Action without love Image credit - pixabay
Motivation

அன்பு இல்லாத செயல் அர்த்தமற்றது!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

செயல் இல்லாத அன்பு அர்த்தமற்றது என்பது போல் அன்பு இல்லாத செயலும் பொருத்தமற்றது. தன்னை போல்தான் மற்றவரும் என்ற எண்ணத்தின் தொடக்கமே அன்பிற்கான அடிப்படை தத்துவமாகும். அன்பில்லாமல் செய்கின்ற எந்த ஒரு செயலும் பொருத்தமற்றதாகவும் அர்த்தமற்றதாகவும்தான் இருக்கும்.

வார்த்தைகள் தேவையில்லாத அற்புத மொழி அன்புதான். அன்புடன் பேச கற்றுக் கொண்டால் கடவுள் கூட நம்மிடம் பேச ஆசைப்படுவார்.

அன்பும் இரக்கமும் இல்லாத செயல் மகிழ்ச்சி தராது. அன்பும் இரக்கமும் நிறைந்த உள்ளமே மனவலிமை, மனஉறுதி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும்.

நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் முடிந்த அளவு அன்பான வார்த்தைகள் பேச வாழ்வின் அனைத்து சுமை களிலிருந்தும், வலிகளில் இருந்தும் அவர்களை விடுவிக்கும். இந்த பரந்த உலகில் தனக்கென எதையும் எதிர்பாராமல் தனக்குப் பிடித்தவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அன்பு தான் நம்மை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது.

உண்மையான அன்பு என்பது உரிமை கொண்டாடுவது அல்ல. ஆராதிக்கப்படுவதுதான். உண்மையான அன்பு ஒன்றையும் எதிர்பார்ப்பதில்லை. நம் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த உண்மையாக இருப்பதுதான் சிறந்த வழி. எந்த ஒரு செயலையும் கடனே என்று செய்யாமல் அன்புடன் செய்வது சாலச் சிறந்தது. 

ஒருவர் மேல் அக்கறையும், தன்னலமற்ற விசுவாசமும் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையைத்தான் அன்பு என்று கூறுகிறோம். அன்பு அக்கறை இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த செயலும் அர்த்தமற்றதாகிவிடும்.

சுவாமி விவேகானந்தர் கூறியது - அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தை கொண்டு வந்து தரும்.

அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பை சொற்களால் விளக்க முடியாது. செய்யும் செயல்கள் மூலம்தான்  அன்பு விளக்கம் பெறும். வாழ்வின் உண்மையான பொருள் அன்பு செலுத்துவதிலும் அன்பு செலுத்தப்படுவதிலும்தான் உள்ளது.

"அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்" அன்னை தெரசாவின் அற்புதமான வார்த்தைகள் இவை.

சாதாரணமாக செய்கின்ற செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறும். அன்பு என்பது பேசும் சொற்களில் மட்டும் இருந்தால் போதாது. செயல்களிலும் இருக்க வேண்டும். 

உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது. செயலிலும் காண்பிக்க வேண்டும். போட்டிகளும், பொறாமைகளும், போராட்டங்களும் நிறைந்த உலகில் அன்பான செயல்கள் மூலம் உறவை பலப்படுத்த முடியும். அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் நேசிக்க சொல்லும். 

அன்பான உலகத்தை உருவாக்குவது நம் கையில்தான் உள்ளது. இது மற்றவருக்காக நாம் செய்யும் சேவை அல்ல. நம் மனமகிழ்ச்சிக்காகவும் செய்ய வேண்டியது அவசியம். மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்புவதும், பரஸ்பர அன்பை பரிமாறிக் கொள்வதும், சக மனிதர்களை வெறுப்புடன் பார்க்காமல் கனிவான வார்த்தைகள் பேசிட சமூகத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்தும். 

எந்தவித நிபந்தனையும் இன்றி பிறர் மீது காட்டும் அக்கறையே அன்பு. அது இன்னும் உலகில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அன்பு இல்லாத செயல் வெறுமையானது. பொறாமை இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. அன்பு இல்லாத செயல் பொருத்தமற்றது மட்டுமல்ல அர்த்தமும் அற்றது.

கேள்விகள் நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்!

நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு பலமூட்டும் முருங்கை பூ வைத்தியம்!

பணியாளரைத் தாக்கிய கோட் பட நாயகி... வழக்கை விசாரிக்க உத்தரவு!

விமர்சனம்: கோழிப்பண்ணை செல்லதுரை - இது கொஞ்சம் பழைய கோழி!

பிசிஓடி(PCOD) பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT