கர்மா எனப்படும் சமஸ்கிருத வார்த்தைக்கு “செயல்” என அர்த்தம். இது இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களில் உள்ள ஒரு பழமையான கருத்து. இந்த கருத்து உலக அளவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். கர்மா என்பது ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு, அது நம் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற நம்பிக்கையை குறிப்பது. ஒருவர் கர்மாவின் விதிகளைப் புரிந்து கொள்வதன் மூலம், வாழ்க்கையில் அதிக தவறுகளை செய்யாமல், நல்ல நிலையை அடைய முடியும். இந்தப் பதிவில் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய கர்மாவின் 7 விதிகள் பற்றி பார்க்கலாம்.
கர்மாவின் 7 விதிகள்:
காரணம் மற்றும் விளைவு: நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இந்த விளைவு நேர்மறையானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.
படைப்பு: நம் எண்ணங்கள் மற்றும் செயல்கள் நமது வாழ்க்கையை கட்டமைக்கின்றன. நாம் நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்தும்போது நம் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்கள் நடக்கிறது. இதுவே எதிர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்தினால் நம் வாழ்க்கையில் அனைத்தும் தவறாகவே நடக்கும்.
பொறுப்பு: நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் நாம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். என்னதான் நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை குறை கூறினாலும், இறுதியில் நாம் என்ன தேர்வு செய்து செயல்படுத்துகிறோம் என்பதே நம் அனுபவங்களை தீர்மானிக்கின்றன.
மாற்றம்: நாம் நம் கர்மாவை மாற்ற முடியும். நமது எண்ணங்களும் செயல்களும் மாறும்போது நமது கர்மாவும் நிச்சயம் மாறும்.
மன்னிப்பு: நமக்கு தீங்கு இழைத்தவர்களை மன்னிப்பது நாம் நிம்மதியாக இருக்க உதவுகிறது. கோபத்தையும், வெறுப்பையும் மனதிற்குள்ளேயே வைத்திருந்தால், அது நம்மை இறுக்கமாக கட்டிப்போட்டு, தவறான விஷயங்களை செய்ய வைக்கும். மற்றவர்களை மன்னிப்பதன் மூலம் நம் உறவுகளை மேம்படுத்தி, மன அமைதியை மீட்டெடுக்க முடியும்.
இணைப்பு: நாம் அனைவருமே ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளோம். எனவே நம் செயல்கள் மற்றவரை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நோக்கம்: நாம் அனைவருக்குமே வாழ்க்கையில் ஒரு நோக்கம் உள்ளது. நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், திருப்திகரமாகவும் மாற்றுவதற்கு நமக்கான நோக்கம் என்ன என்பதை நாம் அனைவருமே நிச்சயம் கண்டறிய வேண்டும்.
இந்த கர்மாவின் விதிகள் நம் வாழ்க்கையை சிறப்பாகக் கட்டமைக்க உதவும் சிறந்த கருவியாகும். இது நம் வாழ்க்கையை மேம்படுத்தி மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான வாழ்க்கையை வாழ உதவும். இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் நம் எண்ணங்கள், செயல்கள் மற்றும் விளைவுகளுக்கு இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டு, சிறப்பான முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.
“கர்மா பற்றிய உங்கள் கருத்து என்ன?”