சுய முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பயணத்தில், நம்முடைய ஆசைகள், பலம் மற்றும் தேவைகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். நமக்குள்ளே ஒளிந்திருக்கும் சிறந்த விஷயங்களை வெளியே கொண்டு வர நமது எண்ணங்கள், ஆசைகள் மற்றும் இலக்குகளை ஆழமாக ஆராய வேண்டியது அவசியம். சில அடிப்படைக் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்வதன் மூலம், நம்முடைய பெஸ்ட் வெர்ஷனை வெளியே கொண்டு வரலாம். அப்படிப்பட்ட, 3 முக்கிய அடிப்படைக் கேள்விகள் என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.
1. வாழ்க்கையில் என் ஆசைகள் மற்றும் நோக்கம் என்ன?
இந்த கேள்வி ஒரு நிறைவான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் முக்கியமானது. உங்கள் உற்சாகத்தைத் தூண்டி, உண்மையான மகிழ்ச்சியைத் தருவது எது என்பதைப்பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள். உங்கள் ஆர்வங்கள், திறமைகள் மற்றும் நேரத்தை இழக்கச் செய்யும் செயல்பாடுகளை கவனியுங்கள். உங்களது உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி, தெளிவுடன் வாழ்க்கையை நடத்த உதவும். எனவே உங்களுக்கான நோக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
2. எனது பலம் மற்றும் பலவீனம் என்ன?
உங்களுடைய பலம், பலவீனத்தை அறிந்துகொள்ளும் சுய விழிப்புணர்வு என்பது தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கிய அங்கமாகும். உங்களது பலத்தை அறிந்துகொண்டால் அதைப் பயன்படுத்தி உங்களுக்கான விஷயங்களை எப்படி செய்து கொள்வது? என யோசிக்கலாம். அதேபோல, உங்களுடைய பலவீனம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டால், அதை பலப்படுத்த முயற்சிக்கலாம் அல்லது, பிறர் உங்களது பலவீனத்தை அறிந்து உங்களைத் தாக்குவதில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். எனவே உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து செயல்பட வேண்டியது அவசியம்.
3. நான் இந்த உலகில் எதை விட்டுச்செல்லப் போகிறேன்?
நீங்கள் ஏன் இந்த உலகில் பிறந்துள்ளீர்கள்? இறந்த பிறகு இந்த உலகில் உங்களைப் பற்றிய எதுபோன்ற சான்றுகளை விட்டுச் செல்லப் போகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள். உலகம், உங்கள் சமூகம் அல்லது உங்களைச் சுற்றியுள்ள மக்கள் மீது நீங்கள் ஏற்படுத்த விரும்பும் தாக்கத்தைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் இல்லாதபோதும் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பவற்றை யோசியுங்கள். நீங்கள் இறந்த பிறகும் இவ்வுலகில் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை பற்றி கற்பனை செய்வதன் மூலம், உங்களது செயல்களையும் முடிவுகளையும் சரியாக எடுக்கலாம்.
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த 3 கேள்விகளை தங்களைத் தானே கேட்டுக்கொண்டு, வாழ்க்கையில் ஓர் அர்த்தத்துடன் வாழ முயற்சிக்க வேண்டும்.