நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நம் மனதை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமாகும். சிலர் மட்டும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டிருப்போம். இவர்கள் மட்டும் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் என நினைத்திருப்போம் அல்லவா! இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக வாழும் மனிதர்கள் கடைபிடிக்கும் 6 பழக்கவழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்கும் இன்பமும் துன்பமும் பொதுவானது. இன்பத்தை அனுபவிக்கும் நாம் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். துன்பத்தை முழுமனதோடு வரவேற்றால் எந்நிலையிலும் மனம் தளராமல் இருக்க முடியும். ஒருவர் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆனால், நாம் நினைத்தால் இதனை சாத்தியமாக்க முடியும். இதற்கு நல்லவை, கெட்டவை எது நடந்தாலும் எந்நிலையிலும் நாம் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது அவசியம். மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்கள் பலரும் சில பழக்கவழக்கங்களை தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்றனர்.
தினமும் கற்றுக் கொள்ளுதல்:
நாம் வாழும் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வாழ தினமும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழும் மனிதர்களும் இப்படித் தான் ஒரு நாளைக் கூட எதையும் கற்றுக் கொள்ளாமல் கடக்க மாட்டார்கள். தினந்தோறும் ஒன்றைக் கற்றுக் கொள்வதன் மூலம், நமது இலக்கை வெகு விரைவில் அடைவதற்கும் இது உதவியாக இருக்கும்.
குறைவாகப் பேசுதல்:
மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்கள் அதிகம் பேச மாட்டார்கள். மாறாக அவர்களின் பேச்சு குறைவாகவும், செயல் வேகமாகவும் இருக்கும். எங்கு பேச வேண்டுமோ அங்கு மட்டும் பேசுவதும் சிறப்பு. வாய்ப்பேச்சில் வீராப்பைக் காட்டும் சாதாரண மனிதர்கள் அல்ல இவர்கள்.
அதிகமாக சிரித்தல்:
“சிரித்து வாழ்ந்தால் நோய் விட்டுப் போகும்” என்ற பழமொழியை அனைவரும் அறிவர். ஆனால், தினமும் நாம் சிறிது நேரமாவது சிரிக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்வோம். ஆனால், மகிழ்ச்சியாக வாழ அதிகமாக சிரிப்பதும் அவசியம். இதைத் தான் மகிழ்ச்சியாக வாழும் மனிதர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.
தன்னடக்கம்:
மகிழ்ச்சியான மனிதர்கள் தாங்கள் இன்னாரென்று எங்கும் காட்டிக் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருப்பார்கள். தன்னடக்கமும், நாவடக்கமும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். மற்றவர்கள் முன் தங்களை உயர்த்திக் காட்டும் நபர்களுக்கு மத்தியில், தன்னை யாரென்றே காட்டிக் கொள்ளாதவர்கள் தன்னடக்கப் பண்புடன் இருப்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
உதவிக்கரம் நீட்டுதல்:
தாம் வசிக்கும் இடங்களிலோ அல்லது செல்லும் இடங்களிலோ மற்றவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை மகிழ்ச்சியான மனிதர்கள் தினமும் பின்பற்றி வருகின்றனர். முடியாத சில நபர்களுக்கு உதவுவதன் மூலம், ஒருவிதமான மன மகிழ்ச்சி உண்டாகும். இதுவும் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஒரு ரகசியம் தான்.
முட்டாள்தனத்தை புறக்கணித்தல்:
மகிழ்ச்சியான மனிதர்கள் வாழ்க்கைக்கு உதவாத முட்டாள் தனமான விஷயங்களை நிச்சயமாக புறக்கணித்து விடுவார்கள். இதனைப் புறக்கணிப்பது தான் நன்மை தரும் என்பதை அறிந்தவர்கள் இவர்கள்.
நீங்களும் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ இந்த 6 பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். மனதில் மகிழ்ச்சி பூவனமாய் பூத்துக் குலுங்கும்.