எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் சிலருக்கு உண்டு. அவர்களால் மற்றவர்கள் செய்யக்கூடிய ஒரு சின்ன தவறைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது, மன்னிக்கவும் முடியாது. கோபம் தலைக்கு ஏறி பட்டாசு போல படபடவென்று வெடித்து தள்ளி விடுவார்கள். பிறகு சற்று நேரம் கழித்து அமைதியான பிறகு, கோபப்பட்டதை நினைத்து வருத்தப்படுவார்கள். இதுபோன்று நீங்களும் இருக்கிறீர்களா? அப்போ இந்த கதையை படியுங்கள்.
ஒரு துறவு எதற்குமே கோபப்படாமல் இருந்தாராம். அவர் யார் என்ன கூறினாலும், அவமானப்படுத்தினாலும் கோபப்படாமல் இருப்பாராம். இதை பார்த்தவர்களுக்கு ஒரே குழப்பம். எப்படி என்ன நடந்தாலும், இவருக்கு கோபமே வருவதில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. அதை பற்றி ஒருநாள் அந்த துறவியிடமே கேட்டுவிட்டனர்.
அதற்கு அந்த துறவி கூறியது, ஒருமுறை ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்துக் கொண்டிருந்தேன். அப்படி ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது நான் அமர்ந்து இருந்த படகை வந்து ஒரு படகு முட்டியது. இதனால் கடும்கோபத்துடன் யார் நாம் அமர்ந்திருக்கும் படகை முட்டியது என்று பார்த்தால், அது ஒரு வெற்றுப்படகு காற்றுக்கு அசைந்து வந்து மோதியிருக்கிறது. அப்போதுதான் புரிந்தது என்னுடைய கோபத்தை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயனிருக்கப்போகிறது.
யாராவது என்னிடம் கோபப்படும் போதும் எனக்கு அந்த வெற்றுப்படகுதான் நியாபகத்திற்கு வரும். இவர்களும் அதுபோலவே ஒரு வெற்றுப்படகுதான் என்று எண்ணி கோபப்படாமல் நகர்ந்து சென்றுவிடுவேன் என்று கூறினாராம்.
இதுபோல்தான் நம் வாழ்க்கையிலும் நம்மை யாரேனும் கோபப்படுத்தினாலும் சரி, இல்லை நம்மிடம் யாரும் கோபப்பட்டாலும் சரி அவர்களையும் காலிப்படகாகவே எண்ணி அமைதியாக வந்துவிடுங்கள். அதுவே கோபத்தை கட்டுப்படுத்தி நம் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கான வழியாகும்.
கோபப்படுவது என்பது நம்மை அழிப்பது மட்டுமின்றி நம்மை சுற்றியிருப்போருடனான நல்லுறவையும் அழித்துவிடும். எனவே முடிந்த அளவு கோபப்படுவதை கட்டுப்படுத்தி அனைவரிடமும் புன்முருவல் பூத்த முகத்துடன் இருப்பது, நம்மை சுற்றி நல்ல பாசிட்டிவ்வான சூழலை உருவாக்கும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.