சாதனைக் குழந்தைகள் 
வீடு / குடும்பம்

சாதனைக் குழந்தைகளை உருவாக்குவது யார் கையில் இருக்கு?

பொ.பாலாஜிகணேஷ்

ம் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறமையை நாம் அறிந்து கொள்வதுதான் குழந்தை வளர்ப்பில் வெற்றியின் முதல் படி என்று கூறலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அது உங்களுக்குத் தெரிந்தால் அதை ஊக்குவித்து உங்கள் குழந்தையை தனித்திறமையோடு வளர்க்கலாம்.

கணவன், மனைவி இருவருமே வெளியே வேலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தாலும், அவர்கள் குழந்தைகளுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கவேண்டும். அவர்களுடன் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட்டால்தான், அவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறன்களைக் கண்டறிய முடியும்.

குழந்தைகள் பெரும்பகுதி நேரத்தை தங்கள் பள்ளி ஆசிரியர்களுடன்தான் செலவிடுகிறார்கள். அதனால் அவர்களது திறமைகளை ஆசிரியர்கள் அறிந்திருப்பார்கள். பெற்றோருக்கும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கும் இடையே மனந்திறந்த உரையாடல் இருந்தால் இருவரும் இணைந்து, குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறமைகளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

‘படி... படி...’ என்று கூறி, கல்வியை மட்டும் குழந்தைகளிடம் திணித்தால் அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை அடையாளம் காண முடியாது. படிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டச் செய்யாமல் குழந்தைகளை சுதந்திரமாக அவர்களுக்குப் பிடித்த துறைகளில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள். அதில் எதில் அவர்களுக்கு ஈடுபாடும், செயல் ஊக்கமும் இருக்கிறதோ அதை இனங்கண்டு மேம்படுத்துங்கள். படிப்பை விட, விளையாட்டுத் துறையில் ஈடுபடும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

‘உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைச் செய்’ என்று முடிவெடுக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்குக் கொடுங்கள். ஒருசில நாட்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டு அதை தொடர விருப்பம் இல்லை என்றால், கட்டாயப்படுத்தாமல் அதில் இருந்து விலகவும், புதிதாகப் பிடித்தில் ஈடுபடவும் அனுமதி கொடுங்கள்.

ஈடுபட்ட உடன் எந்தத் துறையிலும் வெற்றியும், பதக்கமும் கிடைக்காது. கலந்துகொள்வதற்கான சான்றிதழ் மட்டுமே கிடைத்தாலும், குழந்தைகளை குறை சொல்லாமல், அவர்கள் தொடர்ந்து கலந்துகொள்ள ஊக்கம் கொடுங்கள். வெற்றி பெற்றால் பதக்கமும், பாராட்டும்தான் கிடைக்கும். தோல்வியடைந்தால் சிறந்த அனுபவமும், முழுமையாக தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். அதனால் தோல்வியையும் நேசிக்க குழந்தைகளை பக்குவப்படுத்துங்கள். தோல்வியடைந்தவர்களால்தான் சிறந்த வெற்றியாளர்களாக முடியும்.

சாதனையாளர்களை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்குத் தியாகமும், பொறுமையும் தேவை. குழந்தையைக் கொண்டு போய் அப்படியே பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டு அவர்கள் தங்கள் வேலையைப் பார்க்க சென்றுவிடக் கூடாது. குழந்தை பயிற்சி பெறும்போது, அவர்களும் உடனிருக்க வேண்டும். கூர்ந்து கவனித்து, அவர்களும் ஓரளவாவது அதை புரிந்துகொண்டு குழந்தைக்கு வழிகாட்ட வேண்டும். ஈடுபாடு கொண்ட பெற்றோர்களால்தான் சாதனைக் குழந்தைகளை உருவாக்க முடியும்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT