அறிவு நமக்கு அதிகாரத்தை பெற்று தருகிறது. ஆனால், நம்முடைய குணமே நமக்கு மரியாதையை பெற்று தரும். நாம் மற்றவர்களிடம் நடந்துக் கொள்ளும் விதமே நம்முடைய குணத்தை உலகிற்கு உரக்க சொல்கிறது. எனவே, சிறியவர்களோ, பெரியவர்களோ, பணக்காரர்களோ,ஏழையோ எந்த பாகுபாடும் இன்றி அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துக் கொள்வது அவசியமாகும். இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு நாள் மரத்தடியின் நிழலில் கண் தெரியாத பெரியவர் ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர், 'யோவ் கிழவா! இந்த வழியாக யாராவது போனதைப் பார்த்தாயா? என்று மரியாதை இல்லாமல் கேட்டார். இதைக் கேட்ட வயதானவர், 'இல்லையப்பா! அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை' என்று கூறினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு இன்னொரு நபர் வந்து, 'ஐயா! இந்த வழியாக யாராவது போனதைப் பார்த்தீர்களா?' என்று கேட்டார். அதற்கு அந்த பெரியவரும், ‘ஆமாம் ஐயா! இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டு ஒரு நபர் இதற்கு முன் சென்றார்' என்று கூறினார்.
கடைசியாக ஒரு நபர் வந்து, 'பெரியவரே வணக்கம்! இதற்கு முன் இந்த வழியாக யாராவது சென்றார்களா?' என்று பணிவோடு கேட்டார். இதைக் கேட்ட பெரியவர், 'மன்னா! முதலில் ஒரு இளைஞர் சென்றார், பின்பு ஒரு அமைச்சர் சென்றார். இரண்டு பேருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைதான் கேட்டுக்கொண்டே சென்றார்கள்' என்று கூறினார். இதைக் கேட்ட மன்னருக்கு ஆச்சர்யம். 'உங்களுக்குதான் கண் தெரியாதே நான் மன்னன்தான் என்பதை எப்படி சரியாக கண்டுப்பிடித்தீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அந்த பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா?
ஒருவர் பேசுவதை வைத்தே அவருடைய தகுதி என்னவென்பதை தெரிந்துக் கொள்ளலாம். முதலில் வந்த நபரிடம் மரியாதையின்மையும், இரண்டாவதாக வந்த நபரிடம் அதிகாரமும், மூன்றாவதாக வந்த உங்களின் பேச்சில் பணிவும் தெரிந்தது. அதை வைத்துதான் நீங்கள் ஒரு மன்னராக இருப்பீர்கள் என்று தெரிந்துக் கொண்டேன் என்று கூறினார்.
இந்தக் கதையில் சொன்னதுபோலதான். நாம் பண்ணும் செயலும், பேசும் பேச்சும்தான் நாம் யார் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறது. இதை தெளிவாக புரிந்துக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம். முயற்சித்துப் பாருங்கள்.