hippocampus 
வீடு / குடும்பம்

நம் உடலில் ஹிப்போகாம்பஸ் எங்குள்ளது? இதன் செயல்பாடுகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ஹிப்போகாம்பஸ் என்பது மனித மூளையின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது நினைவகம்  கற்றல் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு போன்ற பல்வேறு மூளையின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இடம் மற்றும் அமைப்பு: ஹிப்போகாம்பஸ் மூளையின் புறணிக்குள் ஆழமாக அமைந்துள்ளது. இது வளைந்த கடல் குதிரை வடிவமைப்பை கொண்டுள்ளது. கிரேக்க வார்த்தையான ஹிப்போகாம்பஸ் என்றால் கடல் குதிரை என்று பொருள்படும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், பண்டைய கிரேக்க மருத்துவரும் உடல்கூறியல் நிபுணருமான கிளாடியஸ் கேலனால் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மூளையின் இந்தப் பகுதியை அவர் முதலில் விவரித்தபோது அதன் வடிவம் மற்றும் அமைப்பு இரண்டிலும் கடல் குதிரையின் ஒற்றுமையை குறிப்பிட்டார்.

ஹிப்போகாம்பஸின் செயல்பாடுகள்:

நினைவக உருவாக்கம்: இது குறுகிய கால முதல் நீண்ட கால நினைவாற்றல்களைக் கொண்டது. நினைவுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. உதாரணமாக, நண்பரின் பிறந்த நாளை நினைவுபடுத்துவது முதல் கடந்த வருட விடுமுறை நாளில் எங்கு சென்றோம் என்பதையும் நினைவில் வைத்திருக்கிறது.

சூழல் நினைவகம்: நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகள் எங்கு, எப்போது நிகழ்ந்தன போன்ற நினைவுகளுடன் கூடிய சூழலை இணைக்க உதவுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உரையாடல், அது நடந்த இடம், யாருடன் பேசினோம் என்பதை கூட நினைவில் வைக்க உதவுகிறது.

இடம் சார்ந்த நினைவகம்: நாம் தினமும் நம் வீட்டிற்கு வரும் வழி, பணிக்குச் செல்லும் வழி ஆகியவற்றை நினைவில் வைத்திருந்து சரியாக அந்த இடத்தை சென்றடைவது வரை உதவுவது ஹிப்போகாம்பஸ் பகுதிதான். அந்த  இருப்பிடத்தை மனதளவில் காட்சிப்படுத்த உதவுவதும் இதனுடைய பணிதான். இடம் சார்ந்த சூழல்களின் மன வரைபடங்களை உருவாக்கி சேமிப்பதில் ஈடுபட்டுள்ளது இந்தப் பகுதி. இதில் உள்ள சில நியூரான்கள் பிளேஸ் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாம் செயல்படும்போது அந்த இடம் சார்ந்த தகவல்களையும் நம் செயல்களையும் செய்ய உதவுகிறது.

கற்றல் திறன்: புதிய தகவல்கள் மற்றும் திறன்களை கற்றுக்கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உணர்ச்சி உள்ளீடுகளை ஒருங்கிணைக்கிறது மற்றும் புதிய அனுபவங்களின் சூழலுக்கு உதவுகிறது. மேலும், இது உணர்ச்சி நினைவகத்திற்கும், உணர்ச்சிபூர்வமான பதில்களை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. இது புதிய அறிவு சார்ந்த விஷயங்களையும் சிக்கலான பணிகளை கற்றுக்கொண்டு செயல்படுத்துவதற்கும் உதவுகிறது. நியூரான்களுக்கு இடையில் ஆன இணைப்புகளை வலுப்படுத்துவதும் பலவீனப்படுத்துவதும் இதனுடைய பணிதான்.

சமூக நினைவகம்: ஹிப்போகாம்பஸ் பகுதி சமூக நினைவகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது மற்றவர்களின் முகங்கள், பெயர்கள், தனிப்பட்ட தொடர்புகள் போன்ற நினைவுகளை, விவரங்களை நினைவில் வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. சமூகத் தொடர்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் இது முக்கியமானது.

ஞாபகங்கள்: இது முழுமையான பழைய நினைவுகளை மீட்டு எடுக்க உதவுகிறது. சிறு வயதில் எடுத்த ஒரு புகைப்படத்தை பார்த்தால் கூட அந்த படம் சம்பந்தப்பட்ட நிகழ்வு, இடம் என அனைத்தும் நினைவகத்தில் உருவாக்கி ஞாபகப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

ஹிப்போகாம்பஸ் செயலிழந்தால் ஏற்படும் கோளாறுகள்: ஹிப்போகாம்பஸில் சேதம் ஏற்பட்டால் அது பலவிதமான குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். அல்சைமர் நோய் போன்ற நிலைமைகள் பெரும்பாலும் மூளையின் ஹிப்போகம்போஸ் பகுதி சேதமாவதால்தான் உண்டாகிறது. இதன் விளைவாக நினைவுகளை உருவாக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

ஒருவர் அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும்போது ஹிப்போகாம்பஸ் செயல்பாடு எதிர்மறையாக பாதிக்கப்படும். அப்போது நினைவகப் பிரச்னைகள் மற்றும் மனநிலை கோளாறுகளும் ஏற்படும். மறதி, கை கால் வலிப்பு, மன அழுத்தம் மனச்சோர்வு போன்றவை ஏற்படும்.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT