சாரதாதேவி... 
Motivation

ஸ்ரீ சாரதாதேவி கடைபிடித்த அறநெறி வாழ்க்கை தத்துவங்கள்-10!

கலைமதி சிவகுரு

1. ஸ்ரீ ராமகிருஷ்ணரும் சாரதாதேவியும் தூய வாழ்க்கையும், புலனடக்கத்தையும் அணிகலமாகக் கொண்டிருந்தனர். அங்ஙனமே அவர்கள் இருவரும் பண ஆசையை முற்றிலும் துறந்த மேலோர் ஆவார்.

2. பிள்ளை பெறுகின்ற தருணத்தில் செய்கிற பணிவிடை முதல் பிறவி பணியை நீக்குவதற்கு ஏற்ற ஞானப்பால் ஊட்டுதல் ஈறாக அரும்பணி அனைத்தையும் அன்னையார் அருள் சுரந்து உலகுக்கு இயற்றியவராவார்

3. அன்பே வடிவெடுத்து மிளிர்வது சாரதாதேவியின் ஒரு கூறு. அசைவற்று கற்பாறை போன்று ஆத்ம சொரூபத்தில்
நிலைத்திருப்பது அவருடைய மற்றொரு கூறாகும்.

4. சாரதாதேவி தம்மை அண்டியவருள் யாருக்கு எது தேவையோ அதைக் கரவாது கொடுத்து அருளிய கருணை கடலாகிய தாய் ஆனவர். கஷ்டத்தைப் பொருட்படுத்தாது கைமாறு கருதாது கொடுத்துக்கொண்டே இருக்கும் மேன்மையை அவரிடம் இருந்தே நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

5. மிகைப்பட பேசுதல் அன்னையாரிடம் கிடையாது. அடங்கிய அமிழ்து போன்ற இனிய குரலில் சில சொற்கள் அவரிடமிருந்து வெளிவரும். அவை யாண்டும் உயிரும், அருளும், பொருளும் நிறைந்த சொற்கள் ஆகும்.

6. அன்பும், அனுதாபமும், ஊறிய அவருடைய இன்மொழியானது நெடுநாள் புண்பட்டிருந்த மனத்தைக் கணப்பொழுதில் ஆற்றிப் பண்படுத்திவிடும்.

7. தடுமாற்றமுடையோர் அன்னையாரின் சன்னிதியில் திட்டம் பெறுவர். மனஉறுதி இல்லாற்கு உறுதியும், ஊக்கமும் வரும். சோர்வுடையார் சுறசுறுப்படைவர். துயரமுடையார் தெளிவுற்று  இன்பம் துய்ப்பர்.

8. மாந்தரது மருளை நீக்கி அருளை வழங்க வல்லமைகளாய் இருந்தன அன்னையாரின் நிறைமொழியும் அவருடைய மாண்புடைய செய்கையும்.

9. ஏட்டு கல்வியில் இருந்து வருவதைவிட அதிக நுண்ணறிவு தூய வாழ்க்கையில் இருந்து வருகிறது  என்பதற்கு அன்னையாரின் வாழ்க்கை சான்றாகும்.

10. “ஒழுக்கமற்றவரும் விரும்பி ஒன்றை என்னிடம் இருந்து வேண்டுவாராயின் இல்லை என்று மறுத்து இயம்ப என்னால் இயலாது” என்றார் சாரதா தேவியார். எப்பேர்ப்பட்ட நல்ல எண்ணம் அவருடையது என்பது இதிலிருந்து விளங்கும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT