காலையில் எழுந்தவுடன் சிலர் தாம் நேற்று இரவு கண்ட கனவை மற்றவரிடம் சொல்லிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். இன்னும் சிலர் பஞ்சாங்கத்தை எடுத்து அதற்குண்டான பலன் என்னவென்று பார்ப்பார்கள். நல்லதாக இருந்தால் நிம்மதி பெருமூச்சு வரும். கொஞ்சம் சரியில்லை என்றால் கோயிலுக்குச் சென்று பிரார்த்தித்து வருவார்கள். இவ்வளவு வேலைகளையும் ஒரு கனவு செய்கிறது. இதில் ஆணும் பெண்ணும் ஒரே கனவை கண்டால் அல்லது நோய் உள்ளவரும் நோயற்றவரும் ஒரே கனவை கண்டால் அதற்குண்டான பலாபலன் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
ஆண்கள் தம் கனவில் குழந்தைகளைக் கண்டால் மேன்மை. ஆனால், பெண்கள் அவ்வாறு கண்டால் நோய். ஆண்கள் தம் கனவில் தேவமாதர்களைக் கண்டால் தன நஷ்டம். ஆனால், கன்னிகை அக்கனவு கண்டால் திருமணம் நடக்கும். திருமணமான பெண்கள் அக்கனவு கண்டால் சம்பத்து உண்டாகும்.
சூரியன் உதயமாகி மேல் எழக் கனவு கண்டால் காரிய ஸித்தி. ஆகாய நடுவில் சூரியன் இருக்கக் கண்டால் காரிய ஸித்தி. சூரிய அஸ்தமன கனவு கண்டால் ஆபத்து, நஷ்டம். பெண்கள் சூரிய அஸ்தமன கனவு கண்டால் பெண் குழந்தை பெறுவர்.
தம் தலைக்கு மேல் வானவில் போட்டிருக்கக் கனவு கண்டால் தரித்திரர்க்கும் தான லாபம். செல்வருக்கு தரித்திரம் உண்டாம். வானவில் கிழக்கில் இருக்கக் கனவு கண்டால் பணம் இல்லாதோர்க்கு நலம், செல்வர்க்கு தீங்கு. வானவில் மேற்கில் இருக்கக் கனவு கண்டால் செல்வருக்கு நலம். ஏழைகளுக்கு தீங்கு. தம் வழி முழுவதும் வெயில் அடிக்க கனவு கண்டால் திரவிய லாபம். சூரியனை கிரகணம் பிடிக்கக் கனவு கண்டால் தீமை. பெண்கள் இதனைக் கண்டால் புத்திரப்பேறு உண்டாகும்.
கரி, உமி, சாம்பல் முதலியவற்றை கனவு கண்டால் வறுமை. இவ்வாறு நோயாளிகள் கனவு கண்டால் நோய் தீரும். புகையில்லாத நெருப்பை கனவு கண்டால் நோய் நீங்கும். நோயில்லாதவர்கள் நெருப்பை கண்டால் தன லாபம், உறவினர் தரிசனம். தாம் காற்றாடி விடக் கனவு கண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
ஆகாயம் கருமையாகத் தோன்றி ஆங்காங்கு சிறிய வெண்மேகங்கள் காணப்படின் தனக்கு ஆபத்து வந்து ஒழியும். ஆகாயம் ஆங்காங்கு செவ்வானமிட்டிருக்கக் கனவு கண்டால் நோய் உற்பத்தி, நஷ்டம் உண்டாம். கல்யாணம் விரும்பினோர் இவ்வாறு கனவு கண்டால் மணம் பெறுவர். கிழவியை கல்யாணம் செய்வதாகக் கனவு கண்டால் தன லாபம்.
தான் இறந்ததாகக் கனவு கண்டால் நலம். உறவினர்கள் இறந்ததாகக் கனவு கண்டால் பீடை நிவர்த்தி. அவர்களை தான் கொன்றதாகக் கனவு கண்டால் தன்னால் உபகாரத்தை அடைவர். தன்னை அவர்கள் கொன்றதாகக் கனவு கண்டால் தன லாபம். தான் மீண்டும் கல்யாணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டால் நோய். மற்றவர்கள் அவ்வாறு செய்வதாகக் கனவு கண்டால் சுபம்.
பட்சிகள் பறப்பது போல் கனவு கண்டால் தனம் உள்ளவன் ஏழையாகவும், தனம் இல்லாதவன் தனத்தையும் அடைவான். கண்ணாடியைக் கனவில் கண்டால் ஏழைகளுக்கு பாக்கியமும், செல்வர்க்கு தரித்திரமும் உண்டாகும். மருந்துகளைக் கனவில் கண்டால் நோயில்லாதவர் நோயாளியாகவும், நோய் உள்ளவர் நோய் நீங்கவும் பெறுவர்.
ஆக, கனவு எல்லோருக்கும் எல்லா விதத்திலும், எல்லா நன்மைகளையும் அப்படியே அள்ளிக் கொடுத்து விடுவதும் இல்லை. எதிர்மறையான நோய் நொடி போன்று இருப்பவர்களுக்கும் மனதிற்கு ஆறுதல் தருவதற்கும் கனவு பயன்படுகிறது. ஆதலால் கனவு காண்போர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.