ஒரு மனிதனின் தோல்விக்கு முதல் காரணமாக அமைவது எது தெரியுமா ?. அவனுடைய தாழ்வு மனப்பான்மை மனோபாவம். திறமைகள் பல இருந்தும் சிலர் தோல்வியைத் தழுவுவதை நாம் பார்க்கிறோம். அதற்கு முக்கிய காரணியாக அமைவது அவர்களின் தாழ்வு மனப்பான்மை ஆகும். ஒருவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை தோல்விக்குச் சொந்தக்காரனாக்கி விடுகிறது. தன்னைப் பிறறோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.
நாம் எல்லோரும் அசாத்திய சக்தி படைத்த மனிதர்கள் என்ற எண்ணத்தை மனத்தில் உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். நம்மைச் சுற்றி உள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள திறமை நமக்கும் உள்ளது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். சிலர் முதல் தோல்வியிலேயே துவண்டு போய்விடுவார்கள். சிலர் எத்தனை முறை தோற்றாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒருநாள் வெற்றியும் பெறுவார்கள். இத்தகைய மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அப்போதுதான் ஒருநாள் வெற்றியை சந்திக்க முடியும்.
இப்போது நமக்கு நம்பிக்கையை விதைக்கும் ரைட் சகோதரர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ரைட் சகோதரர்களுக்கு சின்னஞ்சிறு வயது முதலே இருந்து வந்தது. ஏன் ஒரு வைராக்கியம் என்றே சொல்லலாம்.
சிறுவயதில் ரைட் சகோதரர்கள் தங்கள் தாயாருடன் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஆற்றங்கரையில் ஒரு பறவை பறந்து செல்வதைக் கண்டார்கள். அப்போது வில்பர் ரைட் தன் தாயாரிடம் கேட்டான்.
“அம்மா. நமக்கும் சிறகுகள் இருந்தால் நாமும் அந்த பறவையைப் போல பறக்கலாம் அல்லவா ?”
தன் மகன் கேட்பது முடியாது என்று அம்மாவிற்குத் தெரியும். ஆனால் அம்மா மகனின் நம்பிக்கையை வீணாக்க விரும்பவில்லை. தன் மகனின் மனதில் நம்பிக்கையை விதைத்தாள்.
“நிச்சயம் பறக்கலாம் ரைட்”
உடனே வில்பர் நம்பிக்கையுடன் சொன்னான்.
“அம்மா. என்றாவது ஒருநாள் நான் பறந்தே தீருவேன்”
சின்னஞ்சிறு வயதில் என்ன ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. ஆச்சரியம்தான்.
ஒரு சமயம் சகோதரர்கள் இருவரும் தடிமனான அட்டையைக் கொண்டு காற்றாடி ஒன்றைச் செய்து பறக்கவிட்டார்கள். காற்றாடி தடினமாக இருந்ததால் அது அவர்களை மேலே இழுக்க முயற்சித்தது. அப்போது ஆர்வில் சொன்னான்.
“விரைவில் நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நாம் செய்தே தீரவேண்டும்”
வில்பரும் “நிச்சயம் செய்யலாம்” என்றான்.
ஒருநாள் வில்பர் தன் தந்தையிடம் “நம்மைச் சுமந்து செல்லும் ஒரு காற்றாடியை நான் செய்யப் போகிறேன்” என்றான். ஆனால் அவனுடைய தந்தையோ “அது உன்னால் முடியாது” என்றார்.
வில்பர் விடாமல் “நிச்சயம் செய்வேன்” என்றான்.
சகோதரர்கள் கண்ட கனவு ஒருநாள் பலித்தது.
வடகரோலினா மாகாணத்தில் கிட்டிஹா என்ற இடத்தில் 1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தாங்கள் வடிவமைத்த சிறிய கிளைடர் விமானத்தில் பறந்து காட்டினார்கள். நம்பிக்கை ஜெயித்தது. முடியாது என்ற சொல் தலைகுனிந்தது.
இன்று நாம் நினைத்த மாத்திரத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானத்தில் பறந்து செல்ல முடிகிறது. இதற்குக் காரணம் ரைட் சகோதரர்களின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையுமே. நீங்களும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள். வெற்றி உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.