வங்கிகளால் பொதுமக்களுக்கு லாக்கர் வசதி வழங்கப்படுகிறது. லாக்கரில் முக்கிய ஆவணங்கள், நகைகள், பாதுகாப்பு தேவைப்படும் மற்ற பொருட்களை வைத்துக் கொள்ளலாம். இந்த லாக்கரை வைத்திருப்பவர் மட்டுமே திறக்க முடியும். அதற்கான சாவி வங்கி மேலாளரிடம் ஒன்றும், வாடிக்கையாளரிடம் ஒன்றுமாக இருக்கும். வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை சேமித்து வைக்க லாக்கர் வசதிகளை வழங்குகின்றன. லாக்கரின் அளவைப் பொறுத்து அதற்கான கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கும். ஒரு சாவியை உரிமையாளரிடம் வழங்கி, மற்றொரு சாவியை வங்கி தன்னிடம் வைத்திருக்கும்.
ஒரு லாக்கரை இரண்டு சாவிகள் இருந்தால்தான் திறக்க முடியும். ஆனால், எதிர்பாராதவிதமாக நம்முடைய லாக்கர் சாவி தொலைந்து விட்டால் அல்லது திருடு போய்விட்டால் கவலைப்பட வேண்டியதில்லை. லாக்கரின் சாவி தொலைந்ததும் முதல் வேலையாக வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்பின்பு லாக்கர் எண் தொடர்பான அனைத்து விவரங்களையும் கொண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுக்க வேண்டும்.
லாக்கரை திறப்பதற்கான ஆப்ஷனில் ஒன்று சாவி தொலைந்து விட்டால் டூப்ளிகேட் சாவியை வைத்து லாக்கர் திறக்கப்படும். ஒருவேளை இந்த நடைமுறை இல்லாதபட்சத்தில் வாடிக்கையாளரின் ஒப்புதலுடன் லாக்கரை உடைக்கும் செயல் முறையை வங்கிகள் செய்யும். அதன் பின் லாக்கரில் உள்ள விலைமதிப்பற்ற பொருட்கள், ஆபரணங்கள் போன்ற அனைத்துப் பொருட்களையும் இன்னொரு லாக்கருக்கு மாற்றி வாடிக்கையாளருக்கு புதிய சாவி வழங்கப்படும். ஆனால், இதற்கான அனைத்து செலவையும் வாடிக்கையாளர்தான் ஏற்க வேண்டும். வங்கி நம்மிடம் புதிய லாக்கருக்கான கட்டணத்தை வசூலிக்கும்.
லாக்கரை உடைக்கும் சமயம் வாடிக்கையாளர் மற்றும் வங்கி ஊழியர்கள் என இரு தரப்பினரும் இருத்தல் அவசியம். ஒருவேளை லாக்கர் கூட்டுக்கணக்காக இருப்பின் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அந்த சமயத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை வாடிக்கையாளர் வர முடியாத நிலையில் இருந்தால் அவர் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
லாக்கரை உடைப்பதற்கான செலவு மற்றும் தொலைத்த சாவியை மாற்றுவதற்கு ஆகும் செலவு ஆகியவை வாடகைதாரரிடம் இருந்துதான் வசூலிக்கப்படுகிறது. அப்படி வசூலிக்கப்படும் கட்டணம் ஒவ்வொரு வங்கியைப் பொறுத்தும் மாறுபடும்.
எதிர்காலத்தில் ஒருவேளை தொலைந்த சாவி கண்டுபிடிக்கப்பட்டால் வங்கியிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்ற உறுதி மொழியும் வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது.
ஒருவேளை லாக்கர் வைத்திருப்பவர் இறந்து விட்டால் லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் என்னவாகும்? அதை எப்படி எடுக்க முடியும்? என்ற கேள்விக்கு லாக்கருக்கு நம்மால் நாமினி பெயரை சேர்க்க முடியும். அதற்கென்று தனியாக விதிமுறைகள் உள்ளன. அதன்படி நாமினியை நியமித்தோம் என்றால் அவருக்குப் பின் நாமினிக்கு லாக்கரை திறந்து அதனுள் இருக்கும் பொருட்களை வெளியே எடுக்க உரிமை உண்டு. வங்கியில் சரிபார்ப்பு சோதனைக்குப் பின்பு அனுமதி வழங்கப்படும். நாமினி விரும்பினால் லாக்கரை தொடரலாம் அல்லது உடைமைகளை எடுத்த பிறகு கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
லாக்கர் கீ வைத்திருப்பவர்கள் கவனமுடன் அதனை பத்திரமாக வைத்துக்கொள்வது தேவையில்லாத பிரச்னைகளையும், செலவுகளையும் தவிர்க்க உதவும்.