Motivation article Image credit - pixabay
Motivation

தன்னை அறிவதற்கான ஒரு உன்னத கதை!

க.பிரவீன்குமார்

ல நேரங்களில் நாம் மனஅமைதி இன்றி வாழ்வதற்கு. நாம் பேசும் பேச்சுக்களே காரணங்களாக அமையலாம். தேவை இல்லாத பேச்சுக்களால் உடல் சக்தியும் மன சக்தியும் இழந்து நாம் யார் என்பதை நாம் அறியாமல் இருந்துவிட்டு இப்புவியை விட்டுச் சென்றுவிடுவோம். அமைதியின் சக்தியை அறியவும் நாம் யார் என்பதை உணரவும் ஒரு தத்துவக் கதையை இதில் பார்ப்போம்.

வனாந்தர தேசம் ஒன்றில் குரு ஒருவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவருக்கு  மொத்தம் பத்து சீடர்கள் இருந்தார்கள். அதில் கர்ணன் என்ற ஒரு சீடனுக்கு மட்டும் பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவன் பேசுவதற்காகப் பிறரைப் பற்றிக் குறை கூறுவதும், பிறர் தன்னை மதிப்பதற்காக அவர்களுடன் உரையாடி அவ்வுறையில் வெல்வதும் அவனது வழக்கமாக வைத்திருந்தான்.

அவன் மிகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால்,  துறவு வாழ்க்கையில் தெரிந்து கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்று, இந்தக் குருவிடம் சீடனாகச் சேர்ந்துள்ளான். அதனால், எப்பொழுதும் தான் உயர்ந்தவன் என்ற  அவனுள் இருக்கும்.

ஒரு நாள் குரு தன் 10 சீடர்களையும் அழைத்து அவர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். அந்தப் போட்டி என்னவெனில் உங்களுக்குக் கடுமையான ஒரு உறுதி மொழியை நீங்களே எடுத்துக்கொண்டு அதை நீங்கள் 30 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார். இதைக்கேட்ட மற்ற சீடர்கள் ஏற்றுக்கொண்டு உறுதிமொழியைப் பின்பற்ற  ஆரம்பித்தனர்.

கர்ணனுக்கு ஒரு எண்ணம் நான் இவர்களை விடச் சிறந்த சீடன். அதனால், என் உறுதிமொழி எதுவாக இருந்தாலும் அது எளிமையாகத் தான் இருக்கும். அதனால் குருவிடம் சென்று அவர் கூறும் உறுதி மொழியை நாம் பின் பற்றுவோம் என்று முடிவு எடுத்து குருவைக் காணச் சென்றான்.

குருவிடம் சென்று கர்ணன் கூற, "குரு சிரித்தவாறு சரி நான் உனக்கு ஒரு உறுதிமொழியைத் தருகிறேன். அதை நீ 30 நாட்கள் கடைப்பிடி என்றார். என்ன உறுதிமொழி என்றால் 30 நாட்களும் நீ பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும். இதைக் கேட்ட கர்ணனுக்கு இவ்வளவுதானா? நான் இதை எளிமையாக முடித்துக்காட்டுகிறேன்" என்று குருவிடம் கூறிவிட்டுச் சென்றான்.

முதல் நாள் அவனுக்கு இந்த உறுதிமொழி அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இரண்டாவது நாள் அவன் உடன் இருக்கும் நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவனுக்குப் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்தது அதனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் கோவிலில் சென்றான். "குருவே நீங்கள் கூறிய உறுதி மொழியை என்னால் கடைப்பிடிக்க முடியாதது போல் தோன்றுகிறது. அதனால், நான் இதை இப்பொழுதே விட்டுவிடவா? "என்று எழுதிக் காண்பித்துக் கேட்டான். குரு இவனைப் பரிகாசித்துச் சிரிப்பது போல் பார்த்துவிட்டு. "உன்னால் முடியாது என்று எனக்குத் தெரியும் ஆனால் முயற்சி செய்துபார்" என்று கூறினார்.

குருவின் சிரிப்பினை ஏற்றுக் கொள்ள முடியாதவன்." சரி நான் செய்கிறேன்" என்று மீண்டும் தன் குடிலை நோக்கிச் சென்றான். வீட்டிலேயே அமைதியாக யாருடனும் பேசாமல் இருந்தான். இவனுடன் இருந்த சீடர்களுக்கு எல்லாம் மிகுந்த ஆச்சரியம் "கர்ணனா இப்படி மாறிப்போனது. அவனால் பேசாமல் ஒரு கணம் கூட இருக்க முடியாது. ஆனால் எப்படி இவன் பேசாமல் இருக்கிறான்" என்று வியப்பாகப் பார்த்தனர்.

30 நாள் நெருங்க நெருங்க இவன் மனதில் பல கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அவனால் அந்தக் கேள்விகளை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், மீண்டும் குருவைக் காணச் சென்றான்." குருவே என்னால் இப்பொழுது அமைதியாக இருக்க முடிகிறது. ஆனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை, என்னுள் பல கேள்விகள் இருக்கிறது. இந்த நிலை இப்படித்தான் இருக்குமா இல்லை நான் இன்னும் ஆழ்ந்து அமைதியாக இருக்க வேண்டும்" என்று கேட்டான்.

குரு சிரித்துக்கொண்டே நீ மனதளவிலும் அமைதியாக இருக்க வேண்டும் அது இங்கு இருக்கும் சத்தங்களால் உனக்குக் கிடைக்காது. அதனால் நீ காட்டை நோக்கிச் செல் அங்குக் கொஞ்சக் காலம் இருந்துவிட்டு வா என்றார். சீடனும் இது நல்ல யோசனையாக இருக்கிறது என்று காட்டை நோக்கிச் செல்கிறான்.

இவன் சென்று 30 நாட்கள் மேலாகிறது ஆனால், இன்னும் ஆசிரமத்திற்குத் திரும்பவில்லை. உடன் இருந்த சீடர்கள் காட்டிலிருந்த விலங்கு ஏதாவது இவனை அடித்து உண்டு இருக்கும் என்று நினைத்தனர். இதைக் குருவிடமும் கேட்டனர். அவன் சரியான காலத்தில் இங்கு வருவான். அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.

ஒரு நாள் கர்ணன் காட்டிலிருந்து நடந்து வந்தான். அவனது உடல் மட்டுமின்றி கண்ணும் சாந்தத்தின் ரூபமாகச் சீடர்களுக்குத் தெரிகிறது. இதைப் பார்த்த ஆச்சரியத்தில் கர்ணனிடம் சென்று நீ எப்படி இப்படி மாறினாய்? என்று கேள்விகள் எழுப்பினர். என் மனக் கேள்விகளைக் கட்டுப்படுத்தி அமைதியை பெற்றதனால், என்னால் அமைதியாக இருக்க முடிந்தது என்றான்.

முன்பு ஏதேனும் கேள்வி கேட்டால், அதிகமாகப் பேசுபவன், இன்று கேட்டதற்குச் சரியாகவும் தத்துவார்த்தமாகவும் பதில் சொல்கிறான் என்று சீடர்கள் கர்ணனை வியந்து பார்த்தனர். குருவிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றுவிட்டு மீண்டும் காட்டிற்கே சென்று விட்டான்.

அமைதி மனிதனை என்ன செய்துவிடும் என்பதற்கு இந்த கர்ணன் ஒரு உதாரணம். வார்த்தைகளை குறைத்து வாழ்கிறேன் மேம்படுத்துங்கள்.

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

SCROLL FOR NEXT