என்றும் நன்றே செய்க. அதையும் இன்றே, இப்போதே செய்யுங்கள். தயங்காதீர்கள். தள்ளிப் போடாதீர்கள். எதையும் ஒத்தி வைக்காதீர்கள். அதற்காக அவசரப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆராய்ந்து செய்திட நினைத்த நல்ல செயல்களைப் பிறகு பார்ப்போம் என காலம் தாழ்த்திடவோ அதனை செய்திட பயமோ கூடாது என்பதுதான் நலமான வாழ்வுக்கு வழியாகும்.
நல்லவை செய்ய முதலில் நல்ல எண்ணங்கள் வேண்டும். நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனித மனம் சபலம் நிறைந்தது. தீயவையால் சலனம், சபலம் எழும். அதனைத் தடுக்கும் பாலமே நல்ல சிந்தனை. அணையிட்டு மனதின் பாதையை நல்வழியில் குறிப்பிட வேண்டும்.
நாம் நமது எண்ணங்கள் மீது கவனம் வைக்க வேண்டும். கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள் - இது ஸ்ரீ அன்னையின் வாக்கு.
எண்ணத்தில் தூய்மை இருந்தால் மட்டுமே செயலில் தூய்மை வர முடியும். எல்லா தவறுகளுக்கும் நம் தீய எண்ணமே காரணம். இதனால்தான் கெட்ட எண்ணம் மிகவும் ஆபத்தான திருடன் என்கிறார் ஸ்ரீ அன்னை. மனதில் தோன்றும் கெட்ட எண்ணங்களை தயவு செய்து அலங்கரிக்காதீர்கள். இதனால் என்ன? யார் அப்படியில்லை? என்று கேட்டு போலி சமாதானம் செய்து கொள்ளாதீர்கள். கூடாது! இது தவறு. என உங்கள் மனதுக்கு நீங்களே சொல்லுங்கள்.இரவில் தனிமையில் மனதோடு பேசுங்கள். மனதை அடக்க - மாற்றி திசை திருப்பி, எச்சரித்து தீயவை விளக்கி நல்லது செய்திட நினையுங்கள்.
பிறருக்கு நன்மை செய்ய மனதில் அன்பு வேண்டும். சுயநலம் இல்லாத அன்பு வேண்டும். பிறரை நேசிக்க தெரிய வேண்டும். பிறரை மன்னிக்கவும் வேண்டும். பிறர் செய்த தீமையை அன்றே மறக்க வேண்டும் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை கோபம் விலக்கல் என்ற பண்பட்ட மனதில்தான் நல்ல எண்ணம் தோன்றும். அந்த நல்ல எண்ணமே நல்லது செய் என நம்மை தூண்டும். மனதில் கெட்ட எண்ணம் புகுந்தால் தீமை செய் எனத் தூண்டும்.
அன்பே வாழ்க்கை .அன்பே கருணை கருணையே அருளுக்கு அடிப்படை. 'அன்பின் வழியது உயிர்நிலை' என்பது வள்ளுவரின் நலமான சிந்தனை. அன்பு குறித்த இந்த சிந்தனையை நம் மனதில் பதிய வைக்க வேண்டும். பார்க்கும் பார்வையிலும் பேசும் சொல்லிலும் அன்பு வெளிப்பட வேண்டும்.
பிறருக்கு நன்மை செய்தே வாழ வேண்டும். அதுதான் இனிய வாழ்வு. நலமான வாழ்வு. மகிழ்வான வாழ்வு. வளமான வாழ்வும் அதுதான்.