நேர்மையாக இருப்பது மிகவும் நல்ல குணம்தான். ஆனால், எல்லா சமயங்களிலும் ஒருவரால் நேர்மையாக இருந்துவிட முடியுமா? அவ்வாறு இருப்பதால், ஒருவருக்கு என்ன பலன் கிடைத்துவிடும். இதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்க்கலாம்.
ஒரு ஊரில் ஒரு வியாபாரி தன் தேவைக்காக ஒட்டகம் ஒன்று வாங்க சந்தைக்கு போகிறார். ஒருவழியாக ஒட்டக வியாபாரியிடம் பேரம்பேசி தரமான ஒட்டகம் ஒன்றை நல்ல விலைக்கு வாங்கி வருகிறார்.
அந்த ஒட்டகத்தை வாங்கி வீட்டிற்கு வந்ததும், ஒட்டகத்தின் மீது பொருத்தியிருந்த சீட்டை கழட்டுகிறார். ஆனால், அவரால் அதை கழட்ட முடியவில்லை. எனவே, அங்கிருந்த வேலையாளை அழைத்து அந்த சீட்டை கழட்டும்படி கூறுகிறார். வேலையாள் அதைப்பிடித்து ஒரு இழு இழுக்க அது பொத்தென்று கழன்று கீழே விழுகிறது.
அப்போது அதிலிருந்து பை ஒன்றும் விழுகிறது. அதை எடுத்து வியாபாரி திறந்துப் பார்த்தால், உள்ளே நிறைய விலையுயர்ந்த ரத்தினக்கற்கள் இருக்கின்றன.
இதைப்பார்த்த வேலையாள், ‘ஐயா! இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இது கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு’ என்று கூறுகிறான்.
ஆனால், வியாபாரி அதை எடுத்துக்கொண்டு ஒட்டக வியாபாரியிடமே செல்கிறார். அவரிடம் பையைக் கொடுத்துவிட்டு, ‘ஒட்டகத்தின் சீட்டிற்குக் கீழ் இது இருந்தது. இதில் இருக்கும் கற்கள் சரியாக இருக்கிறதா? என்று எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார். அவரும் எண்ணிப்பார்த்துவிட்டு, 'உங்கள் நேர்மைக்கு பரிசாய் இதிலிருந்து சிலக்கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்.
அதற்கு வியாபாரி சிரித்துக்கொண்டே சொல்கிறார், ‘உங்களிடம் இந்தப் பையைக் கொடுக்கும் முன்பே நான் இரண்டு விலையுயர்ந்த ரத்தினக்கற்களை எடுத்துவைத்துக்கொண்டேன்’ என்று கூறுகிறார்.
ஒட்டக வியாபாரி அந்த கற்களை மறுபடியும் எண்ணிப்பார்த்துவிட்டு, ‘இதில் ஏதும் குறையவிலையே?’ என்று கேட்கிறார். அதற்கு அந்த வியாபாரி சொல்கிறார், ‘அந்த இரண்டு ரத்தினங்கள் என் நேர்மையும், சுயமரியாதையும்’ என்று கம்பீரமாக சொல்கிறார்.
இந்த கதையில் வந்ததுபோல, நாம் நேர்மையாக வாழ்வது பெரிதில்லை. ஆனால், தவறு செய்வதற்கான சந்தர்ப்பம் அமைந்தும் நேர்மையாக வாழவேண்டும் என்று நினைப்பதே உண்மையிலேயே சிறந்த குணமாகும்.