகளுக்குப் பயணித்து ஆராய வேண்டும் என்று ஊக்குவிப்பார்கள். “என்னதான் உலகின் ஒரு சிறிய மூலையில் பிறந்தாலும், ஞானத்தை வெளியே சென்று பெருகிக்கொள்ளுங்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பதுபோல் உடலில் தெம்பு இருக்கும்போதே பொன், பொருள் மற்றும் இருப்பை உருவாக்கிக்கொள்வதே அதன் அர்த்தம்.

2. குடும்பப் பிணைப்புகள் இணைப்பு:

"கடினமாக உழைக்கவும்; ஆனால், உங்கள் குடும்பத்திற்காக வாழவும்." என்று அவர்கள் கூறும் அறிவுறுத்தல் மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்க்கையின் சலசலப்புக்கு மத்தியில், நம் பெற்றோர், அவர்களோடு உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவழித்து, அன்பையும் நன்றியையும் பரிமாறிக்கொண்டு வளர்த்த அந்த உறவுகளை அடுத்த தலைமுறையாகிய நாமும் பேணிக் காப்பது முக்கியம் என்பார்கள். காரணம், என்னதான் கடும் உழைப்பை கொட்டி பணத்தைச் சம்பாதித்து வைத்தாலும், உண்மையான உறவுகளின் சம்பாதிப்பே நம்மை நிம்மதியோடு வாழ வைக்கும் என்பது அவர்களின் அடிப்படை அறிவுறுத்தலாகும்.

3. உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்:

நம் பெரியவர்கள் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் எல்லோருக்கும் பெரிய முன்னோடியாய் விளங்குவர். காரணம் அந்தக் காலத்தில் இருந்த இயற்கை வளங்கள் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக செயற்கையாக மாறிக்கொண்டிருக்கின்றன. அதனால் நம் பெரியவர்கள் கூறும் சில அடிப்படை உணவு பழக்கங்களைப் பின்பற்றினாலே ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளை சிறிது காலம் தள்ளி போடலாம்.

4. நிதி சார்ந்த ஞானம்:

அந்தக் காலத்தில் வாழ்ந்தவிதம் மற்றும் பொருளாதார சூழ்நிலை, இன்றைய நவீன உலகத்தை ஒப்பிடும்போது முழுவதுமாக மாறிவிட்டன. ஆனால், எதிர்கால தேவைக்கான சிந்தனை அன்றைக்கும் இன்றைக்கும் ஒன்றுதான். அதனால் எந்தெந்த தேவைகளை மனதில் வைத்து சேமிப்புகளைக் கையாண்டார்கள் போன்ற விஷயங்களை அவர்கள் பகிரும்போதோ அல்லது அறிவுறுத்தும்போதோ நாம் செவி சாய்ப்பது நம்முடைய வருங்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

5. பொறுமை மற்றும் நெகிழ்ச்சி:

இன்றைய காலகட்டத்தில் பிரச்னைகளுக்கு பஞ்சமே இல்லை. அதை ஒரே வரியில் ‘இதுவும் கடந்து போகும்’ என்று அவர்கள் நமக்கு அடிக்கடி நினைவூட்டுவார்கள். காரணம், நம் பெரியவர்கள் பல வாழ்வியல் புயல்களை எதிர்கொண்டு மற்றும் பல வரலாற்றுப் பின்னடைவுகளைப் படிக்கற்கள்போல கடந்து வந்ததால்தான் அவர்களுக்குள் பொறுமை, நல்லொழுக்கங்கள் உருவாகியிருக்கும். அந்த அனுபவங்களை அவர்கள் உங்களுடன் பகிரும்போது, அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வரப்போகும் இன்னல்களை உங்களால் சமாளிக்க முடியும்.

6. அன்பு மற்றும் மன்னிப்பு:

"பகையை லேசாகப் பிடி," என்று அவர்கள் அவர்கள் அடிக்கடி உணர்த்துவார்கள். சண்டைகளை வளர்த்துக்கொள்ள அவர்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். நம் வாழ்க்கையில் கசப்பான தருணத்தை அடைவது மிகவும் சுலபம். அதனால் தேவைப்படும்போது மன்னித்து, பொறுமையைக் கடைபிடியுங்கள் என்று நம் பெரியவர்கள் நமக்கு அடிக்கடி அறிவுறுத்துவார்கள். அதாவது நம்முடைய காலம் கடந்துபோனாலும் நாம் வெளிக்காட்டிய அன்பு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய மரபு என்று அவர்கள் நமக்கு உணர்த்தும் ஒரு முக்கியமான விஷயம்.

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

SCROLL FOR NEXT