motivation articles Image credit - pixabay
Motivation

மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!

பொ.பாலாஜிகணேஷ்

னதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் இந்த உலகில் வந்துவிட்டன. தேவையற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற்றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த 5 வழிகளை இப்பதிவில் பார்ப்போம்.

1-இயற்கையோடு இணையலாம்

பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம் (stress) மற்றும் மனச்சோர்வு (depression) ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை (anxiety) கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு வெளியே வந்து செயற்கை கருவிகளான கைபேசி, மடிக்கணினி ஆகிய வற்றுக்கு விடுப்பு வழங்கிவிட்டு இயற்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம்.

2-உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்

மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்றபோதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள். உங்கள் நண்பன் பிரச்னையில் உள்ளபோது உதவுவதைப்போல அக்கறை. அன்பு மற்றும் புரிதலுடன் உங்களை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள்.

3-மற்றவர்களுக்கு உதவலாம்

தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மன மகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.

4-நிகழ்காலத்தில் வாழ்வோம்

நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கை கொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன் மொழி. கடந்த கால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும். மாற்ற முடியாதவற்றையும், வேண்டாத வற்றையும் அடிக்கடி மனதில் அசைபோடுவது மனநலனுக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து நிகழ்காலத்தில் வாழப்பழகுவோம்.

5-உறவுகள் இனிமை தரும்

நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகிறது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். அந்த ஆய்வு முடிவுகள் தி குட் லைஃப் என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது. இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியைப் பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல் நலம் கிடைக்கின்றது. அவ்வாறு, நல்ல உடல் நலம் நம்முடைய வாழ்நாளை அதிகரிக்கின்றது என்பது அறிவியல் ரீதியாக மேற்கண்ட ஆய்வின் வழியே உறுதியாகி உள்ளது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப் பாதுகாப்போம்.

விடாமுயற்சி தரும் விஸ்வரூப வெற்றி!

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

A Day in History: The Great Balloon Race!

காசிக்கு நிகரான ஆலயம் தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

SCROLL FOR NEXT