மேடையில் சிலர் சரளமாக பேசுவார்கள். அவர்கள் பேச்சில் அனைவரையும் கவரும் ஒரு விஷயத்தை கவனித்துப் பாருங்கள். அப்படி அனைவரையும் கவர்ந்த பேச்சு உடனடியாக வந்ததாக இருக்க வாய்ப்பே இல்லை. அந்த பேச்சுக்கள் அனைத்தும் எழுதி தயாரிக்கப்பட்டு ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார்த்து பின்பு பேசிய பேச்சாகத்தான் இருக்கும்.
ஒருவரை எவ்வளவு பெரிய பேச்சாளராக இருந்தாலும் சரி அவரை மேடை ஏற்றி ஒரு தலைப்பை கொடுத்து பேச சொல்லுங்களேன் நிச்சயமாக அதில் ஒரு தடுமாற்றம் இருக்கும். ஆனால் என்ன உரையாற்ற வேண்டும் என்பதை முன்கூட்டியே அவரிடம் சொல்லிப் பாருங்களேன், அதற்கு அவர் தயார்படுத்திக் கொண்டு வந்திருப்பார். அந்த பேச்சு நிச்சயம் ஒரு வெற்றி பேச்சாகத்தான் இருக்கும். எதிலும் ஒரு முன் ஏற்பாடு இருந்தால் மட்டுமே அந்த காரியம் வெற்றி பெறும் என்பதற்கு கீழே ஒரு சின்ன கதை உதாரணம்.
புகழ்பெற்ற பேச்சாளரான வெப்ஸ்டரை ஒருசமயம் ஹார்வார்டைச் சேர்ந்த சங்கத்தினர் சொற்பொழிவு ஆற்ற அழைத்திருந்தனர். அன்று அவர் பேசியது திடீரெனப் பேசியது என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் வெப்ஸ்டர் பேசி முடித்துவிட்டுச் செல்லும்போது தான் கொண்டு வந்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அதனைப் பார்த்தபோது அவர் அந்தச் சொற்பொழிவைப் பல நாட்களுக்கு முன்பே தயாரித்திருந்தது தெரியவந்தது. எவ்வளவு சிறந்த பேச்சாளராக இருந்தாலும் தயாரிப்பு முக்கியம் என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்.
ஒருசமயம் அமெரிக்க காங்கிரசின் மசோதா ஒன்றைப் பற்றித் தன் கருத்தைக் கூறுமாறு பலரும் வலியுறுத் தினார்கள். வெப்ஸ்டர் அவர்களிடம் "நான் இதுபற்றிக் கருத்தைக் கூற முடியாது. காரணம், இந்த விஷயத்தைப் பற்றி நான் ஆலோசனை செய்து, அதன் பிறகு எனக்குத் தெளிவு ஏற்பட்டுவிட்டால் உங்களிடம் பேசுகிறேன்" என்று கூறிச் சென்று விட்டாராம்.
ஆக, சிறந்த தயாரிப்பு சிறந்த செயலைக் கொண்டுவரும். கிடைக்கும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு செல்ல முடியாது. மாறாக, அந்த வாய்ப்புத் தந்தவர்கள் நம்மிடம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நாம் மதிப்பளித்து அந்த வாய்ப்பு மூலம் மற்றொரு வாய்ப்புக்கும் அடிகோலிட வேண்டும், அதற்காக நாம் உழைக்க வேண்டும்.
"பேசிய பிறகு வருந்துவதைவிட, பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது மிகவும் நல்லது".